ஞாயிறு, 27 ஜூன், 2010

குண்டு வெடிப்பு சதியின் பின்னணியில் புது அமைப்பு? தமிழ் தீவிரவாத குழுக்கள் சதியா என போலீஸ் விசாரணை

குண்டு வெடிப்பு சதியின் பின்னணியில் புது அமைப்பு? தமிழ் தீவிரவாத குழுக்கள் சதியா என போலீஸ் விசாரணை
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே ரயிலை கவிழ்க்க நடந்த சதியில், தடை செய்யப்பட்ட அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் ஒருங்கிணைந்து, புதிய பெயரில் அமைப்பு துவக்கி, சதிச் செயலில் ஈடுபட்டனரா? என்ற சந்தேகத்தின் அடிப்படையில், போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தமிழகத்தில் நக்சல் மற்றும் தமிழ்த் தீவிரவாத அமைப்புகளின் செயல்பாடுகள் அறவே களையப்பட்டு விட்டதாகக் கருதி வந்த, மாநில உளவுத்துறையின் கணிப்பை, சித்தணி ரயில் தண்டவாள குண்டு வெடிப்பு சம்பவம் தவிடுபொடியாக்கியுள்ளது.சதி வேலையை, விடுதலைப்புலி ஆதரவு தனிநபர்கள் நிகழ்த்தியிருப்பதற்கான வாய்ப்பு மிகக் குறைவு. குண்டு வெடிப்பு திட்டத்தை நிறைவேற்ற வெடிபொருட்கள் சேகரிக்கப்பட்டிருக்கின்றன; அதன் மூலம், சக்தி வாய்ந்த குண்டு தயாரிக்கப்பட்டுள்ளது; சற்று தொலைவில் இருந்து, மின் ஒயர் மூலமாக குண்டு வெடிப்பு நிகழ்த்தப்பட்டிருப்பதை இதற்கு காரணமாகச் சொல்கின்றனர். நான்கு அல்லது ஐந்து பேர் கொண்ட குழுவினர், கூட்டாக நாசவேலையில் ஈடுபட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.டி.என்.எல்.ஏ., தொடர்பு? கடந்த 1980களில் டி.என்.எல்.ஏ., (தமிழ் தேசிய விடுதலைப் படை) என்ற தமிழ்த் தீவிரவாத அமைப்பினர் கடலூர், விழுப்புரம், அரியலூர், திருச்சி உள்ளிட்ட இடங்களில் காலூன்றியிருந்தனர்.
இவர்களது லட்சியம், ஆயுதப் போராட்டம் வாயிலாக இந்தியாவில் இருந்து தமிழகத்தை தனியே பிரித்து, "தமிழ் தேசிய அரசு' அமைப்பது.இதற்கான ஆயுதப் போராட்டத்துக்கு நிதி சேர்க்கும் திட்டத்துடன், டி.என்.எல்.ஏ., தலைவர் தமிழரசன் உள்ளிட்ட சிலர், வங்கிக் கொள்ளையில் ஈடுபட்ட போது, மக்களால் அடித்துக் கொல்லப்பட்டனர். இச்சம்பவத்துக்கு பின், இந்த அமைப்பு உருக்குலைந்துவிட்டதாக போலீசார் கருதினர். ஆனால், அடுத்த சில ஆண்டுகளில் இந்த அமைப்பு மீண்டும் உயிர் பெற்றது.திருச்சி, குட்டையாண்டி ரயில்வே பாலம் குண்டு வைத்து தகர்க்கப்பட்டது; கடந்த 1987ல் மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயிலை கவிழ்க்க, அரியலூர் தண்டவாளத்தில் குண்டு வெடிப்பு சதி நிகழ்த்தப்பட்டது. உஷாரடைந்த போலீசார், டி.என்.எல்.ஏ.,வின் முக்கிய நபர்களை கைது செய்தனர். இந்த அமைப்பை, தமிழக அரசு பயங்கரவாத அமைப்பாக அறிவித்து தடை செய்தது.
இதேபோன்று, டி.என்.ஆர்.டி., (தமிழ் தேசிய மீட்பு இயக்கம்) என்ற அமைப்பும் தடை செய்யப்பட்டது. மேற்கண்ட இரு அமைப்பினரின் நடவடிக்கையையும், மாநில கியூ பிராஞ்ச் சி.ஐ.டி., போலீசார் கண்காணித்து வந்தனர்.கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்தில் தமிழ்த் தீவிரவாத அமைப்புகளின் பயங்கரவாதச் செயல் நடக்காததால், அமைப்புகளின் மீதான கண்காணிப்பை போலீசார் சற்று தளர்த்திக்கொண்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் தான், விக்கிரவாண்டி, சித்தணியில் ரயில் தண்டவாளம் வெடி வைத்து தகர்க்கப்பட்டுள்ளது.இச்சம்பவம், கடந்த காலங்களில் டி.என்.எல்.ஏ., நிகழ்த்திய சதி வேலைகளுடன் ஒத்துப்போவதால், அந்த அமைப்பின் முன்னாள் உறுப்பினர்களின் சதி வேலையாக இருக்குமோ என்ற சந்தேகம், போலீசாருக்கு ஏற்பட்டுள்ளது.தடை செய்யப்பட்ட அமைப்பினர், புதிய பெயரில் அமைப்பு துவக்கி ஒருங்கிணைந்திருக்கலாம் என்றும் போலீசார் கருதுகின்றனர். இது தொடர்பாக, 10க்கும் மேற்பட்ட சந்தேக நபர்களைப் பிடித்து, கியூ பிராஞ்ச் சி.ஐ.டி., போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீசார் கண்காணிப்பு தீவிரம்: தமிழ்த் தீவிரவாத அமைப்புகள் மற்றும் ஆதரவு அமைப்புகளின் செயல்பாடுகள் குறித்த தகவல்களைத் திரட்டுமாறு, மாநிலம் முழுவதும் பணியாற்றும் உளவுத்துறையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கோவையில் விடுதலைப்புலி ஆதரவாளர்களால், இரு ஆண்டுகளுக்கு முன், "ராணுவ வாகன அணிவகுப்பு' மீது தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாலும், கோவை போலீசாரும் உஷார்படுத்தப்பட்டிருக்கின்றனர். மேலும், வெடி மருந்து குடோன்களை நேரடி ஆய்வு வெடி மருந்து கொள்முதல், விற்பனை, கையிருப்பு அளவை ஆய்வு செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.இதனால், வெடி மருந்து டீலர்கள், சாலைப்பணிக்கு வெடி மருந்து வாங்கும் கான்ட்ராக்டர்கள், பாறை உடைப்பில் ஈடுபடும் கல் குவாரி உரிமையாளர்கள், அவர்களிடம் வேலை செய்யும் ஊழியர்களின் செயல்பாடுகள், ரகசிய கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன.

கருத்துகள் இல்லை: