திங்கள், 6 நவம்பர், 2017

மோடி சென்னை வருகை ‘தினத்தந்தி’ பவளவிழாவில் பங்கேற்கிறார்

பிரதமர் இன்று சென்னை வருகை ‘தினத்தந்தி’ பவளவிழாவில் பங்கேற்கிறார்தினத்தந்தி’ பவள விழா, சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் இன்று காலை நடைபெறுகிறது. இதில் பிரதமர் கலந்து கொண்டு பவள விழா சிறப்பு மலரை வெளியிடுகிறார். இந்தியாவின் ‘நம்பர் 1’ தமிழ் நாளிதழ் என்ற சிறப்பை பெற்ற ‘தினத்தந்தி’ பவள விழா ஆண்டை கொண்டாடிக்கொண்டிருக்கிறது. அதை கொண்டாடும் விதமாக, சென்னை பல்கலைக் கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் இன்று (திங்கட் கிழமை) ‘தினத்தந்தி’யின் பவள விழா வெகு விமரிசையாக நடைபெறுகிறது. இந்த விழாவில் பங்கேற்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து இன்று காலை 7.10 மணிக்கு தனி விமானம் மூலம் சென்னை புறப்படுகிறார். காலை 9.55 மணி அளவில் சென்னை விமான நிலையத்தை அவர் வந்தடைகிறார்.


அங்கு பிரதமர் நரேந்திர மோடியை கவர்னர் பன்வாரிலால் புரோகித், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மத்திய நிதி மற்றும் கப்பல் போக்கு வரத்து துறை ராஜாங்க மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், இல.கணேசன் எம்.பி., தமிழக பாரதீய ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தர ராஜன் ஆகியோர் வரவேற்கிறார்கள்.
வரவேற்பு நிகழ்ச்சி முடிந்ததும், காலை 10 மணி அளவில் விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டரில் புறப்படும் பிரதமர் நரேந்திர மோடி, 10.20 மணிக்கு மெரினா கடற் கரை அருகேயுள்ள ஐ.என்.எஸ். அடையார் ஹெலிகாப்டர் தளத்தில் வந்து இறங்குகிறார். அங்கு அவரை அமைச்சர்கள், போலீஸ் உயர் அதிகாரிகள் வரவேற்கிறார்கள்.

அங்கிருந்து காரில் புறப்படும் பிரதமர் நரேந்திர மோடி, காலை 10.30 மணி அளவில் ‘தினத்தந்தி’ பவள விழா நடைபெறும் சென்னை பல்கலைக் கழக நூற்றாண்டு விழா மண்ட பத்துக்கு வருகிறார். அவரை, ‘தினத்தந்தி’ இயக்குநர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன், ‘மாலைமலர்’ இயக்குநர் பா.சிவந்தி ஆதித்தன் ஆகியோர் வரவேற்று மேடைக்கு அழைத்துச் செல்கிறார்கள்.

விழா, மேடையில், கவர்னர் பன்வாரிலால் புரோகித், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மத்திய மந்திரிகள் நிர்மலா சீதாராமன், பொன்.ராதாகிருஷ்ணன், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இருப்பார்கள்.

தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா தொடங்குகிறது. பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மேடையில் உள்ளவர்களுக்கு ‘தினத்தந்தி’ இயக்குநர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன், ‘மாலைமலர்’ இயக்குநர் பா.சிவந்தி ஆதித்தன் ஆகியோர் பொன்னாடை அணிவித்து நினைவுப் பரிசு வழங்குகிறார்கள்.

அதன் பின்னர், சி.பால சுப்பிரமணியன் ஆதித்தன் வரவேற்று பேசுகிறார். அவரை தொடர்ந்து, முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உரை நிகழ்த்துகிறார். அவரை தொடர்ந்து, ‘தினத்தந்தி’ பவள விழா சிறப்பு மலரை பிரதமர் நரேந்திர மோடி வெளியிடுகிறார். மேலும், விருதுகளையும் அவர் வழங்குகிறார்.

விழாவில், சிறந்த இலக்கிய நூலுக்கான பரிசு ‘இலக்கியத்தில் மேலாண்மை’ என்ற புத்தகத்தை எழுதிய ஐ.ஏ.எஸ். அதிகாரி வெ.இறையன்புவுக் கும், மூத்த தமிழறிஞர் விருது ஈரோடு தமிழன்பனுக்கும், சாதனையாளர் விருது தொழில் அதிபர் வி.ஜி.சந்தோஷத்துக்கும் வழங்கப்படுகிறது. ‘தினத்தந்தி’ பத்திரிகையை சைக்கிளில் சென்று விற்பனை செய்து தொழில் அதிபராக உயர்ந்தமைக்காக வி.ஜி.சந்தோஷத்துக்கு சாதனையாளர் விருது வழங்கப்படுகிறது.

இறுதியாக பிரதமர் நரேந்திர மோடி சிறப்புரை ஆற்றுகிறார். அத்துடன் விழா நிறைவடைகிறது. விழா நிகழ்ச்சிகளை டாக்டர் சுதா சேஷய்யன் தொகுத்து வழங்குகிறார்.

விழா முடிவடைந்ததும் அங்கிருந்து, காலை 11.35 மணிக்கு காரில் புறப்படும் பிரதமர் நரேந்திர மோடி, ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள மேயர் ராமநாதன் செட்டியார் திருமண மண்டபத்துக்கு செல்கிறார். அங்கு, பிரதமர் அலுவலகத்தில் பணிபுரிந்த தமிழகத்தைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி டி.வி. சோமநாதன் மகள் திருமண விழா நடைபெறுகிறது. அந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்துகிறார்.

பின்னர், மதியம் 12.05 மணிக்கு அங்கிருந்து காரில் புறப்படும் பிரதமர் நரேந்திர மோடி, 12.15 மணிக்கு ஐ.என்.எஸ். அடையார் ஹெலிகாப்டர் தளத்திற்கு வருகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டரில் புறப்படும் அவர், 12.40 மணிக்கு சென்னை விமான நிலையம் சென்று, அங்கிருந்து 12.45 மணிக்கு தனி விமானம் மூலம் டெல்லி புறப்படுகிறார்.

பிரதமர் நரேந்திர மோடி சென்னை வருவதையொட்டி, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணியில் சுமார் 5 ஆயிரம் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை: