செவ்வாய், 29 ஜூன், 2010

காதல் கணவன் வீட்டு முன் இளம் பெண் நியாயம்

மேட்டூர் : சேலம் மாவட்டம் மேட்டூரில் காதல் கணவன் வீட்டின் முன் இளம் பெண் போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மேட்டூர் சதுரம்வாடி பகுதியைச் சேர்ந்தவர் தமிழ்வேலன். நகராட்சி அலுவலகத்தில் டிரைவராக இருக்கிறார் . இவரது மகள் புவனேஸ்வரி (20). இவருக்கும் மேட்டூர் பொன் நகர் பகுதியைச் சேர்ந்த கிராம நிர்வாக அதிகாரி , வி.ஏ.ஓ.,மணியின் மகன் பாலமுருகன் என்ற பாலாஜிக்கும் இடையே காதல் ஏற்பட்டது.

எம்.பி.ஏ., பட்டதாரியான பாலாஜி இன்சூரன்ஸ் ஏஜன்டாக பணியாற்றி வருகிறார். இன்சூரன்ஸ் விஷயமாக புவனேஸ்வரியின் வீட்டுக்குச் சென்ற போது இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. காதலர்களாக மாறிய இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். இரு வீட்டாருக்கும் தெரியாமல் கோவிலில் வைத்து தாலி கட்டி திருமணம் செய்து கொண்‌டனர். திருமணத்தைப் பதிவு செய்து கொள்ளலாம் என கோவைக்கு புவனேஸ்வரியை அழைத்துச் சென்றுள்ளார் பாலாஜி. அங்கு ஓட்டலில் அறை எடுத்து இருவரும் தங்கினர். ஆனால் வாக்கு கொடுத்த மாதிரி திருமணத்தை பதிவு செய்யவில்லை. ஏதோ சாக்கு போக்குச் சொல்லி மீண்டும் ‌மேட்டூருக்கே அழைத்து வந்தார். நிலைமை சரியாகும் வரை நீ உன் வீட்டிலேயே இரு. காலம் வரும் போது என் பெற்‌றோர்களிடம் பேசி உன்னை அங்கு அழைத்துச் செல்கிறேன் என கூறியுள்ளார். இருவரும் அவரவர் வீடுகளுக்கு திரும்பினர். இவர்கள் திருமணம் குறித்து புவனேஸ்வரி வீட்டுக்கு தெரிய வந்துள்ளது. புவனேஸ்வரியை அவரது பெற்றோர்கள் பாலாஜியின் வீட்டுக்கே சென்று விடுமாறு வற்புறுத்தியுள்ளனர். பவனேஸ்வரியோ, பாலாஜி வந்து அழைத்துச் செல்வார் என நம்பிக்கையுடன் ‌காத்திருந்தார்.

இந்நிலையில் பாலாஜி , புவனேஸ்வரியிடம் இருந்து விலக ஆரம்பித்திருக்கிறார். இதனால் சந்தேகம் அடைந்த புவனேஸ்வரி , இன்று காலையில் பாலாஜியின் வீட்டிற்கு பெட்டி, படுக்கையுடன் சென்றார். தன்னை ஏற்றுக்கொள்ளுமாறு கூறியுள்ளார். புவனேஸ்வரியை பார்த்தவுடன், பாலாஜியின் பெற்றோர் வீட்டை விட்டு வெளியே சென்று விட்டனர். பாலாஜியிடம் தன்னை ஏற்றுக் கொள்ளுமாறு மன்றாடினார் புவனேஸ்வரி .பாலாஜி அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும் திருமணம் முடிந்ததற்கு என்ன சாட்சி என கேட்டுள்ளார். திகைப்பில் பாலாஜியின் வீட்டு வாசலிலேயே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார் புவனேஸ்வரி . போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

புவனேஸ்வரி வீட்டில் இருந்து வரும் போதை தூக்க மாத்திரை சாப்பிட்டு விட்டு வந்ததாக போலீசாரிடம் கூறினார். இதனையடுத்து அவரை போலீசார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். பெட்டியுடன் காதலன் வீட்டு வாசலில் வந்து இளம் பெண் போராட்டத்தில் ஈடுபட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

கருத்துகள் இல்லை: