செவ்வாய், 14 ஜூன், 2011

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது எம்.வி. ஸ்கோடியா பிரின்ஸ் கப்பல்!

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவை சுமார் 20 வருடங்களின் பின்னர் நேற்று அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது. இதையடுத்து தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து புறப்பட்டுள்ள எம்.வி. ஸ்கோடியா பிரின்ஸ் என்ற பயணிகள் கப்பல் இன்று காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.

தூத்துக்குடியில் இடம்பெற்ற கப்பல் சேவையை ஆரம்பிக்கும் நிகழ்வில் இந்திய கப்பல் துறை அமைச்சர் ஜி.கே. வாசன் கொடி அசைத்து இக்கப்பலின் பயணத்தை ஆரம்பித்து வைத்தார். நேற்று மாலை 5.00 மணியளவில் தூத்துக்குடி வ.உ. சிதம்பரநாத் துறைமுகத்திலிருந்து பயணத்தை ஆரம்பித்த எம்.வி. ஸ்கோடியா பிரின்ஸ் சொகுசு கப்பலானது இன்று காலை 8.00 மணியளவில் கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்தது.
கன்னிப் பயணத்தின்போது நல்லெண்ணத் தூதுவர்களாக துறைமுக அதிகாரிகள், தொழிலதிபர்கள் உள்ளிட்ட 80 பேரும் மேலும் 121 சுற்றுலாப் பயணிகளும் இக்கப்பலில் கொழும்பு வருகின்றனர். இந்தகம கப்பலை துறைமுகங்கள் பிரதியமைச்சர் ரோஹித்த அபேகுணவர்தன தலைமையிலான குழுவினர் இன்று கொழும்புத் துறைமுகத்தில் வரவேற்றனர்.
இன்று மாலை இக்கப்பல் கொழும்பிலிருந்து தூத்துக்குடிக்கான தனது முதலாவது பயணத்தை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இனிவரும் காலங்களில் வாரத்தில் புதன், ஞாயிற்றுக்கிழமைகளில் தூத்துக்குடியிலிருந்தும் திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் கொழும்பிலிருந்தும் எம்.பி. ஸ்கோடியா பிரின்ஸ் கப்பலானது பயணிகள் சேவையை வழங்கும்.
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் பயணிகள் கப்பல் சேவையை மீண்டும் ஆரம்பிப்பதற்கான ஒப்பந்தம் கடந்த ஜனவரி மாதம் 1 ஆம் திகதி கொழும்பில் கைச்சாத்திடப்பட்டது. இதற்கமைவாகவே இக் கப்பல் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து கொழும்பு துறைமுகத்துக்கு 14 மணித்தியாலயங்கள் பயணிக்கும் இக்கப்பல், 9 தளங்களைக் கொண்டுள்ளதுடன் அதில் சுமார் 1200 பயணிகள் பயணம் செய்ய முடியும். ஒவ்வொரு பயணியும் 100 கிலோ கிராம் நிறைகொண்ட பயணப் பொதிகளை தம்முடன் எடுத்துச் செல்லலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பயணியொருவர் வழமையான முறைப்படி விசாவினைப் பெற்றுக்கொள்வதுடன் கப்பல் புறப்படுவதற்கு சுமார் 4 மணித்தியாலங்களுக்கு முன்னர் துறைமுகத்துக்கு வருகை தரவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: