ஞாயிறு, 31 ஜூலை, 2011

புலம்பெயர் மக்களை வாக்காளராக பதிய தேர்தல் ஆணையாளர் இணக்கம் : ஆர். யோகராஜன்!

புலம் பெயர் மக்களை வாக்காளராகப் பதிவதற்கு தேர்தல் ஆணையாளர் இணக்கம் தெரிவித்திருப்பதாக ஐ.தே.க நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். யோகராஜன் தெரிவித்தார். யாழ். மாவட்டத்தில் நான்கு நாடாளுமன்ற ஆசனங்கள் குறைக்கப்பட்டுள்ளது தொடர்பில்தான் தேர்தல் ஆணையாளரை நேரில் சந்தித்த போதே அவர் இவ்வாறு இணக்கம் தெரிவித்ததாகக் குறிப்பிட்ட யோகராஜன் இது சம்பந்தமாக மேலும் தெரிவித்ததாவது,

இலங்கையில் உள்ள மொத்த 225 ஆசனங்களில் 29 ஆசனங்கள் தேசியப்பட்டியலுக்காக ஒதுக்கப்படுகின்றன. மிகுதியுள்ள 196 ஆசனங்களில், ஒரு மாகாணத்துக்கு நான்கு வீதமாக ஒன்பது மாகாணங்களுக்கும் 36 ஆசனங்கள் ஒதுக்கப்படுகின்றன.
இலங்கையின் மொத்த வாக்காளர் தொகை 160 ஆசனங்களால் பிரிக்கப்பட்டு ஒரு ஆசனத்திற்குரிய வாக்காளர்களின் எண்ணிக்கை தீர்மானிக்கப்படுகின்றது. இந்த ஒரு ஆசனத்திற்குரிய வாக்காளர் தொகையினால் ஒரு மாகாணத்திலுள்ள வாக்காளர் தொகையை பிரித்தே ஒரு மாகாணத்துக்குரிய நாடாளுமன்ற ஆசனங்களின் தொகை தீர்மானிக்கப்படுகின்றது. இதுவே தேர்தல் விதிமுறைகள் சம்பந்தமாக யாப்பில் உள்ள சரத்துக்களாகும்.
2010 ஆம் ஆண்டில் யாழ். மாவட்டத்தில் பதியப்பட்டுள்ள வாக்காளர்கள் தொகைக் கிணங்க தேர்தல் ஆணையாளருக்குள்ள அதிகாரங்களின் அடிப்படையிலே யாழ். மாவட்டத்திற்கு நான்கு ஆசனங்கள் குறைக்கப்பட்டுள்ளதுடன் ஏனைய சில மாவட்டங்களுக்கு சில ஆசனங்கள் அதிகரித்துள்ளன.
இது குறித்து ஊடகங்களினூடாகப் பொதுமக்களுக்கு விளக்கமளிக்கும் படியும் தான் தேர்தல் ஆணையாளரை கேட்டுக் கொண்டதாகவும் குறிப்பிட்ட யோகராஜன் மேலும் தெரிவித்ததாவது,
இந்தியாவில் அகதிகளாக சுமார் 80,000 பேர் இலங்கை அதிகளாகத் தங்கியுள்ளார்கள். அவர்களுக்கு இந்தியாவில் குடியுரிமை பெற்றுக் கொள்வது சாத்தியமில்லை. அவர்களையும் வாக்காளராகப் பதிவதற்கும் அனுமதியளித்தல் வேண்டும்.
அதே போன்று வெவ்வேறு நாடுகளிலும் புலம் பெயர் தமிழர்களாக சுமார் 10 இலட்சம் வரை தமிழ்ப் பேசும் மக்கள் வாழ்ந்து இவர்களில் அந்தந்த நாடுகளிலே குடியுரிமை பெற்றுக் கொண்டவர்களைத் தவிர ஏனையவர்களை இலங்கையில் வாக்காளராக பதிவதற்கு அனுமதித்தல் வேண்டும்.
இது சம்பந்தமான தமது கோரிக்கைக்கு தேர்தல் ஆணையாளர் இணக்கம் தெரிவித்துள்ளதுடன் தற்போது வாக்காளர் பட்டியல்கள் புதுக்கப்பிட்டு வருகின்றன. நவம்பர் மாதத்தில் வாக்காளர் பட்டியலில் தமது பெயர் சேர்க்கப்படவில்லை எனக் கண்டால் மேன்முறையீடு செய்து தமது பெயரைச் சேர்த்துக் கொள்ளலாமென ஆணையாளர் தெரிவித்ததாகவும் குறிப்பிட்டார்.
இது குறித்து மேலும் விளக்கமளித்த யோகராஜன் யாழ் நாடாளுமன்ற ஆசனக்குறைப்பு சம்பந்தமாக சட்ட நவடிக்கை எடுப்பதாக சிலர் கூறிவருகின்றார்கள். யாப்பின்படியே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதினால் சட்டநடவடிக்கைகளினால் ஆகப்போவது ஒன்றுமில்லை. மாறாக நடைமுறை சாத்தியமான வழிகளினால் நமது வாக்குப் பலத்தை அதிகரித்துக் கொள்ள நாம் முயலவேண்டும்

கருத்துகள் இல்லை: