ஞாயிறு, 20 ஆகஸ்ட், 2017

ஓவியாதான் பத்ரி சேஷாத்ரி ! காயத்ரிதான் ஹெச். ராஜா !

பிக்பாஸ் இரசிக்கப்படுவது ஏன்? இறுதி பாகம் பிக்பாஸ் போட்டியாளர்களை அரசியல் – சமூகம் – ஆளுமை சார்ந்து மக்கள் பரிசீலிப்பது சரியா? நீயா நானா நிகழ்ச்சி மூலம் சாலமான் பாப்பையாக்களின் ஏட்டிக்குப் போட்டி பட்டிமன்றங்களை மேலும் மலிவாக்கி மக்களை பயிற்றுவித்திருக்கிறது விஜய் டி.வி. அதையே பிக்பாஸ் போட்டியிலும் மக்கள் செய்கிறார்கள். பிக்பாஸ் வீட்டில் எந்த அளவு அரசியல் சமூக கருத்துக்கள் அரட்டையில் வருகிறதோ அந்த அளவுக்கு சமூக  வலைத்தளங்களில் அனல் பறக்கும். மெரினா, தலித், எச்ச, ஆணாதிக்கம் என நாளுக்கு ஒன்றாய் தமிழ் இணையம் பேசுகிறது.
இதற்காகவே அத்தகைய காட்சி நறுக்குகளை பொருத்தமான இடத்தில் எடிட் செய்து காட்டுகிறார்கள். இதுபோக போட்டியாளர்களுக்கு முதலிலேயே கவுன்சிலிங் கொடுத்து ‘விளையாட்டை ஆடுவது’ குறித்தும் விளக்கியிருப்பார்கள். மேலும், என்னதான் நட்சத்திர வசதி வீட்டில் இந்த சினிமா மாந்தர்களை வைத்தாலும் கூண்டில் சுற்றி வரும் நரிகள் போல வாய்ப்பிற்காக காத்திருந்து பிறாண்டி எடுத்து விடுகிறார்கள். பிறகு மக்கள் அதற்கு பொழிப்புரை போடுகிறார்கள்.
பிக்பாஸில் கலந்து கொண்டோரின் வர்க்கம் – அரசியல் – சமூகப் பார்வையில் பெரிய வேறுபாடு இல்லை. ஓவியாவும் – காயத்ரியும் கூட ஒரே வகையினத்தில்தான் வருகிறார்கள் என்றால் பலருக்கும் அதிர்ச்சியாக இருக்கலாம். அதற்கு அந்நபர்களின் தனித்தன்மையோடு கூடிய வகையினத்தை மக்களின் மதிப்பீடுகளோடு பார்க்கலாம்.

இவர்களில் பலர் நிலவுடமை அடிமைத்தனத்தையும், முதலாளித்துவ தனிநபர் விட்டேத்தித்தனத்தையும் கொண்டவர்கள். அவர்களிடம் அரசியல் ரீதியாக விசாரணை நடத்தினால் கூட மேற்கண்ட சாயல்களோடு வலதுசாரியாக விடைத்து நிற்பார்கள்.
சினேகன் – இந்த உலகில் தன்னைவிட நல்லவனாக வாழ்வது யாருமில்லை என்பதால் மற்றவர்களை அவ்வப்போது பாவிகளாக கருதி அரவணைப்போடு புத்திமதி சொல்லுபவர். அனைத்தும் அறிந்தவர் என்பதால் தமிழ்த்தாய் வாழ்த்து எழுதியவர் தாயுமானவர் என்று ஓங்கி பொய்யுரைப்பார். அன்னார் அவர்கள் கவிஞர் வைரமுத்துவிடம் உதவியாளராக இருந்து தமிழ் கற்றவர். “தனது பிறந்த நாளில்தான் தமிழ் பெருமை அடைகிறது” என்று பேசிய வைரமுத்துவுக்கு பொருத்தமான சீடர்.
பரணி – பெற்றோர், பாலாஜி சக்திவேல், சசிகுமாருக்கு அடுத்த படியாக கமலின் காலில் விழுந்ததை பெருமையாக பேசுமளவு அப்பாவி. ஆகவே அடிமை. இவரது தனித்தன்மையை சினிமா குருகுலத்தின் முனிபுங்கவர்கள் தீர்மானிக்கிறார்கள்.
கஞ்சா கருப்பு – சினிமா மடத்தின் மூத்தோர்களுக்காக தெருச்சண்டைக்கு போகும் தென்மதுரை வழக்கு பேசும் அடிமை. ஆகவே ஆண்டானாய் எளியோரை இகழுவார். இகழ்வதை கடமை என்று ஆணித்தரமாக நம்புவதால் இவர் அப்பாவியா, காரியவாதியா என்று பிரித்தறிய முடியாதபடிக்கு விசித்தரமானவர். ஆகவே செல்வம் வைத்திருப்போரின் எடுப்பார் கைப்பிள்ளை!
ஆர்த்தி – நடிகையாக நிலைபெறுவதற்கு முன்னால் ஐ.ஏ.எஸ் கனவைக் கொண்டிருந்த சீமாட்டி. ஆகவே அற்ப விசயத்திலும் அதிகாரம் கொடிபறக்கும். ஆதரித்தால் மக்கள் கடவுள். எதிர்த்தால் கால் துரும்பு! இறுதியில் ஆர்த்தியின் தர்பாரில் பிச்சை எடுப்போரே நல்லவர்.
காயத்ரி – சொன்னதைக் கேட்காத குரங்கை வெறுப்பேற்றியே வேலை செய்ய நினைப்பவர். மறுக்கும் குரங்குகளை குதறலோடு ஒதுக்குவார். அப்படித்தான் டான்ஸ் மாஸ்டராக இன்டஸ்ட்ரியில் குப்பை கொட்ட முடியும் என்பவர். குழந்தை மனது கொண்ட தன்னை கோபாக்காரியாக மாற்றாதீர்கள் என்பதை நெற்றியிலேயே எழுதி வைத்திருப்பவர். தன்னைத் திருத்தும் அதிகாரம் தனக்கே இல்லை என ஆழ்ந்த தூக்கத்திலும் ஆணித்தரமாக எடுத்து வைப்பவர்.
ஜூலி – சினிமா மடத்தில் மிக நல்ல அடிமையாக சேவித்தால் மட்டுமே வாய்ப்பு கிடைக்கும் என்பதை ஏற்று காட்சிக்கேற்ற நடனம், அழுகை, பாசம் அனைத்தையும் அள்ளி வீசுபவர்.
சக்தி – சினிமா மடத்தில் பரம்பரை பாத்தியதை உள்ளவரின் செருக்கு கொண்டவர். ஆள் பார்த்து பேசுவார் – அதட்டுவார். என் காலை மிதிக்கும் நீ ஏன் “எக்ஸ்கியூஸ் மீ” கேட்காமல் வெறுப்பேற்றுகிறாய் என்பதை முதலில் நாகரீகமாகவும் மறுத்தால் அதட்டியும் கேட்பவர்.
கணேஷ் – நுனிநாக்கு ஆங்கிலத்தோடும் உடல் மொழியில் மரியாதையோடும் உடற்பயிற்சி – தியானத்துடனும் இந்த உலகிலேயே மிக அதிக ஒழுங்கும் நாகரீகமும் கொண்ட கனவானாய் வாழ முடியும் என்று நம்புபவர். நல்லது கெட்டதுகளுக்கு போகாமல் கூலாக இருந்தாலே போதும், என எச்சரிக்கையுடன் வாழ்பவர்.
ஆரவ் – ஜாலியும், பிரபலமும் விரும்பினாலும் அதற்கு செய்ய வேண்டிய காரியங்கள் குறித்து சற்று குழம்பினாலும், மற்றவர்களின் பலம் பலவீனத்தை எடை போட்டுப் பார்த்து, தன்னைப் பாதுகாத்துக் கொள்பவர். ஃபர்ஸ்ட் பெஞ்ச் மாணவர் அளவுக்கு ஒரு காரியவாதி.
நமீதா – சினிமா மடத்தில் தன்னைப் போன்ற பரம்பரை பணக்காரர்களை மதிக்கக் கூடக் கற்றுக்கொள்ளாதவர்களுடன் வாழவேண்டியிருக்கும் துன்பத்தை தாங்கிக் கொண்டு அவர்களுக்கு சுத்தம் குறித்து சொல்லிக் கொடுப்பதை பெருந்தன்மையாக கருதுபவர். ஆகவே அவர் வைத்த சட்டத்தை மீறுவோரைப் பார்க்கும் போது எங்கே இருக்க வேண்டிய நான் இங்கேயா என்று சலிப்போ எரிச்சலோ கொள்பவர்.
ரைசா – நான் நானாக இருப்பதை நாசுக்காக சொன்னால் தனக்கு ஒரு இடம் சினிமா மடத்தில் கிடைக்கும் என்று முயற்சிப்பவர். தனது முகமும் அதே நாசுக்கை கொண்டிருக்க வேண்டுமென்று 24 மணிநேரமும் மேக்கப்பும் கண்ணாடியுமாக வேலை செய்பவர். பிக்பாஸின் ஆட்ட விதிகளை அறிந்து கொண்டு அதற்கேற்ற முறையில் விளையாட முற்படும் மல்டிபிளக்ஸ் வர்க்கத்தின் லேட்டஸ்ட் வகை மாதிரி.
வையாபுரி – வாழ்ந்து கெட்ட குடும்பத்தலைவரின் ஆசைகள் – துன்பங்களோடு சராசரியானவர். இந்த பிக்பாஸ் வாழ்க்கை தனக்கு கொடுக்க இருக்கும் செல்வத்தை மனதில் கொண்டு அவ்வப்போது வீட்டு வாழ்க்கை குறித்து புலம்பலோடு நாட்களை ஓட்டுபவர்.
ஓவியா – நான் நானாக இருப்பதை நடனத்தோடும், குளிர்ந்த மொழியோடும் சொன்னால் ஒத்துக் கொள்வார்கள் என்று நம்புபவர் – நடிப்பவர். அதையே முழுநேர வேலையாக கொண்டிருப்பதால் மற்ற வீட்டு வேலைகளை செய்ய முடியாது என்பதை பணிவுடன் எடுத்துச் சொல்பவர். மறுப்போரை சிரித்து மாற்ற நினைப்பவர். முக்கியமாக இவற்றை பொய் பேசாமல் – புறணி பேசாமல் சாதிக்க முடியும் என்ற சாமர்த்தியத்தைக் கொண்டிருப்பவர்.
கூட்டிக் கழித்துப் பார்த்தால் இந்த வகை மாதிரிகளில் பொய் பேசமாட்டார், புறணி பேசுவார், வேலை பார்ப்பார், தன்வேலையை மட்டும் பார்ப்பார் என்ற சில்லறை சமாச்சாரங்களைத் தவிர வேறு என்ன வேறுபாடு இருக்கிறது?
இவர்கள் அனைவரும் அதிகாரத்தில் மூத்தோரை அண்டிப் பிழைப்பதும், இளைத்தோரை ‘வச்சு செய்வதும்’ தவிர வேறு என்ன விதத்தில் வருவார்கள்? இந்த வெட்டி ஆய்வை வெட்டிவிட்டு நேரடியாக விசயத்திற்கு வருவோம்!

ஓவியாவை ஏன் மக்கள் ஆதரிக்க வேண்டும்? காயத்ரியை ஏன் வெறுக்க வேண்டும்?
ருவரது சித்தாந்தமும் ஒன்றேதான். நிலவுடமைப் பண்பாட்டின் வடிவத்தோடு முதலாளித்துவ தனிநபர் சித்தாந்ததை காயத்ரி கொண்டிருக்கிறார் என்றால், முதலாளித்துவ தனிநபர் சிந்தாத்தத்தின் வடிவோடு முதாளித்துவ உலகின் கேளிக்கை வாழ்வை ஓவியா கொண்டிருக்கிறார்.
இவ்விருவரையும் ஒரு ஒப்பீட்டோடு பரிசீலித்தால் இன்னும் விளங்கும். ஓவியாவை கிழக்கு பதிப்பகம் பத்ரி சேஷாத்ரியுடனும், காயத்ரியை பாஜக-வின் எச்.ராஜாவோடும் ஒப்பிடலாம். ராஜாவின் வார்த்தைகளைக் கேட்டாலே நீங்கள் கொலை வெறி அடைவீர்கள். பத்ரியின் விளக்கத்தைப் பார்த்தால் அதை ஏற்க முடியாவிட்டாலும் அவரது ‘நாகரீகமான’ அணுகுமுறையால் படித்தவர் சொன்னால் சரியாக இருக்குமோ என்று தயங்குவீர்கள்.

பத்ரி சேஷாத்ரி – எச். ராஜா
ஓவியா தன் கருத்தை எப்போதும் விட்டுக் கொடுக்க மாட்டேன் என்கிறார். அதே நேரம் அதை ஏற்காதவர்களை அவர் இகழ்வதில்லை, எரிச்சலூட்டுவதில்லை. காயத்ரியின் கருத்துக்கள் ஏற்கப்படாதபோது எச் ராஜா போல நாடுகடத்த வேண்டும் என்று பேசுகிறார். ஒன்று பா.ஜ.க-வின் கார்ப்பரேட் முகமென்றால் மற்றொன்று பா.ஜ.கவின் பார்ப்பனிய முகம்.
’நாளை என்ன நடக்கும் என தெரியாது. அதனால் இப்போது இந்த கணத்தை மகிழ்ச்சியாக வாழ வேண்டும். Live this moment. Enjoy the life’. – இது ஓவியாக்களின் மனநிலை. லைவ் திஸ் மொமண்ட் என்ற தனிநபர்வாதத்தின் மயக்க மருந்து, இப்போது ஓவியாவின் மூலமாக மறு உலா வருகிறது. வசனம் பழசுதான். ஆனால், முன்னெப்போதையும்விட வேலை, ஊதியம், பணிச்சுமை, பொருளாதார தள்ளாட்டம், இவை உருவாக்கும் தனிவாழ்வின் சிக்கல்கள்… என வாழ்வின் நெருக்கடிகள் நாலா பக்கமும் சூழ்ந்திருக்கும் நிலையில் இந்த வசனம் மேலும் பொருத்தமுள்ளதாக மாறியுள்ளது. ஓர் இளைப்பாறும் தருணத்துக்காக ஏங்கும் மனம் Live this moment என்ற வசனத்தைப் பற்றிக் கொள்கிறது.
ஆனால் இந்தக் கணத்தில் மட்டும் கூட வாழ முடியாத அளவுக்கு நெருக்கடிகள் கணம் தோறும் சூழ்கின்றன. இதற்கு தன் எதிர்ப்புணர்வை வெளிப்படுத்துவதுதான் உண்மையிலேயே சுரணையுள்ள மனிதனின் இயல்பான தன்னுணர்வாக இருக்க முடியும். மாறாக சூழலின் பயங்கரத்தில் இருந்து துண்டித்துக்கொண்டு குளிரூட்டப்பட்ட மதுவிடுதியிலோ அல்லது மழை பெய்யும் அந்தி நேரத்தின் மெல்லிசையிலோ அந்த கணத்தை வாழ்ந்து தீர்ப்பது என்பது அருவெறுப்பானது.
பிக்பாஸ் வீட்டில் நடக்கும் சீரியல் டைப் சண்டைகளின் போது ஓவியா பொய் பேசவில்லை, அவரை தனிமைப்படுத்துகிறார்கள் என்பதெல்லாம் அவரை நேசிக்க மக்களுக்கு போதுமானது என்றால், அவ்வளவு பலவீனமானவர்களா நாம்? சில்லறைப் பிரச்சினைகளுக்கு பொய் பேசாத ஓவியா சமூகத்தின் இதர பிரச்சினைகள் குறித்து கேட்டால் என்ன சொல்வார்?

இப்போது இந்த கணத்தை மகிழ்ச்சியாக வாழ வேண்டும். Live this moment. Enjoy the life’. – இது ஓவியாக்களின் மனநிலை.
இன்று “லிபரல்கள்” எனப்படுவோர் பொதுப்புத்தியை வடிவமைப்பதில் பெரிதும் செல்வாக்கு செலுத்துகிறார்கள். இவர்கள் சாதிவெறி-மதவெறி-ஆணாதிக்கம் ஆகியவற்றை குறிப்பிட்ட அளவு எதிர்ப்பவர்களாகவும் இருப்பார்கள். பா.ஜ.க -விலும் கூட இத்தகைய குரல் கொடுக்கும் சித்தாந்தவாதிகள் இருக்கிறார்கள். கட்சி சார்பற்ற இடதுசாரி என்று தங்களைக் கூறிக்கொள்வோர் இன்னொரு வகையினம்.
இவர்களின் சமூகப் பார்வையை குறுக்கு விசாரணை செய்தால் அது ’நானேதான்’ என இறுதியில் முடியும். கட்சிகள், இயக்கங்களை விட தனிநபர்களே மேலானவர்கள் என்ற இவர்களது கண்ணோட்டம், நிலவுகின்ற சமூக அமைப்புதான் ஜனநாயகமானது என்று கூச்சமின்றி பேசும்.
ஜூலி வெளியேற்றப்படும் போது கமல் என்ன சொன்னார்? மெரினா போராட்டத்தில் கூட முழக்கங்களை கண்ணியமாக நாகரீகமாக போட வேண்டும் என்று புத்திமதி சொன்னார். குஜராத் 2002 இனப்படுகொலையில் மோடியின் பங்கை கண்ணியமாக கண்டிப்பது எப்படி கமல் அவர்களே? கமல் விரும்பும் ஒரு போராட்டம் கூட விக்ரமன் சினிமா உணர்ச்சி போல அல்லது அவரது அன்பே சிவம் போல 100% அன்பில் திளைக்க வேண்டுமாம். இங்கே குழந்தைகள் சாவது இயற்கைதான் என்று திமிராக பேசும் உத்திரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை எப்படி கண்ணியமாகப் பேசுவது?
மோடியின் ரத்தக்கறை பங்கு ஜூலிக்கும் தெரியாது. மெரினா எழுச்சியில் வந்த இலட்சக்கணக்கானவர்களில் அவரும் ஒருவர். பொதுவாக மாடு, விவசாயம், அரசு அலட்சியம் தாண்டி ஜூலியின் அரசியலில் வேறு இல்லை. அவரை வீர தமிழச்சியாக அழைத்தது தவறு. துண்டுப் பிரசுரம் கொடுத்ததால் குண்டர்  சட்டத்தில் உள்ளே தள்ளப்பட்ட வளர்மதியும், பிக்பாஸ் வீட்டுச் சிறையில் நடிக்க முயலும் ஜூலியும் ஒன்றல்ல. ஜூலியின் மெரினா பிரபலத்தை விஜய் டி.வி கேவலமாக பயன்படுத்தியது. அந்தக் கேவலத்தின் அடிப்படை மக்களின் பலவீனத்தில் உள்ளது.

துண்டுப் பிரசுரம் கொடுத்ததால் குண்டர் சட்டத்தில் உள்ளே தள்ளப்பட்ட வளர்மதியும், பிக்பாஸ் வீட்டுச் சிறையில் நடிக்க முயலும் ஜூலியும் ஒன்றல்ல.
அய்யாக்கண்ணு கூட கமல் விரும்பும் “கண்ணியமான” முறையில்தான் டெல்லியில் போராடுகிறார். தொழிலாளிகளை ஒடுக்க வேண்டும் என்று பகிரங்கமாக ஏசும் விஷால் போன்ற ஜென்மங்கள் டெல்லி சென்று அவரை ஆதரிக்கின்றன.
“பாட்டிற்காக சிறை செல்லத் தயாராக இருந்த நான் மாட்டிற்காக சிறை செல்ல மாட்டேனா” என்று எதுகை மோனை எஃபெக்டில் பேசுகிறார் சிம்பு. மக்கள் கரவொலி எழுப்புகிறார்கள். பெண்களை இழிவுபடுத்தி பாட்டெழுதுவதும் ஜனநாயக உரிமை, ஜல்லிக்கட்டுக்காக போராடுவதும் ஜனநாயக உரிமை என்பதுதான் மேட்டுக்குடி குலக்கொழுந்துகளின் அரசியல்!
தமிழகத்தில் பெண்கள் டாஸ்மாக்கிற்கு எதிராக போராடினால் இத்தகைய தனிநபர் தாராளவாதிகள் குடிப்பது எமது தனியுரிமை என்று பேசுவார்கள். இந்த இடத்தில் ஓவியா( பத்ரி) குடியுரிமையை ஆதரித்தும் காயத்ரி (எச்.ராஜா) எதிர்த்தும் பேசக்கூடும்.
பெண்களின் போராட்ட உணர்வை மதித்தாலும், குடிப்பது குடிமக்களின் அடிப்படை உரிமை என்று ஓவியா அணி நாகரீகமாக பேசும். மல்லையா முதல் மற்ற பாஜக மாநிலங்கள் வரை குடியை தொழிலாக மேற்கொண்டு வருமானம் பார்க்கும் காயத்ரி அணி இங்கே பொதுப்புத்திக்காக குடி எதிர்ப்பு பேசும்.
இன்றைய அமைப்பு முறையை அப்படியே ஏற்றுக் கொள்ளவேண்டும் என்று தாராளவாதிகளின் தீவிரவாத அணி கோருகிறது என்றால் அதை கொஞ்சம் மாற்றி ஏற்கலாமே என மிதவாத அணி கோருகிறது. மற்றபடி அடிப்படையில் இரண்டுமே சமூக மாற்றத்திற்கு எதிரானதுதான்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடக்கும் சில்லறை அற்பத்தனங்களை மக்கள் தமது சமூக நடப்புக்களோடு சேர்த்து பார்க்கிறார்கள். காயத்ரி திமிர் பிடித்த பாப்பாத்தி, நமிதா திமிர் பிடித்த மேட்டுக்குடி, பரணி சாதாரண மக்கள் பிரிவு என்றெல்லாம் பார்த்து ஆதரவு – எதிர்ப்பு நிலை எடுக்கிறார்கள். ஆனால் நாயக – வில்லி பாத்திரங்களில் இருப்போர் தமது தனிப்பட்ட நடத்தைகளையே காட்டி கூட்டத்தை கவரவோ வெறுப்பேற்றவோ செய்கிறார்கள். இந்த பலவீனம் இருக்கும் வரை மோடியோ, ஜெயலலிதாவோ விஜய் டி. –வி வழங்கும் பிக்பாஸின் இன்டர் நேஷனல் ஃபார்மெட்டை வைத்து நம்மை எளிதில் ஏமாற்ற முடியும். தேர்தலில் வெற்றி பெறவும் முடியும்.
உணர்ச்சிகளில் முக்குளித்து உணர்வுகளில் தோற்றுக் கொண்டிருக்கிறோம். அற்பத்தனங்களை அலசி ஆராய்ந்து அரசியலை தவிர்த்துக் கொண்டிருக்கிறோம். பொழுதுபோக்கின் பேரில் தனிநபர் அராஜகத்தை கற்றுக் கொண்டு வருகிறோம். பிக்பாஸ் நிகழ்ச்சியை கேலிசெய்யும் பல தனிநபர்களிடம் கூட இத்தகைய வியாதி இருக்கவே செய்கிறது.
இன்றைக்கு சமூகவலைத்தளங்களில் தனிநபராக முற்போக்கு – கம்யூனிசம் – தலித் – பெண்ணியம் பேசும் பலரிடமும் இந்த தனிநபர் “அராஜகவியாதி” தொற்றுநோயாக பரவிக் கொண்டிருக்கிறது. நான்கு புத்தகங்கள் போட்டுவிட்டு இதுவரை இடதுசாரி கட்சிகள் என்ன புடுங்கிக் கொண்டிருந்தன என்று திமிராக சீறுவார்கள். இரண்டு ஆவணப்படங்களை எடுத்து விட்டு கேமராதான் உலகில் புரட்சியைக் கொண்டு வரும் என அகங்காரமாய் அறிவிப்பார்கள். பாதுகாப்பான வாழ்வை உத்திரவாதப்படுத்திக் கொண்டு, தேர்தல் புறக்கணிப்பால் என்ன சாதித்தீர்கள் என மார்க்சிய லெனினிய அமைப்புக்களை அதிகாரத்துடன் கேட்பார்கள்.

இன்றைக்கு சமூகவலைத்தளங்களில் தனிநபராக முற்போக்கு – கம்யூனிசம் – தலித் – பெண்ணியம் பேசும் பலரிடமும் இந்த தனிநபர் “அராஜகவியாதி” தொற்றுநோயாக பரவிக் கொண்டிருக்கிறது.
வீட்டு வேலைகளுக்கு எந்திரங்களையும் பணியாளர்களையும் போட்டுவிட்டு பெண் விடுதலைக்காக ஃபேஸ்புக்கில் கவிதை எழுதுவார்கள். பொதுவெளியில் சாதிவெறியை கண்டிக்க தைரியமற்றவர்கள் கபாலி ரஜினியை தலித் போராளியாக காட்டுவதற்கு நான்கு மாதம் எழுதுவார்கள்! சினிமாவில் பிரபலமாக வேண்டும் என்பதை இலட்சியமாக வைத்து விட்டு, ஈழத்திற்காகவும் சில சொட்டு கண்ணீரையும் வடிப்பார்கள்.
இது போக ரத்ததானம், நாய்க்குட்டி கருணை, அப்துல் கலாம் கவிதை, இயற்கை விவசாயம், பேலியோ டயட், ஆன்மீகம், மனிதாபிமானம், உலக சினிமா, உன்னத இலக்கியம் என எல்லா விதங்களிலும் மணிக்கணக்கில் பேசுவார்கள் – ஆலோசனை செய்வார்கள்.
ஆனால் இவற்றையெல்லாம் இணைக்கும் அரசியல் – சமூக வெளியில்தான் அடிப்படை மாற்றம் நடக்க வேண்டும். இதைப்பற்றிக் கேட்டால், எந்தக் கட்சி யோக்கியம் என்று ஒரு வரியில் முடித்து விட்டு போய்விடுவார்கள். இந்த தனிநபர் தாராளவாதிகளின் தாக்குதலுக்குப் பணிந்து வலது இடது கம்யூனிஸ்டுகள், தலித் இயக்கங்கள், தமிழ் அமைப்புக்கள், உள்ளிட்ட பலரும்  தங்களை ‘நாகரீக’மாக மாற்றிக் கொண்டு வருகிறார்கள்.
இதை ‘ஓவியாமயமாக்கம்’ என்றும் கூறலாம். ஆங்கிலப் பத்திரிகைகளில் பலரும், தமிழ் ஊடகங்களில் சிலரும் இத்தகைய ‘நாகரீக’ப்படுத்தும் பணியினை சிரமேற்கொண்டு செய்து வருகிறார்கள்.
கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம், தாழ்த்தப்பட்ட மக்களை சித்தாந்தத்திலும் – செயலிலும் ஒடுக்கும் பாரதிய ஜனதாவோடு இணைகிறது. ராம்விலாஸ் பஸ்வான் மோடியின் நிழலில் இளைப்பாறுகிறார். தீபாவளிக்கும் திருவண்ணாமலை தீபத்திற்கும் சிறப்பிதழ் போடுகிறது சி.பி.எம்மின் தீக்கதிர் நாளிதழ். முரசொலி விழாவில் ரஜினியை மேடையேற்றி அழகு பார்க்கிறது தி.மு.க.
சுரண்டல் லாட்டரி பில்லியனர் மார்ட்டினின் மகன் தமிழர் விடியல் கட்சி நடத்துகிறார். மோடிக்கு பாராட்டு தெரிவிக்கிறார் விடுதலை சிறுத்தைகளின் ரவிக்குமார். ஜக்கி வாசுதேவின் யோகாவைப் பாராட்டுகிறார் தலைவர் திருமாவளவன். பெண்களை போற்றுகிறது என குமுதத்திற்கு பாராட்டு தெரிவிக்கிறார் லீனா மணிமேகலை.

லீனா மணிமேகலை
இறுதியில் அனைவரும் இந்த நாகரீகத்தையும், கண்ணியத்தையும், தனிநபர் சித்தாந்தத்தையும் ஏற்றுக் கொண்டு ஓவியாக்களாகவோ அல்லது தம் சொந்த இயல்பு காரணமாக காயத்ரிக்களாகவோ மாறிவிடுகிறார்கள்.
சமூகக்களத்தில் போராட முன்வராத வரையில், பிக்பாஸ் எனும் மாயச்சிறையில்தான் நீங்கள் காலம் தள்ள வேண்டும். அங்கேயே ஆயுள் தண்டனையோ மரணதண்டனையோ பெற்று வாழ்வை முடித்துக் கொள்ள வேண்டியதுதான்.
ஆதார் வழக்கில் அந்தரங்கம் என்பது அடிப்படை உரிமையில் வராதென வாதிடுகிறது மத்திய அரசு. அந்தரங்கத்தின் பெயரில் குடிமக்கள் தமது நடவடிக்கைகளை மறைப்பது கள்ளத்தனம் என்கிறார் அரசு வழக்கறிஞர். அந்தரங்க உரிமையை பாதுகாப்பது திருட்டுத்தனமல்ல, அது கண்ணியத்திற்குரியது என்று  வாதாடினார் எதிர்தரப்பு வழக்கறிஞர் கோபால் சுப்ரமணியம்.
பிக்பாஸ் நிகழ்ச்சி நமது கண்ணோட்டத்தை கறைப்படுத்தி கண்ணியமே தேவை இல்லை என்கிறது. இழக்கப் போகிறோமா, இயங்கப் போகிறோமா?
(முற்றும்)

இதன் முந்தைய பாகத்திற்கு கீழே உள்ள இணைப்பை சொடுக்கவும் :

கருத்துகள் இல்லை: