திங்கள், 6 நவம்பர், 2017

மரகதலிங்கத்தை கடத்தியவர்கள் கைது .. ஈரோட்டில் ...

tamilthehindu : ஈரோட்டில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.7 கோடி மதிப்புள்ள மரகத லிங்கம் மற்றும் நந்தி.< திருச்செங்கோடு சிவன் கோயிலில் 4 ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்ட, ரூ.7 கோடி மதிப்பிலான மரகத லிங்கம் மற்றும் நந்தியை சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு போலீஸார் ஈரோட்டில் பறிமுதல் செய்தனர். இவற்றை விற்பதற்கான முயற்சியில் ஈடுபட்ட 3 பேரை கைது செய்தனர்.>ஈரோட்டில் மேட்டூர் சாலையில் உள்ள தனியார் தங்கும் விடுதியில், சிலை கடத்தலில் தொடர்புடையவர்கள் தங்கியிருப்பதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து, விடுதியின் அறையில் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் திடீர் சோதனையிட்டனர்.
விடுதி அறையில் மரகத லிங்கம் ஒன்றும், மரகத நந்தி ஒன்றும் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அந்த அறையில் தங்கியிருந்த ஈரோட்டைச் சேர்ந்த கஜேந்திரன்(48), சந்திரசேகரன் (50), நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டைச் சேர்ந்த மணிராஜ் (50) ஆகிய 3 பேரை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மரகத லிங்கம் மற்றும் மரகத நந்தி பறிமுதல் செய்யப்பட்டன.

இதுகுறித்து சிலைக் கடத்தல் தடுப்புப்பிரிவு ஐஜி பொன்.மாணிக்கவேல் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியில் உள்ள சிவன் கோயிலில் இருந்து, 4 ஆண்டுகளுக்கு முன் 3 இஞ்ச் உயரமுள்ள மரகத லிங்கம் மற்றும் ஒன்றரை இஞ்ச் உயரமுள்ள மரகத நந்தி திருடப்பட்டது. 1,200 ஆண்டுகள் பழமையானதாக கருதப்படும் இவற்றை, ரூ.7 கோடி வரை விலை வைத்து விற்பனை செய்ய முயன்றது தொடர்பாக மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மூவரும் முகவர்களாக செயல்பட்டுள்ளனர்.
மேலும் 2 பேருக்கு வலை
இந்த சம்பவத்தில் தொடர்புடைய, மேலும் 2 பேரைத் தேடி வருகிறோம். மீட்கப்பட்ட சிலைகள் கும்பகோணம் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படும். புராதனமான, அதிக மதிப்பு கொண்ட சிலைகளை வெளிநாடுகளுக்கு கடத்தும் அனைத்து வழிகளும் அடைக்கப்பட்டுவிட்டன என்றார்.

கருத்துகள் இல்லை: