செவ்வாய், 14 ஜூன், 2011

கேரளாவில் மாட்டிகொண்ட 13 அகதிகள் வாலஜா முகாமுக்கு கொண்டுவரப்பட்டனர்

13 இலங்கை அகதிகள்  வாலாஜா முகாமுக்கு வருகை

ஆஸ்திரேலியாவுக்கு தப்பமுயன்று கேரளாவில் பிடிபட்ட இலங்கை அகதிகள் 13 பேர் வாலாஜாவில் உள்ள முகாமில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டனர். கேரளா மாநிலம் எர்ணாகுளத்தில் உள்ள ஒரு லாட்ஜில் இலங்கை அகதிகள் தங்கியிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன் பேரில் கடந்த 7ம் தேதியன்று கொச்சி போலீசார் அந்த லாட்ஜில் சோதனை நடத்தினர். அப்போது அங்கிருந்த 13 பேரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், அவர்கள் வேலூர் மாவட்டம் வாலாஜாவில் உள்ள பாலாறு அணைக்கட்டு, மண்டபம், திருச்சி, மதுரை உள்ளிட்ட இலங்கை அகதிகள் முகாம்களில் இருந்து கடந்த 3ம் தேதி வெளியேறியதாகவும், இவர்கள் அனைவரும் கேரளாவில் உள்ள கொச்சி கடற்கரை பகுதியில் ஒரு படகை விலைக்கு வாங்கி அங்கிருந்து ஆஸ்திரேலியாவுக்கு தப்ப முயன்றுள்ளனர்.
இவர்களில் வேலூர் மாவட்டம் வாலாஜா பாலாறு அணைக்கட்டு முகாமை சேர்ந்த காந்தன்(23), ஈழவேந்தன்(22) மற்ற முகாம்களை சேர்ந்த ஜனார்த்(27), லோகேஸ்வரன்(28), கஜேந்திரன்(30), தனசங்கர்(19), நிசாந்தன்(21), கருணாகரன்(42), பாலசுப்ரமணியம்(34), அருள்செல்வி(42), வினை குலம்(30), ரத்திசீலன் (9), கதிர்சீலன்(6) என்பது தெரியவந்தது. பிடிபட்ட 13 பேரும் நேற்று தனி போலீஸ் வேனில் தமிழகம் கொண்டு வரப்பட்டனர். இவர்கள் அனைவரும் நேற்றிரவு வாலாஜா பாலாறு அணைக்கட்டு அகதிகள் முகாமில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டனர்.

இன்று சென்னை சேத்துப்பட்டில் உள்ள இலங்கை அகதிகள் மறுவாழ்வு ஆணையர் அலுவலத்தில் ஒப்படைக்கப்பட உள்ளனர். அவர்க ளிடம் எதற்காக முகாமில் இருந்து தப்பினார்கள்?, யார் உதவி செய்தார்கள்? என விசாரணை நடத்தப்படும். பின்னர் அவர்களை எங்கு தங்க வைப்பது என்பது குறித்து மறுவாழ்வு ஆணையர் முடிவு செய்வார் என தெரிகிறது.

கருத்துகள் இல்லை: