திங்கள், 13 ஜூன், 2011

பெற்றோரே என்ஜினீயரை கூலிப்படையை ஏவி கொலை செய்துள்ளனர்.


எனது பெற்றோருக்கு தண்டனை வாங்கி தரும்வரை
நான் ஓய மாட்டேன் ; சரண்யா

சென்னை சிந்தாதிரிப் பேட்டையை சேர்ந்த என்ஜினீயர் பார்த்தசாரதி கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மகளின் காதல் திருமணத்தை பொறுத்துக் கொள்ள முடியாமல் பெண்ணின் பெற்றோரே என்ஜினீயரை கூலிப்படையை ஏவி கொலை செய்துள்ளனர். இது தொடர்பாக என்ஜினீயர் பார்த்தசாரதியின் மனைவி சரண்யா,

’’நான் பார்த்தசாரதியை காதலித்தது தொடக்கத்தில் இருந்தே எனது பெற்றோருக்கு பிடிக்க வில்லை. எங்களது காதல் விவகாரம் தெரிய வந்ததும் எனது தந்தை நரசிம்மன் என்னை கழுத்தை நெரித்து கொலை செய்வதற்கு முயற்சி செய்தார். ஆனால் இந்த அளவுக்கு கொலை வெறியுடன் அவர் நடந்து கொள்வார் என்று நான் கனவில் கூடநினைக்க வில்லை.

பெற்ற மகள் விதவையாகி விடுவாளே என்று கூட நினைக்காமல் கூலிப் படையை ஏவி எனது கணவரை கொன்றுள்ளார். என்னை பெற்றார்களா? அல்லது வெளியில் எங்காவது தூக்கி வந்து வளர்த்தார்களா? என்ற சந்தேகம் எனக்கு ஏற்பட்டுள்ளது.

எங்களது வீட்டை பொறுத்த வரை எனது தாயாரின் ஆதிக்கம் தான் அதிகம். அவருக்கு தெரியாமல் எந்த காரியத்தையும் எனது தந்தை செய்யமாட்டார். எனது தாயாரின் தூண்டுதலின் பேரிலேயே தந்தை செயல்பட்டிருக்க வேண்டும். எனவே கணவரின் கொலை வழக்கில் எனது தாயாரையும் சேர்க்க வேண்டும். தவறு செய்வதை விட தவறு செய்ய தூண்டுவது தான் பெரிய குற்றமாகும்.

கூலிப்படையினருக்கு 5 லட்ச ரூபாய் பணம் கொடுத்துள்ளனர். நிச்சயம் எனது தாய்க்கு தெரியாமல் இந்த பணத்தை எனது தந்தை கொடுத்திருக்க முடியாது. தற்போது போலீஸ் பிடியில் இருக்கும் எனது தந்தை சிறையில் இருந்து வெளிவந்த பின்னர் என்னையும், எனது மாமனாரையும் (பார்த்த சாரதியின் தந்தை) கொலை செய்யக் கூட துணியலாம். அவரால் எங்களது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.

எனது தந்தை குடிநீர் வாரியத்தில் என்ஜினீயர். தாயார் ஆசிரியை. இருவரும் மாதம் 30 ஆயிரம் ரூபாய் அளவுக்கு தான் சம்பளம் வாங்கி வந்தனர். ஆனால் இன்று சென்னையில் மட்டும் 5 வீடுகள் உள்ளன.

சொந்த ஊரான அரக்கோணத்திலும் சொத்துக்கள் இருக்கிறது. இருவரும் வாங்கிய சம்பளத்தை மட்டும் வைத்து இதையெல்லாம் சம்பாதித்து இருக்க முடியாது. தவறான வழியில்தான் இந்த இந்த சொத்துக்களை எனது தந்தை சம்பாதித்துள்ளார். அளவுக்கு அதிகமாக சொத்து குவித்தது தொடர்பாக ஏற்கனவே அவருக்கு ஒருமுறை பிரச்சினை ஏற்பட்டது. ஆனால் அப்போது அவர் தப்பி விட்டார்.

தவறான வழியில் சேர்த்த பணத்தை வைத்துதான் எனது கணவரை தீர்த்துக் கட்டி உள்ளனர். எனவே அவர்களது சொத்துக்கள் அனைத்தையும் பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும். இது தொடர்பாக உரிய முறையில் விசாரணை நடத்த வேண்டும். எனது கணவர் வீட்டுக்கு ஒரே மகன். எனது மாமனார் அவரைத்தான் நம்பி இருந்தார். இனி எனது கணவரின் ஸ்தானத்தில் இருந்து அவரை பார்த்துக் கொள்வது எனது கடமை. இன்னும் ஓராண்டு மருத்துவ படிப்பை முடித்த பின்னர் ஐ.ஏ.எஸ். படிக்க விரும்புகிறேன். நான் கலெக்டராக வேண்டும் என்பது எனது கணவரின் ஆசை.

கணவரின் குடும்பத்தினர் என்னை அவர்கள் வீட்டு பிள்ளை போல் பார்த்துக் கொள்கிறார்கள். எனது கணவர் காணாமல் போன அன்று சிந்தாதிரிப் பேட்டை போலீஸ் நிலையத்தில் நான் புகார் செய்தேன். அதில் எனது பெற்றோர்தான் கணவரை கடத்திருக்க வேண்டும் என்று கூறி இருந்தேன். ஆனால் போலீசார் சரியாக விசாரணை நடத்தவில்லை. நான் புகார் கொடுத்த உடனேயே எனது தந்தையை பிடித்து விசாரிக்க வேண்டிய விதத்தில் விசாரித்து இருந்தால் ஒருவேளை எனது கணவரை காப்பாற்றி இருக்கலாம்.

என் கணவருக்கு கெட்ட பழக்கங்கள் ஏதும் உண்டா? வேறு ஏதேனும் அவருக்கு தொடர்புகள் உண்டா என்பது பற்றியே போலீசார் என்னிடம் விசாரித்தனர். நான் கூறிய எதையும் அவர்கள் கேட்கவில்லை. எனது கணவரின் கொலை வழக்கில் எனது பெற்றோருக்கு தண்டனை வாங்கி தரும்வரை நான் ஓய மாட்டேன்’’ என்று கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை: