ஞாயிறு, 14 ஏப்ரல், 2019

ஊழலில் ஊறிய ஜெயலலிதா. ஒத்து ஊதிய தேர்தல் ஆணையம். லஞ்சத்தில் 2016ல் வெற்றி பெற்ற ஜெயா.


savukkuonline.com :தமிழக வாக்காளர்கள் இது வரை யார் யாருக்கெல்லாம் வாக்களித்திருக்கிறார்கள் என்று யோசித்தால், ஆச்சரியமாக இருக்கும். தேசியக் கட்சிகள் தவிர்த்து திராவிடக் கட்சிகள் வளரும்போது அதன் நோக்கத்தைப் புரிந்து கொண்டு அவர்களை ஜெயிக்க வைத்தவர்கள் தமிழக வாக்காளர்கள். அதன்பின் தங்களுடைய நம்பிக்கையைப் பெற்றவர்களுக்கு மட்டுமே வாக்களித்த வரலாறைக் கொண்டிருப்பவர்கள். இப்படி பல பெருமைகளுக்கு முன்மாதிரி நமது தமிழக வாக்காளர்கள். ஆனால் இன்று வாக்களர்களை அரசியல் கட்சிகள் எப்படி மாற்றியிருக்கிறது என்பதில் தமிழகம் மோசமான முன்மாதிரியாக இருந்து வருகிறது. இது நிச்சயம் நமக்கு தலைகுனிவு தான்.
2016 சட்டப்பேரவைத் தேர்தல் வெற்றிக்குப் பிறகு, ஜெயலலிதா வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து வெளியிட்ட அறிக்கையில் இவ்வாறு கூறினார்.
நடைபெற்று முடிந்த தமிழ்நாடு சட்டசபை பொதுத் தேர்தலில் வியத்தகு வெற்றியைத் தமிழக மக்கள் .தி.மு..வுக்கு வழங்கி உள்ளனர்.

மக்களால் நான், மக்களுக்காகவே நான்என்ற கொள்கையை வழிகாட்டும் தாரக மந்திரமாகக் கொண்டு வாழ்ந்து வரும் உங்கள் அன்புச் சகோதரியாகிய எனக்கு, நீங்கள் வழங்கி வரும் இணையில்லா அன்பிற்கும், பேராதரவிற்கும் நன்றி சொல்ல வார்த்தைகளே இல்லை.
தமிழக மக்கள் எனது தலைமையிலான .தி.மு..வுக்கு வழங்கி இருக்கும் இந்த மகத்தான வெற்றிக்கு உழைத்த ஒவ்வொருவருக்கும் மீண்டும் எனது நன்றி உரித்தாகுக. .தி.மு. வேட்பாளர்களாக தேர்தல் களத்தில் போட்டியிட்ட ஒவ்வொருவரும் வாக்காளர்களுக்கு நன்றி கூறக் கடமைப்பட்டிருக்கிறோம்.”
தன்னுடைய ஆட்சியால் கவரப்பட்ட மக்கள் ஜெயலலிதாதான் நமக்கு முதல்வராக வேண்டுமென்று, தவமாக தவமிருந்து தனக்கு வாக்களித்தது போல இந்த அறிக்கையை ஜெயலலிதா வெளியிட்டார்.
அந்தத் தேர்தலில், 227 சட்டப்பேரவை தொகுதிகளில் கூட்டணியின்றி தனியாக போட்டியிட்டு, 134 இடங்களில் வெற்றி பெற்று, தனிப் பெரும்பான்மையைக் கொண்டிருந்தது.   அந்தத் தேர்தலில் நாற்பதுக்கும் மேற்பட்ட தொகுதிகளில், வெறும் 5000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி தோல்விகள் தீர்மானம் செய்யப்பட்டன.
திமுக கூட்டணிக் கட்சிகளோடு பெற்ற வாக்கு சதவிகிதம் 41.05. அதிமுக தனித்து போட்டியிட்டு பெற்ற வாக்கு சதவிகிதம் 40.78.   ஆனால், அதிமுகவின் இந்த வெற்றி உண்மையாக மக்கள் ஆதரவினால் கிடைத்ததா ?  அல்லது பண பலத்தால் கிடைத்ததா ?
தமிழகத்தில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் முறையை, திருமங்கலம் இடைத்தேர்தலில் திமுக தான் முதன்முதலில் அறிமுகப்படுத்தியது என்பது பரவலாக நிலவும் கருத்து.  ஆனால் தொடக்கிவைத்தது அதிமுக தான். 2003ம் ஆண்டு.  அப்போது சாத்தான்குளத்துக்கு, நடந்த இடைத்தேர்தலில்தான் முதன் முதலில் வாக்காளர்களுக்கு அதிமுகவினரால் லஞ்சம் கொடுக்கப்பட்டது.  பின்னர் பிப்ரவரி 2005ல், காஞ்சிபுரம் மற்றும் கும்முடிப்பூண்டி தொகுதிகளுக்கு, அதிமுக ஆட்சி காலத்தில் நடந்த இடைத்தேர்தல் நடந்தது. அப்போது, உளவுத் துறை டிஜிபியாக இருந்த அதிமுக அடிமை அலெக்சாண்டர் அறிமுகப்படுத்திய யோசனைதான், வாக்காளர்களுக்கு லட்டுக்குள் மூக்குத்தி வைத்து கொடுப்பது.
பின்னர் 2006-2011 திமுக ஆட்சியின் போது திருமங்கலம் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது.  அந்தத் தேர்தலில்தான், முக.அழகிரி, வாக்காளர்களுக்கு 3000 முதல் 5000 வரை லஞ்சமாகக் கொடுத்தார்.  ‘திருமங்கலம் ஃபார்முலா’ என இன்று வரை அது பெயர் பெற்றிருக்கிறது. தொடர்ந்து அந்த ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற 11 இடைத் தேர்தல்களிலும், திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் வெற்றி பெற்றன. 2011 பொதுத் தேர்தலில், அதிமுக, தேமுதிக கூட்டணியோடு வெற்றிப் பெற்றது.  2011-2016 காலகட்டத்தில் நடைபெற்ற 7 இடைத் தேர்தல்களிலும், அதிமுக வாக்காளர்களை பணத்தில் குளிப்பாட்டியது. வெற்றியும் பெற்றது.
வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை ஒரு விஞ்ஞானபூர்வமான கலையாக மாற்றிய பெருமை ஜெயலலிதாவையே சேரும்.  திமுக அவரோடு மோத முடியாமல் திணறியது என்றால் அது மிகையல்ல.
தற்போது நடைபெறவுள்ள 2019 பாராளுமன்றத் தேர்தலிலும், 22 சட்டப்பேரவை தேர்தல்களிலும், பணமே பெரும் பங்கு வகிக்கப் போகிறது.  இந்தியாவிலேயே மிக அதிகமாக தமிழகத்தில் இது வரை 150 கோடிக்கும் அதிகமாக பறிமுதல் செய்யப் பட்டிருப்பதே இதற்கு சான்று.
மே 2016ல், அரவக்குறிச்சி மற்றும், தஞ்சாவூர் தொகுதிகளுக்கான தேர்தல்களில் வாக்காளர்களுக்கு ஏராளமான பணம் கொடுக்கப்பட்டதற்கான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறி இரண்டு தொகுதிகளுக்கான தேர்தலை தள்ளி வைத்தது.  அதன் பிறகு தாமதமாக இரண்டு தொகுதிகளுக்கான தேர்தல்கள் நடத்தப்பட்டன.   தேர்தல் ஆணையத்தால் தேர்தலைத் தான் தள்ளி வைக்க முடிந்ததே தவிர, அது குறித்து வேறு எந்த நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை.
ஆனால், தஞ்சாவூர் மற்றும் அரவக்குறிச்சி தொகுதிகளில் மட்டும்தான் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டதா என்றால் இல்லை.   அதிமுக போட்டியிட்ட அனைத்துத் தொகுதிகளிலும், வாக்காளர்களுக்கு பணம் கொடுத்துத்த்தான் வெற்றி பெற்றுள்ளது என்ற விபரத்தை வருமான வரித்துறை கண்டறிந்து, நேரடி வரி விதிப்பு ஆணையத்துக்கு கடிதம் அனுப்பியது. அதிமுக சார்பாக பண விநியோகத்தை செய்து முடித்தது, சேகர் ரெட்டி மூலமாக என்பதையும் வருமான வரித் துறை கண்டறிந்துள்ளது.
தமிழக வருமான வரித் துறையின் புலனாய்வுப் பிரிவின் இயக்குநர், மத்திய நேரடி வருவாய் ஆணையத்தின் தலைவருக்கு அனுப்பிய அறிக்கையில், வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுத்ததற்கான முழு விபரங்களும் வழங்கப்பட்டுள்ளன.
‘2016 தமிழக சட்டப்பேரவை தேர்தலில், வாக்காளர்களுக்கு, சேகர் ரெட்டி விநியோகித்த பணம்’ என்று தலைப்பிட்டு, தொடங்குகிறது அந்த அறிக்கை. அந்த அறிக்கையில் உள்ள சில விபரங்கள்
“சேகர் ரெட்டி குழுமம், தமிழகத்தின் உச்சபட்ச அரசியல் அதிகாரத்தால் (அதிமுக தலைமை) மணல் வியாபாரம் செய்ய தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.   அரசியல் தலைமையின் நம்பிக்கையையும், நன்மதிப்பையும் பெற்ற ஒருவரே இதற்காக தேர்ந்தெடுக்கப்படுவார் என்பதை சொல்ல வேண்டியதில்லை.
2016 சட்டப் பேரவை தேர்தலை ஒட்டி நடைபெற்ற சோதனைகளின்போது, கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், வீட்டு வசதித் துறை அமைச்சர் வைத்தியலிங்கம், மின் துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், பொதுப் பணித் துறை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரிடமிருந்து பெரும் தொகைகள் பெறப்பட்டுள்ளது தெரிய வந்தது.  இவ்வாறாக பெறப்பட்ட பணம், அதிமுக வேட்பாளர்களுக்கு சேகர் ரெட்டியின் (எஸ்.ஆர்.எஸ் மைனிங் மற்றும் அதன் பங்குதாரர்) நிறுவனங்களின் மூலம் விநியோகிக்கப்பட்டது.
ANN/KGAR/MPKSSR/LS/S-1 என்ற ஆவணம் எண் 47,49, விபிசி சாலிட்டேர், 3வது தளம், பஸுல்லா சாலை, தி.நகர், சென்னை.17 என்ற முகவரியில் பறிமுதல் செய்யப்பட்டது.   (அது யார் இடம்) அதில் வீட்டு வசதித் துறை அமைச்சர் வைத்தியலிங்கம், தேர்தல் செலவுக்காக 155.80 கோடி கொடுத்தது தெரிய வந்தது.  அந்த அட்டவணைகளில் 34 முதல் 41ம் பக்கம் கீழ்கண்ட விபரங்களை கொண்டிருந்தன.  2வது  அட்டவணையில் தொகுதியின் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது.  அட்டவணை 3 முதல் 7 வரை, வாக்குச் சாவடியின் பெயர், வாக்காளர்களின் எண்ணிக்கை (ஆண், பெண் மற்றும் மொத்தம்) கொடுக்கப்பட்டிருந்தது.  அட்டவணை 8ல் 70 சதவிகித வாக்காளர்களுக்கு ஆகும் தொகை குறிப்பிடப்பட்டிருந்தது.  அட்டவணை 8ல், ஒரு வாக்காளருக்கு 250 வீதம், 70 சதவிகித வாக்காளர்களுக்கு ஆகும் செலவு குறிப்பிடப்பட்டிருந்தது.  

44 முதல் 53 வரையிலான பக்கங்கள் வீட்டு வசதித் துறை அமைச்சர் வைத்தியலிங்கத்திடமிருந்து 77.44 கோடி பெறப்பட்டிருந்தாக குறிப்பிடப்பட்டிருந்தது.   54 முதல் 58 வரையிலான பக்கங்கள் மின் துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் 197 கோடி ரூபாய் கொடுத்திருந்ததைக் குறிப்பிட்டது.   பக்கங்கள் 65 முதல் 70ல் பொதுப் பணித் துறை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் 217 கோடி ரூபாய் கொடுத்திருந்ததை குறிப்பிட்டிருந்தது.   மேலே குறிப்பிட்டிருந்த எல்லா பணமும், சேகர் ரெட்டியின் எஸ்.ஆர்.எஸ் மைனிங் நிறுவனத்தின் கணக்கு புத்தகங்களில் வரவு வைக்காமல், தனியாக வரவு வைத்து, இந்தப் பணம் அந்த நிறுவனத்தின் ஊழியர்களால் விநியோகம் செய்யப்பட்டது தெரிய வந்தது.
இந்த ஆவணங்களின் நகல்கள், 26, க்ரிஷ்கோ அபார்ட்மெண்ட்ஸ், டெய்லர்ஸ் எஸ்டேட் இரண்டாவது தெரு, கோடம்பாக்கம், சென்னை என்ற முகவரியில் இருந்த எஸ்.ஆர்.எஸ் மைனிங் நிறுவனத்தின் ஊழியர் வீட்டிலும் பறிமுதல் செய்யப்பட்டன.  அவர் வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட ANN/VK/TS/LS-S1 என்ற ஆவணத்தில், 2016 தேர்தலுக்காக ஒவ்வொரு வேட்பாளருக்கும், 25 லட்சம் முதல் 1 கோடி வரை விநியோகம் செய்யப்பட்டது குறிப்பிடப்பட்டுள்ளது.  அவர் வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட ANN/VK/TS/LS-2 என்ற ஆவணத்தில், பல வேட்பாளர்கள், பணம் பெற்றுக் கொண்டதற்கான ஒப்புகை அளித்துள்ளார்கள்.
ANN/VK/TS/LS-S2 எண் 93 என்ற ஆவணத்தில் ஆர்.சரத்குமார் என்பவரின் மகள் ரேயான் என்பவர் 2 கோடியை பெற்றுக் கொண்டு ஒப்புகை அளித்துள்ளது குறிப்பிடப்பட்டுள்ளது.   ஆர்.சரத்குமார், அதிமுகவின் வேட்பாளராக இருந்தார்.  வருமான வரித் துறை அதிகாரிகள் சரத்குமாரை 10.04.2017 அன்று விசாரணை செய்கையில், தன் மகள் ரேயான் ராதிகா 2 கோடியை சேகர் ரெட்டியிடமிருந்து பெற்றது உண்மையே என்று கூறியுள்ளார்”.
சரத் குமார் முதலில் 10.04.2017 அன்று விசாரிக்கப்படுகிறார்.  அப்போது, 2 கோடி ரூபாயை எதற்காக சேகர் ரெட்டியிடமிருந்து வாங்கினார் என்று கேட்டதற்கு, சென்னை, தியாகராய நகர், கண்ணதாசன் தெரு, எண்.5 மற்றும், தென்காசியில் உள்ள ஒரு நிலம், மற்றும், சென்னை, கொட்டிவாக்கம், கல்யாணி நகர், எண் 2ல் உள்ள ஒரு வீட்டையும், கடன் தொல்லை காரணமாக விற்பனை செய்ய உள்ளதாகவும், அது தொடர்பாகவே, சேகர் ரெட்டியிடமிருந்து 2 கோடியை தன் மகள் பெற்றதாகவும் கூறியுள்ளார்.
09.05.2017 அன்று சரத்குமார் மீண்டும் விசாரணை செய்யப்பட்டபோது, தானே நடித்து ஒரு திரைப்படத்தை தயாரிக்க உள்ளதாகவும், அது தொடர்பாக அந்தப் பணத்தை பெற்றதாகவும் கூறியுள்ளார்.
இது தொடர்பாக, வருமான வரித் துறை, மத்திய நேரடி வருவாய் ஆணைய தலைவருக்கு விரிவான அறிக்கையை அனுப்பியதோடு, தேர்தல் ஆணையத்துக்கு தகவல் தெரிவிக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளது.
 இதற்கு பின்னரும் வருமான வரித் துறை, பல்வேறு கட்ட விசாரணைகளை நடத்தி, பணம் பறிமுதல் செய்யப்பட்டவர்கள் மீது தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.  இதுபோல பறிமுதல் செய்யப்பட்ட பணம் தொடர்பாக தேர்தல் ஆணையம் என்ன செய்துகொண்டு இருக்கிறது என்பதுதான் புரியாத புதிராக இருந்து வருகிறது.
கடந்த ஏப்ரல் 2017ல், ஆர்.கே நகர் இடைத் தேர்தலில், வாக்காளர்களுக்கு ஆளும் கட்சியினர் லஞ்சம் கொடுக்கிறார்கள் என்கிற புகாரின்  அடிப்படையில் வருமான வரித் துறையினர் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மற்றும் அவர் உறவினர் வீடுகளில் சோதனை நடத்தியனார்கள்.   அந்தச் சோதனைகளில் 5.5 கோடி ரொக்கம் கைப்பற்றப்பட்டது.  அதோடு ஒரு பட்டியலையும் கைப்பற்றியது. அந்தப் பட்டியலில் வாக்காளர்களுக்கு எவ்வளவு பணம் விநியோகிக்கப்பட வேண்டும் என்பது தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட அனைத்து அமைச்சர்களும் குறிப்பிட்டிருந்தனர்.  அந்த பட்டியலின்படி, மொத்தம் 89.65 கோடி வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்யப்பட்டிருந்தது தெரிய வந்தது.  அந்தச் சோதனைகளின் அடிப்படையில், வருமான வரித் துறை சென்னை காவல் துறைக்கு புகார்க் கடிதம் எழுதியது.  இந்தக் கடிதத்தின் மேல் நடவடிக்கை எடுக்கும்பொருட்டு அபிராமபுரம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.  தேர்தல் ஆணையமும், தமிழகக் காவல்துறைக்கு ஒரு கடிதம் எழுதியது. அந்தக் கடிதத்தில் யார் யாரெல்லாம் வாக்களர்களுக்கு லஞ்கம் கொடுக்க பணம் கொடுத்தார்கள் என்கிற முழு விவரமும் அவர்கள் பெயரோடு விவரமாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. இப்படி ஆதரத்தோடு தேர்தல் ஆணையமே கடிதத்தைக் கொடுத்திருந்தும், ‘அடையாளம் தெரியாத நபர்களால்’ பணம் வியோகம் செய்யப்பட்டது என்றே காவல் துறை வழக்கு பதிவு செய்தது.
இந்தப் புகார் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட எந்த அமைச்சர்களிடமும் விசாரணை நடத்தப்படவேயில்லை. அதனால் மீண்டும் தேர்தல் அதிகாரி தமிழகக் காவல்துறைக்கு ஒரு கடிதம் எழுதுகிறார். இதனடிப்படையில் ஒரு எஃப்ஐஆர் பதிவு செய்யப்படுகிறது. இந்த எஃப்ஐஆரை ரத்து செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்கிறார் திருத்தணி எம்எல்ஏ நரசிம்மன். நரசிம்மனுக்கும் இந்தப் புகாருக்கும், வழக்குக்கும் எந்தவொரு சம்பந்தமுமில்லை. இந்த வழக்கில் எதிர் மனுதாரராக தேர்தல் ஆணையத்தைத் தான் சேர்த்திருக்க வேண்டும்.  ஆனால் அப்படி சேர்க்காமல், அபிராமபுரம் காவல் ஆய்வாளரை மட்டும் எதிர் மனுதாரராக சேர்த்து உயர்நீதி மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்படுகிறது.  அபிராமபுரம் காவல் ஆய்வாளரோ, இந்த வழக்கு தொடர்பாக எவ்விதமான பதில் மனுவையும் தாக்கல் செய்யவில்லை.  பதில் மனு தாக்கல் செய்யப்படாததால், சென்னை உயர்நீதிமன்றம், கடந்த ஏப்ரல் 2018ல், நரசிம்மனின் மனுவை ஏற்று, எப்.ஐ.ஆரை ரத்து செய்தது.    இந்த வழக்கு, தேர்தல் ஆணையத்துக்கோ, வருமான வரித் துறைக்கோ தெரிவிக்காமலேயே மூடப்பட்டது.
சோதனைக்கு வந்த வருமான வரித் துறை அதிகாரிகளிடம் சண்டையிடும், தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர்ன்
ஆர்கே நகரில் வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுத்தது தொடர்பாக, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று திமுகவின் ஆர்.கே நகர் வேட்பாளர் மருது கணேஷ் தொடுத்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போதுதான் வழக்கு ரத்து செய்யப்பட்ட விவகாரமே வெளிச்சத்துக்கு வந்தது.  இந்த வழக்கில் விசாரணை ஒழுங்காக நடைபெறுகிறதா, குற்றவாளிகள் விசாரிக்கப்பட்டார்களா என்று கண்காணித்திருக்க வேண்டியது தேர்தல் ஆணையம்.  ஆனால் தேர்தல் ஆணையம் இந்த வழக்கு குறித்தும் இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை
2016 சட்டப் பேரவை தேர்தல் குறித்த வருமான வரித் துறையின் ஆவணங்களை பார்வையிட்ட திமுக தலைவர் ஒருவர் இவ்வாறு கூறினார். “2016 தேர்தலுக்கு, ஒரு வாக்காளருக்கு 250 ரூபாய் வீதம் தமிழகம் முழுக்க வழங்கப்பட்டது என்பதை நாங்கள் அறிவோம்.  இது குறித்து தேர்தல் ஆணையத்திடம் பல புகார்களை அளித்தோம்.  ஆனால், காவல்துறையும், தேர்தல் ஆணையமும், ஆளுங்கட்சியின் ஊதுகுழல்களாகவே செயல்பட்டன.  திருப்பரங்குன்றத்தில் அதிமுக வேட்பாளர் போஸின் வெற்றியை ரத்து செய்து உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றம், “சுதந்திரமாக செயல்பட வேண்டிய தேர்தல் ஆணையம், ஆளுங்கட்சியின் ஊதுகுழலாக செயல்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளது. அனைத்து தொகுதிகளிலும், அதிமுகவினர் பண விநியோகம் செய்வதை நாங்கள் புகார் செய்தும் எந்த நடவடிக்கையையும் தேர்தல் ஆணையம் எடுக்கவில்லை.
2016ல் ஜெயலலிதா உயிரோடிருந்தார்.  அதனால் காவல்துறை உதவி செய்தது. பண விநியோகம் சரியாக நடைபெரவில்லை என்றால் ஜெயலலிதாவின் கோபத்துக்கு ஆளாக வேண்டியிருக்குமோ என்று அதிமுகவினரும் பயந்து கொண்டு பணத்தை விநியோகம் செய்தனர். 2019 தேர்தலில், முன்பைப் போல அவர்களால் பண விநியோகம் செய்ய முடியாது” என்றார்.
கடந்த தேர்தலைப் போல இந்தத் தேர்தல் சமயத்திலும், தேர்தல் ஆணையமும், வருமான வரித் துறையும், எதிர்க் கட்சியான திமுகவை குறிவைத்தே சோதனைகளை நடத்தி வருகின்றன.   2016 சட்டப்பேரவை தேர்தலில், அதிமுகவினர் 641 கோடியை செலவிட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்தும், வருமான வரித் துறை, எதிர் கட்சிகளை மட்டுமே குறி வைக்கிறது.  இது வரை ஆளுங்கட்சியை சேர்ந்த வேட்பாளர்களையோ, அவருக்கு நெருக்கமானவர்களையோ, வருமான வரித் துறை சோதனைகளுக்கு உள்ளாக்கவில்லை.
2016 தேர்தலில், தமிழகம் முழுக்க 641 கோடி ரூபாய் விநியோகம் செய்யப்பட்டுள்ளது என்பது தேர்தல் ஆணையத்துக்கு நன்றாகவே தெரியும்.   இதே போல 2019 தேர்தலிலும், அதிமுக பணத்தை விநியோகம் செய்யப்போகிறது என்பதும் தெரியும்.  இருந்தும், இது வரை, அதிமுகவை சார்ந்தவர்களிடம், தேர்தல் ஆணையம் பம்மியே போகிறது.
மூத்த பத்திரிக்கையாளர் மணி, இது குறித்து பேசுகையில்,   “எல்லோரும் நினைப்பது போல் இல்லாமல் வாக்காளர்களுக்கு வெளிப்படையாகப் பணம்கொடுப்பதெல்லாம் மிக மிக சிக்கலான விவகாரம். பெரிய பணக்காரர்களைத் தவிர, அனைத்து சமூக மக்களும் வாக்குக்கு பணம் எதிர்பார்க்கிறார்கள். மனிதனை ஒரு மிருகம் போன்று எந்தவிதமான பழக்கத்துக்கும் அவனை ஆட்படுத்திவிட முடியும் என்கிற ரஷ்ய மனவியலாளர் பாவ்லாவ் தியரியைப் போல, தேர்தல் வந்தால் பணம் வேண்டும் என்று தமிழக மக்கள் எதிர்பார்த்து நிற்பார்கள் என்பது உலகம் முழுக்க அம்பலமாகி உள்ளது.  2003 முதல் மக்களை இப்படி சீரழித்து வைத்ததற்கு, அதிமுக மற்றும் திமுக ஆகிய இரு கட்சிகளும் காரணம்” என்றார்.
மணி கூறுவது போல, தமிழ் மக்கள், தேர்தல் வந்தாலே பண வரவு என்று எண்ணும் அளவுக்கு மாறிப் போயுள்ளார்கள் என்பது வேதனையளிக்கும் விஷயம்.
இந்து குழுமத்தை சேர்ந்த பத்திரிக்கையாளர் ஆர்.கே.ராதாகிருஷ்ணன் இது குறித்து பேசுகையில், 2016 சட்டப்பேரவை தேர்தல் சமயத்தில் நான் ஃப்ரண்ட்லைன் இதழுக்காக தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு அந்த தேர்தலை முழுமையாக கவனித்தேன்.   அதற்கு பிறகு நான் ஃப்ரண்ட்லைன் இதழில் எழுதிய கட்டுரையில், தமிழகம் முழுக்க வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டுள்ளது என்று எழுதினேன்.  நான் எழுதியதை, இன்று வருமான வரித் துறையின் ஆவணங்கள் உறுதிப் படுத்தியுள்ளன.   வருமான வரித் துறையின் ஆவணங்களில் குறிப்பிட்டுள்ள 641 கோடி என்பது, ஒரு பெரும் பனிப் பாறையின் சிறு முனைதான்.   என்னுடைய மதிப்பீட்டின்படி, தமிழகம் முழுக்க 2016 தேர்தலில், 4500 கோடி ரூபாய் அதிமுகவால் செலவிடப்பட்டிருக்கும்.
வருமான வரித் துறையின் இந்த கண்டுபிடிப்புகள் குறித்து முழுமையாக விசாரணை நடத்தப்பட்டு, 2016 தேர்தல் ரத்து செய்யப்பட்டு தமிழகம் முழுக்க மீண்டும் தேர்தல் நடத்தப்பட வேண்டும்” என்றார்.
2016 தேர்தலை முழுமையாக ரத்து செய்ய முடியுமா என்பது கேள்விக் குறியே. ஆனால், வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுத்தது குறித்து, தேர்தல் ஆணையம் விரிவான விசாரணையை,  மத்திய புலனாய்வு அமைப்பை வைத்து நடத்த பரிந்துரை செய்திருந்தால், 2019 தேர்தலில், பண விநியோகம் ஓரளவுக்காவது குறைந்திருக்கும்.
ஆனால் அப்படி விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்துக்கும் விருப்பமில்லை.  விசாரணை வேண்டி அழுத்தம் கொடுக்க எந்த அரசியல் கட்சிக்கும் மனதில்லை.
வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து எப்படி தேர்தலில் வெற்றி பெறுவது?  அப்படி வெற்றி பெற்றபின், செலவிட்ட தொகையை எப்படி ஊழல் செய்து சம்பாதிப்பது என்பது மட்டுமே பிரதான அரசியல் கட்சிகளின் நோக்கமாக இருக்கிறது.
அதனால் இந்நிலை அவ்வளவு சீக்கிரம் மாறும் அறிகுறிகள் தெரியவில்லை.  அது வரை, இந்த சாபக்கேட்டோடு வாழ வேண்டும் என்பதுதான் தமிழகத்தின் தலையெழுத்து.
குறிப்பு : வாக்காளர்கள் அனைத்துக் கட்சி வேட்பாளர்களிடமிருந்தும் பணம் வாங்கிக் கொள்கிறார்கள் என்பது அறிந்ததே. ஊழல் செய்து சேர்த்த பணம் தானே, நமக்குக் கொடுத்தால் என்ன தவறு என்பது  தான் இன்றைய வாக்களர்களின் மனநிலை. வெறுப்புணர்வைக் கடந்து அன்பின் வழியால் மனசாட்சிக்கு ஏற்றபடி வேட்பாளரை ஒவ்வொருவரும் தேர்ந்தெடுப்பதே ஜனநாயகத்தை தழைக்க வைக்கும்.

கருத்துகள் இல்லை: