திங்கள், 4 ஏப்ரல், 2016

திமுக - அதிமுக கூட்டணி கட்சிகளின் தொகுதி பங்கீடு....இன்று இறுதி விபரம் வெளியாகும்?

இரண்டு பெரிய கட்சிகளான, தி.மு.க., - அ.தி.மு.க., தலைமையிலான கூட்டணியில், இழுபறியில் இருந்து வந்த தொகுதி பங்கீடு பேச்சு, இன்று நல்ல முடிவுக்கு வரும் என்ற நம்பிக்கை, இக்கட்சிகளின் வட்டாரத்தில் ஏற்பட்டு உள்ளது. தி.மு.க., கூட்டணியில் கிடைக்க போகும் தொகுதிகள் எண்ணிக்கையை அறிய காங்கிரசாரும், போயஸ் தோட்ட கதவு திறப்புக்காக, த.மா.கா.,வினரும் ஆவலோடு காத்திருக்கின்றனர். தி.மு.க., - காங்கிரஸ் இடையேயான, தொகுதி பங்கீட்டை இறுதி செய்ய, இன்று காலை, தி.மு.க., தலைவர் கருணாநிதியை, அவரது கோபாலபுரம் இல்லத்தில், காங்கிரஸ் மேலிட தலைவர் குலாம்நபி ஆசாத் சந்தித்து பேசுகிறார். காங்கிரசுக்கு, 40 முதல், 43 தொகுதிகள் வரை ஒதுக்கீடு செய்யப்படும் என்றும், அதுபற்றிய, தி.மு.க.,வின் அதிகாரப்பூர்வ தகவலுக்காக காத்திருப்பதாகவும், காங்கிரசார் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

அதை உறுதி செய்த, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலினும், ''ஆசாத்துடனான சந்திப்புக்கு பின், தி.மு.க., - காங்., தொகுதி பங்கீடு இறுதி செய்யப்படும்,'' என்றார்.இதேபோல, அ.தி.மு.க., கூட்டணியில் சேரும் முடிவெடுத்து, அக்கட்சித் தலைமையின் அழைப்புக்காக, த.மா.கா., தலைவர் வாசன் நீண்ட நாட்களாக காத்திருக்கிறார்.

இதற்கிடையில், இரு கட்சிகளுக்கும் இடையே நடந்த, அதிகாரப்பூர்வமற்ற பேச்சில் இழுபறி ஏற்பட்டது. எத்தனை தொகுதிகள், என்ன சின்னம் என்பதில் உடன்பாடு ஏற்படாமல் போனது தான்,
இழுபறிக்கு காரணம்.

இந்நிலையில், 25 தொகுதிகள் கேட்ட த.மா.கா.,வுக்கு, 15 - 20 தொகுதிகள் வரை ஒதுக்க, அ.தி.மு.க., தலைமை முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல, இரட்டை இலை சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும் என்ற நிபந்தனை தளர்த்தப்பட்டு, தென்னந்தோப்பு சின்னத்தில், த.மா.கா., போட்டியிடுவதற்கும், அ.தி.மு.க., தலைமை சம்மதித்து விட்டதாக கூறப்படுகிறது.

த.மா.கா., தரப்பில் கூட்டணி பேச்சு நடத்தி வந்த, பட்டுக்கோட்டை எம்.எல்.ஏ., ரங்க
ராஜனும், வாசனும், நேற்றே போயஸ் தோட்டம் செல்ல தயாராக இருந்தனர். நாள் சரியில்லை என்பதால், சந்திப்பு ரத்தானது. இன்று அழைப்பும், சந்திப்பும் உறுதி என, அ.தி.மு.க., தரப்பில் கூறப்பட்டுள்ளதால், த.மா.கா., வட்டாரம் உற்சாகம் அடைந்துள்ளது.

இதுகுறித்து, த.மா.கா., மூத்த நிர்வாகி ஒருவர் கூறுகையில், 'இன்று அனேகமாக அழைப்பு வந்து விடும். ஒருவேளை மாற்றம் ஏற்பட்டால், 7ம் தேதி அமாவாசை அன்று, ஜெயலலிதா - வாசன்
சந்திப்பு நடக்கும்' என்றார்.

வாசனுக்கு 'சீட்' விஜயகாந்த் கைவிரிப்பு
தே.மு.தி.க.,- - மக்கள் நல கூட்டணி இணைந்து, தேர்தலை சந்திக்க முடிவு செய்துள்ளன. தே.மு.தி.க., 124 தொகுதிகளிலும், ம.ந.கூட்டணி, 110 தொகுதிகளிலும் போட்டியிடுவது என, முடிவெடுக்கப்பட்டது. மேலும், கூட்டணியில் த.மா.கா.,வை சேர்க்க, ம.ந.கூ., தலைவர்கள் விரும்பினர். தே.மு.தி.க., தனக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் இருந்து, வாசனுக்கு பகிர்ந்தளிக்கும் என்றும் கூறினர். ஆனால், தங்களுக்கு ஒதுக்கிய தொகுதிகளில் இருந்து, த.மா.கா.,வுக்கு, ஒரு தொகுதியை கூட ஒதுக்க முடியாது என, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் கறாராக கூறியுள்ள தகவல் வெளியாகி உள்ளது.

- நமது சிறப்பு நிருபர் -  தினமலர்.com

கருத்துகள் இல்லை: