ஈரோடு மாவட்ட காங்கிரஸ் செயல் வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்க மாநில காங்கிரஸ் தலைவர் தங்கபாலு வந்தபோது அவரை சுற்றி முற்றுகையிட்ட காங்கிரஸார் (முன்னாள் அமைச்சர் ஈவிகேஎஸ் இளங்கோவன் ஆதரவாளர்கள்) வேண்டாம், வேண்டாம் திமுக கூட்டணி வேண்டாம் என்று கூறி கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஈரோட்டில் இன்று நடந்த காங்கிரஸ் செயல் வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக தங்கபாலு அங்கு வந்தார். அப்போது அவரை திமுகவுக்கு எதிராக கடுமையான நிலைப்பாட்டை கொண்டிருக்கும் இளங்கோவனின் ஆதரவாளர்கள் முற்றுகையிட்டனர்.
நூற்றுக்கணக்கானோர் கூடி தங்கபாலுவை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அவர்கள் அனைவரும் வேண்டாம், வேண்டாம் திமுக கூட்டணி வேண்டாம் என்று உரத்த குரலில் கோஷமிட்டனர். கிட்டத்தட்ட கால் மணி நேரம் இது நீடித்ததால் தங்கபாலு கடும் டென்ஷனடைந்தார்.
இத்தனைக்கும் தங்கபாலுவுடன் ஈவிகேஎஸ் இளங்கோவனும் உடன் வந்திருந்தார். ஆனால் அவர் கோஷமிட்டுக் கொண்டிருந்த தொண்டர்களை சமாதானப்படுத்தாமல் அமைதியாக நின்று கொண்டிருந்தார்.
இந்த நிலையில், கோஷமிட்ட தொண்டர்களை கண்டு கொள்ளாமல், அங்கிருந்து வெளியேறி தனது காருக்குப் போனார் தங்கபாலு. ஆனாலும் விடாமல் அவரைப் பின் தொடர்ந்து சென்று திமுக கூட்டணி வேண்டாம் என்று தொண்டர்கள் கோஷமிட்டனர்.
பின்னர் அவர்கள் அனைவரும் அங்கிருந்த சாலையில் உட்கார்ந்து திமுக கூட்டணி வேண்டாம் என்று கூறி சாலை மறியலிலும் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக