ஞாயிறு, 7 ஜனவரி, 2018

விவேக்கைக் கழட்டிவிட்ட தினகரன் ..திவாகரன் கைகளுக்குப் போகும் கார்டன் கஜானா ?

சமாதானம் எடுபடவில்லை வியாபாரம்தான் ஜெயானந்த்துக்கு வாய்ப்பு அமைச்சர்களுடன் தொடர்பு
prabha. Oneindia Tamil : சென்னை: ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வெற்றியை முன்வைத்து அ.தி.மு.கவுக்கு எதிராக மட்டுமல்லாமல், விவேக்கு எதிராகவும் கபடி ஆடிக் கொண்டிருக்கிறார் தினகரன். ' நமக்கு துரோகம் செய்த எதிரிகளோடு கூட்டு வைத்துக் கொண்டு செயல்படுகிறார் விவேக். தேர்தல் செலவுக்காக ஒரு பைசாவும் கொடுக்கவில்லை. அதேவேளையில், துரோகம் செய்த அமைச்சர்களுக்கு வாரியிறைக்கிறார்' என சசிகலாவிடம் போட்டுக் கொடுத்திருக்கிறார் தினகரன்.
'ஜெயலலிதா நினைவாக, ஜனவரி இறுதிவரையில் மௌனவிரதம் இருக்கிறார் சசிகலா' என மீடியாக்கள் முன்பாக பேட்டியளித்தார் தினகரன்.
< உண்மையில் சசிகலா எந்த மௌனவிரதத்தையும் கடைபிடிக்கவில்லை. ஜெயா டி.வி மற்றும் நமது எம்.ஜி.ஆர் நிர்வாகத்தில் இருந்து விவேக்கை கழட்டிவிடுவதற்காகத்தான் இந்தக் காலகட்டத்தை அவர் தேர்வு செய்தார்" எனக் கூறும் மன்னார்குடி கோஷ்டியைச் சேர்ந்த ஒருவர், " சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறைக்குச் செல்வதற்கு முன்பாக, கட்சியை தினகரனுக்கும் கார்டன் நிர்வாகத்தை வெங்கடேஷ் கையிலும் ஒப்படைத்தார் சசிகலா. அதன்பிறகு வந்த நாட்களில் எம்.பி.ஏ படித்த விவேக், கணக்கு வழக்குகளுக்கு சரியாக இருப்பார் என்ற எண்ணத்தில் அவரிடம் பொறுப்புகளை ஒப்படைத்தார்.

அவரும் வியாபாரத்தைக் கணக்கில் வைத்துக் கொண்டு ஆட்சியாளர்களிடம் நெருங்கிப் பழகினார். தினம்தோறும் 10 அமைச்சர்கள் வரையில் விவேக்குடன் பேசி வந்தனர். முதல்வருக்கு நெருக்கமான உதவியாளர் ஒருவரிடமும் பேசி வந்தார். பன்னீர்செல்வம் அணியுடன் இணைந்து நமக்கு எதிராக துரோகம் செய்கிறார் விவேக் என குடும்ப உறுப்பினர்கள் பலரும் கூறிவந்தனர். ஆர்.கே.நகர் தேர்தல் செலவுக்காக நண்பர்களிடம் பணம் வாங்கி செலவு செய்து வந்தார் தினகரன். ' பத்துப் பைசாவைக்கூட இவன் கண்ணில் காட்டவில்லை. எதற்கெடுத்தாலும் இந்த சின்னப் பையனிடம் கையேந்தி நிற்பது கஷ்டமாக இருக்கிறது' என சசிகலாவிடம் தெரிவித்தார் தினகரன்.

ஆனாலும், தேர்தல் செலவுக்கு கார்டன் கஜானா திறக்கப்படவில்லை. ஜெயலலிதா சிகிச்சை வீடியோ வெளியான விவகாரத்திலும், தினகரனோடு மோதினார் கிருஷ்ணபிரியா.

தேர்தல் நெருக்கத்தில் நான் தோற்க வேண்டும் என்பதுதான் இளவரசி குடும்பத்தின் நோக்கமாக இருக்கிறது' எனப் புலம்பினார் தினகரன். தேர்தல் வெற்றிக்குப் பிறகு சசிகலாவை சந்திக்கச் சென்ற தினகரனுக்கும் சிறையில் உரிய மரியாதை அளிக்கப்படவில்லை. சிறைக்கு வெளியே பேட்டி அளிக்கும்போதும் சுரத்தில்லாமல்தான் பேசினார் தினகரன். இதையடுத்து, சசிகலாவின் கவனத்துக்கு நீண்ட புகார் கடிதம் ஒன்றை அனுப்பினார் தினகரன்.

அந்தக் கடிதத்தில், ' எவ்வளவோ சிரமங்களுக்கு மத்தியில்தான் எடப்பாடி தலைமையில் ஆட்சி அமைத்தோம். அவர்களும் மத்திய அரசுடன் சேர்ந்து கொண்டு துரோகம் செய்துவிட்டார்கள். இப்போதும் அந்தக் கூட்டணியுடன் விவேக்குடன் இணைந்துவிட்டார். என்னதான் வியாபாரம் என்றாலும், அவர் செய்வது சரியானதல்ல. வயதுக்கேற்ற பக்குவத்துடன் அந்தப் பையன் செயல்படுவதில்லை. இதேநிலைமை நீடித்தால் நமது குடும்பத்துக்குத்தான் நஷ்டம். கட்சி நம் பக்கம் வர வேண்டும் என்றால் விவேக்கை ஒதுக்கி வைக்க வேண்டும்' என விவரித்திருந்தார்.

தினகரனின் கோரிக்கைகளை சசிகலாவும் ஏற்றுக் கொண்டார்" என்றார் விரிவாக.
" ஜெயா டி.வி நிர்வாகத்தில் தன்னுடைய குடும்பம் கோலோச்ச வேண்டும் என்பதுதான் திவாகரனின் நோக்கம். தொடக்கத்தில், சசிகலாவிடம் இதுபற்றிப் பேசியபோது, ' அவன் கொஞ்சநாள் பார்க்கட்டும்' என ஒரே வரியில் முடித்துக் கொண்டார். ஜெயா டி.வி, ஜாஸ் சினிமாஸ், நமது எம்.ஜி.ஆர் நிர்வாகங்களில் இருந்து விவேக் கழட்டிவிடப்பட்டால், அந்த இடத்துக்கு ஜெயானந்த் வருவதற்கான வாய்ப்பு இருக்கிறது.

இளவரசி மகள் கிருஷ்ணபிரியா தினகரனுக்கு எதிராகப் பேசிய அதேநாளில், ' வீடியோவை வெளியிட்டதில் எந்தத் தவறும் இல்லை' என தினகரனுக்கு ஆதரவாகப் பேசியிருந்தார் ஜெயானந்த். இதனை தினகரனும் ரசித்தார். இளவரசி குடும்பத்தின் ஆதிக்கத்தில் இருந்து ஜெயா டி.வி விலகுவதைவிட, ஒட்டுமொத்த நிதி போக்குவரத்துகளையும் தினகரன் கையாளப் போகிறார் என்பதுதான் ஹைலைட். இவர்களின் செயல்பாடுகளால் மிகவும் வேதனையில் இருக்கிறார் விவேக். சசிகலாவிடம் அவர் பேசிய சமாதானம் எதுவும் எடுபடவில்லை" என்கின்றனர் பெங்களூரு அ.தி.மு.க நிர்வாகிகள் சிலர்.

கருத்துகள் இல்லை: