செவ்வாய், 16 ஆகஸ்ட், 2011

யாழ் எம்.பி.க்கள் குறைப்பு அரசியலமைப்புக்கு எதிரான விடயம் : சட்ட நிபுணர்கள்



யாழ்ப்பாண மாவட்ட எம்.பி.க்களின் ஆசன எண்ணிக்கையைக் குறைப்பது தொடர்பான தேர்தல் ஆணையாளரின் அண்மைய நடவடிக்கை குறித்து விசனங்களையும் ஆட்சேபனைகளையும் எதிரணிக் கட்சிகள் தெரிவித்து வரும் நிலையில், இந்த விடயமானது அரசியல் அமைப்புக்கு எதிரானதென சட்ட நிபுணர்கள் கூறியுள்ளனர். முப்பது வருட காலமாக நீடித்திருந்த மோதலின் பின்னர் ஏற்பட்டிருக்கும் சமாதானத்திற்கு இந்த நடவடிக்கை கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என அவர்கள் கூறியுள்ளனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்த விடயம் குறித்து சட்ட நடவடிக்கையெடுக்க பரிசீலித்துக் கொண்டிருக்கிறது.

யாழ்ப்பாண மாவட்ட எம்.பி.க்களின் எண்ணிக்கையை 9 லிருந்து 6 ஆகக் குறைப்பதற்கான தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரியவின் தீர்மானத்துக்கு எதிராக சட்ட நடவடிக்கையெடுப்பது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பரிசீலித்து வருவதாக அக்கட்சி எம்.பி.யும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் கூறியுள்ளார். அதேவேளை, இடம்பெயர்ந்த மக்களுக்கு வாக்குரிமையை இழக்கச் செய்வதற்கான நடவடிக்கையாக இந்த எம்.பி.க்கள் குறைப்பு விடயம் அமையும் என்று முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா தெரிவித்திருக்கிறார்.
தேர்தல் இடம்பெறாமல் இருந்தபோது இந்த மாதிரியான நடவடிக்கைகளை எடுத்திருக்க முடியும். அரசியலமைப்பின் சரத்து 98 (9) இன் கீழ் இதனை மேற்கொண்டிருக்க முடியும்.ஆனால்,அடுத்த ஐந்து வருடங்களுக்கு தேர்தல்கள் இல்லாத நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றது என்று முன்னாள் நீதியரசர் சரத் என் சில்வா கூறியுள்ளார்.
நீண்டகாலத்துக்கு பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய விதத்தில் தேர்தல் அதிகாரிகள் துரிதமான நடவடிக்கையை எடுத்துள்ளனர் என்று சில்வா கூறியுள்ளார். இனப்பிரச்சினையை இந்த விடயம் தூண்டக்கூடியதாக அமையும். தமிழர்களுக்கு எதிராக பாரபட்சத்தை இழைக்கும் நடவடிக்கையென மேற்குலகத்துக்கும் இந்தியாவுக்கும் தெரிவித்த செய்தியாக இது அமைந்துவிடும். நாட்டின் ஏனைய பகுதிகளிலும் கொழும்பிலும் வெளிநாடுகளிலும் பெரும் எண்ணிக்கையான வாக்காளர்கள் இருக்கும் அதேசமயம், அதிகளவு இடப்பெயர்வுகளும் ஏற்பட்டுள்ளன. இதனை தேர்தல் ஆணையாளர் கவனத்தில் கொண்டிருக்க வேண்டும் என்று சரத் என் சில்வா தெரிவித்துள்ளார்.
1981 இல் யாழ்.மாவட்ட எம்.பி.க்களுக்கான ஆசனங்கள் 11 ஆக இருந்தன. பின்னர் படிப்படியாக அவை குறைக்கப்பட்டன. வாக்காளர்களின் எண்ணிக்கையின் அடிப்படையிலேயே ஆசனங்கள் குறைக்கப்பட்டிருப்பதாக தேர்தல் ஆணையாளர் தெரிவித்திருந்தார்.ஆனால், இந்த நடவடிக்கை குறித்து எதிர்க்கட்சிகளும் சிவில் அமைப்புகளும் கவலையும் விசனமும் வெளியிட்டுள்ளனர். இந்தத் தீர்மானத்தை மீள்பரிசீலனை செய்யுமாறு அவை தேர்தல் ஆணையாளரைக் கேட்டுள்ளன. அதேவேளை, சுயாதீன தேர்தல் கண்காணிப்பாளர்களும் தேர்தல் ஆணையாளரின் தீர்மானம் குறித்து கடும் கவலையைத் தெரிவித்திருக்கின்றனர்.

கருத்துகள் இல்லை: