வியாழன், 16 ஜூன், 2011

கச்சத்தீவு முடிந்த பிரச்சினை - இணைந்து செயல்பட இலங்கை அரசு அனைத்து


இலங்கைத் தமிழர் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண தமிழக முதல்வருடன் இணைந்து செயல்பட விரும்புவதாக டில்லியில் உள்ள இலங்கைத் தூதர் பிரசாத் காரியவசம் நேற்று தெரிவித்தார் என இந்திய ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

இலங்கைத் தமிழர்கள் தங்களது வசிப்பிடங்களுக்கு மீண்டும் குடியேறுவதற்கான பணிகள் திருப்திகரமான முறையில் நடைபெறவில்லை என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா டில்லியில் நிருபர்களிடம் கூறியிருந்தார்.

அதுதொடர்பாக இந்திய நிரூபர் ஒருவர் இலங்கைத் தூதரிடம் கேட்டதற்கு, இலங்கைத் தமிழர் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில் தமிழக முதல்வருடன் இணைந்து செயல்பட இலங்கை அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டுவருகிறது, என்றார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்: தமிழக முதல்வர், தமிழக மக்கள் ஆகியோருடன் உள்ள நல்லெண்ணத்தையும் நம்பிக்கையையும் வலுப்படுத்தும் விதத்தில் நல்ல உறவை வைத்துக் கொள்ள இலங்கை அரசு ஆர்வத்துடன் இருக்கிறது. பிரதமர் மன்மோகன் சிங்கை தமிழக முதல்வர் சந்தித்தபோது இலங்கைத் தமிழர் பிரச்னை குறித்து தெரிவித்த கவலைகளை நீக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.

இந்தியா - இலங்கை நாடுகளுக்கு இடையேயான நல்லுறவு மிக நெருக்கமானது. சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தது. அதன் அடிப்படையில் பிரச்னைகளுக்குத் தீர்வு காண இரு தரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இரு நாடுகளுக்கும் இடையிலான தமிழர் பிரச்னைக்குத் தீர்வு காண வரும் காலங்களில் தமிழக முதல்வருடன் இணைந்து செயல்படுவோம்.

கச்சத்தீவு பிரச்னை இரு நாடுகளுக்கும் இடையில் இறுதி செய்யப்பட்ட பிரச்சினை ஆகும். இறுதி செய்யப்பட்டுவிட்ட இப்பிரச்னை குறித்து கருத்துத் தெரிவிக்க விரும்பவில்லை. இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு இணையம் மூலம் விசா வழங்க விரைவில் ஏற்பாடு செய்யப்படும். என்றார்

கருத்துகள் இல்லை: