சென்னை: தனது மகள் வீட்டை விட்டுவெளியேற காரணமாக இருந்தார்கள் என்று கூறி 3 இளைஞர்களை வீட்டுக்கு வரவழைத்து அறையில் போட்டு அடைத்து சரமாரியாக தாக்கிய பெண்ணை போலீஸார் கைது செய்துள்ளனர்.
சென்னை ஆதம்பாக்கம் சுரேந்தர்நகர் 6-வது தெருவை சேர்ந்தவர் லீலாவதி (48). இவர் வாழ்க வளமுடன் என்றஅமைப்பின் தலைவியாம். இவருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
லீலாவதியின் நடத்தை சரியில்லை என்று கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த மகள் வீட்டை விட்டு வெளியேறினார். வீட்டைவிட்டு வெளியேறிய அவர், ஆந்திர மகிளா சபா பெண்கள் காப்பகத்தில் தஞ்சமடைந்தார்.
இதையடுத்து போலீஸில் புகார் கொடுத்தார் லீலாவதி. போலீஸாரும் காப்பகம் சென்று லீலாவதியின் மகளிடம் பேசினர். தாயாருடன் சேர்ந்து வசிக்குமாறு அறிவுறுத்தினர். ஆனால் தனது தாயாரின் நடத்தை சரியில்லாததால், அவருடன் போக விருப்பமில்லை என்று கூறி விட்டார் லீலாவதியின் மகள்.
இதனால் ஆத்திரமடைந்தார் லீலாவதி. தனது மகள் வீட்டை விட்டு வெளியேற அவரது நண்பர்களான நங்கநல்லூர் மோசஸ் (24) ஆதம்பாக்கம் சார்லஸ் என்ற ஷாஜகான் (23), ஆலந்தூர் ஜூடு (23) ஆகிய மூவரும் தான் காரணம் என்று லீலாவதி நினைத்தார்.
இதையடுத்து மூன்று பேரையும் வீட்டுக்கு வருமாறு கூறினார். அவர்களும் வந்தனர்.அப்போது அவர்களிடம்தனது மகள் குறித்து கேட்டார். பின்னர் வீட்டுக் கதவை மூடியஅவர் மூன்று பேரையும் சரமாரியாக அடித்து உதைத்தார்.
அத்தோடு நில்லாமல் மூன்று பேரையும் அறைக்குள் போட்டு அடைத்தார். பின்னர் தனது நண்பரான ஜானை வரவழைத்தார். பின்னர் லீலாவதி, அவரது மகன் சுகுமார், ஜான் ஆகியோர் மூன்று இளைஞர்களையும் சரமாரியாக அடித்து உதைத்தனர்.
இதில் மூன்று இளைஞர்களும் படுகாயமடைந்தனர். பின்னர் அவர்களில் சார்லஸை மட்டும் ஒரு காரில் ஏற்றிக் கொண்டு லீலாவதி கும்பல் வெளியில் கிளம்பியது.
அவர்கள் சென்ற பின்னர் மோசஸ் தனது செல்போன் மூலம் தனது நண்பர்களுக்குத் தாங்கள் அடைத்து வைக்கப்பட்டு தாக்கப்படுவதாக தகவல் தெரிவித்தார். இதையடுத்து அவர்கள் போலீஸாருக்கு தெரிவித்தனர்.
போலீஸார் உடனடியாக விரைந்து வந்து 2 பேரையும் மீட்டனர். பின்னர் லீலாவதி கும்பல் மேடவாக்கம் பகுதியில் பதுங்கியிருப்பது தெரிய வந்து அங்கு விரைந்து அவர்களிடம் சிக்கியிருந்த சார்லஸை மீட்டனர். பின்னர் லீலாவதி, ஜான், சுகுமாரைக் கைது செய்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக