திங்கள், 13 ஜூன், 2011

ஈழத் தமிழர் பிரச்னையில் கபட நாடகமா? கலைஞர் ஆவேசம்


"ஈழத் தமிழர் பிரச்னையில் நான் எடுத்த முயற்சிகளை எல்லாம் கேலிக்கூத்து, கபட நாடகம் என கீழ்த்தர விமர்சனம் செய்கின்றனர்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

தி.மு.க., தலைவர் கருணாநிதி வெளியிட்ட அறிக்கை:

தி.மு.க., பொறுப்பில் இருந்தபோது, இலங்கைத் தமிழர்களுக்காக அனைத்து கட்சி கூட்டம், சட்டசபை கட்சித் தலைவர்கள் கூட்டம்,பிரதமருக்கு தந்தி, பார்லிமென்ட் எம்.பி.,க்கள் ராஜினாமா அறிவிப்பு போன்றவற்றை, நான் நடத்தியநாடகங்கள் என, முதல்வர்ஜெயலலிதா சட்டசபையில் கூறியுள்ளார். நான் எதைச் செய்தாலும், அதை, "கபடநாடகம்' என அறிக்கை விடுவது அவரது வாடிக்கை.இலங்கைத் தமிழர்களுக்காக, காலை 6 மணிக்கெல்லாம் வீட்டாரிடம் சொல்லாமல், அண்ணாதுரை நினைவிடத்திற்கு சென்றுஉண்ணாவிரதம் தொடங்கினேன். ஆனால், காலை சிற்றுண்டியைவீட்டில் முடித்து விட்டு, தலைமைச் செயலகம் செல்லும் வழியில்உண்ணாவிரதம் இருக்கச் சென்றேன் என, முதல்வர் கூறுகிறார். நான் உண்ணாவிரதம் இருந்தால், "கேலிக் கூத்து'; அவர் உண்ணாவிரதம் இருந்தால் அது, "அன்னா ஹசாரே' நடத்தும் உண்ணாவிரதம் போன்றதா?

சிதம்பரத்தில் 1956ம் ஆண்டு நடந்த தி.மு.க., பொதுக்குழுவில், அண்ணா முன்னிலையில் இலங்கைத் தமிழர்களுக்கான தீர்மானத்தை முன்மொழிந்தவனே நான் தான். இப்படி தொடர்ந்து சொல்லிக் கொண்டே போகலாம்.இலங்கைத் தமிழர்களுக்காக தற்போது சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ள ஜெயலலிதா, 1997ல் தி.மு.க., ஆட்சியில் இருந்தபோது, "விடுதலைப் புலிகள் தமிழகத்தில் மீண்டும் தலைதூக்கி விட்டனர்' என்று அறிக்கை விட்டதை மறக்க முடியுமா? கடந்த 2008 தி.மு.க., ஆட்சியில் "இலங்கையில் அமைதி ஏற்பட பயனுள்ள பேச்சு வார்த்தைகளுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்' என, சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றினோம்.

இலங்கை தமிழர்களுக்காக, தமிழகத்தில் பொதுக்கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடந்தபோது, "இலங்கை தமிழர்களை கொல்ல வேண்டுமென்று இலங்கை ராணுவம் எண்ணவில்லை' என்று அறிக்கை விட்டவர் ஜெயலலிதா. இலங்கையில், தமிழ் இனப் படுகொலையைக் கண்டித்து போர் நிறுத்தம் அறிவிக்க வேண்டுமென, அனைத்து கட்சி கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றிய போது, "இலங்கையில் தற்போது நடக்கும் உள்நாட்டு போரை நிறுத்த மத்திய அரசுக்கு அதிகாரம் இல்லை' என்று கூறியவர், தற்போது நடத்துவது தான் கேலிக்கூத்தே தவிர, நான் எந்த காலத்திலும் கேலிக்கூத்தாடியவன் இல்லை; இதை இலங்கைத் தமிழர்களும் நன்கு அறிவர். உலகம் முழுதும்இருக்கும் தமிழர்களும் நன்கு உணர்வர்.இவ்வாறு கருணாநிதிகூறினார்.

கருத்துகள் இல்லை: