திங்கள், 19 ஜூன், 2017

எம் எல் ஏக்கள் குதிரைப்பேரம் ... ஸ்டாலின் கோரிக்கை மீது நடவடிக்கை எடுக்க சபாநாயகருக்கு ஆளுநர் உத்தரவு

சென்னை: கூவத்தூரில் எம்.எல்.ஏக்கள் பேரம் நடத்தியது தொடர்பாக எதிர்க் கட்சித் தலைவர் ஸ்டாலின் கொடுத்த மனு மீது நடவடிக்கை எடுக்க கோரி சட்டசபை சபாநாயகர் மற்றும் தலைமை செயலாளருக்கு பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று உத்தரவிட்டுள்ளார்.
கடந்த பிப்ரவரி மாதம் தமிழக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதில் ரகசிய வாக்கெடுப்பு கோரி நீதிமன்றத்திலும் திமுக மனு தாக்கல் செய்திருந்தது. கடந்த வாரம் தனியார் ஆங்கில செய்தித் தொலைக்காட்சி அதிமுக எம்எல்ஏ-க்கள் சரவணன், கனகராஜ் ஆகியோர் மீது ரகசிய கண்காணிப்பு நடவடிக்கை நடத்தப்பட்டது. கூவத்தூரில் எம்எல்ஏ-க்கள் பேரம் பேசப்பட்டது அம்பலமானது. இதனிடையே மானியக் கோரிக்கைகள் தொடர்பாக சட்டசபை கூடியது. அப்போது கூவத்தூர் பேரம் தொடர்பாக விவாதிக்க திமுக செயல்தலைவர் ஸ்டாலின் சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்தார்.
ஆதாரத்துடன் கோரியும் சபாநாயகர் அனுமதிக்கவில்லை.
இதைத் தொடர்ந்து ஆளுநர் வித்யாசாகர் ராவை முக ஸ்டாலின் கடந்த சனிக்கிழை சந்தித்தார். அப்போது கூவத்தூரில் எம்எல்ஏ-க்கள் பேரம் பேசப்பட்டதால் ஜனநாயகத்தையே கேலிக் கூத்தாக்கியுள்ளதால் அதிமுக அரசை கலைத்து விட்டு மீண்டும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று ஸ்டாலின் மனு அளித்தார்.
இந்நிலையில் ஸ்டாலின் கொடுத்த மனு மீது நடவடிக்கை எடுக்க கோரி சட்டசபை சபாநாயகர் தனபால் மற்றும் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஆகியோருக்கு பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று உத்தரவிட்டுள்ளார். மேலும் ஸ்டாலின் அளித்துள்ள சி.டி. ஆதாரம் குறித்தும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார். ஆளுநரின் உத்தரவால் ஆளும் கட்சி தரப்பு கலக்கத்தில் உள்ளதாக கூறப்படுகிறது. tamiloneindia

கருத்துகள் இல்லை: