புதன், 27 அக்டோபர், 2010

இரண்டு தமிழர்கள் வெற்றி!!மார்க்கம் நகரசபை தேர்தலில்

ரொறன்ரோ தேர்தல் முடிவுகள்! ரொப் போர்ட் மேயராகத் தெரிவு!
  இரண்டு தமிழர்கள் வெற்றி!!
(சாகரன்)
ரொறன்ரோ மாநகரசபைத் தேர்தல்கள் கனடிய நேரப்படி இன்றிரவு 8 மணிக்கு முடிவுற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதன்பிரகாரம் ரொப் போட் ரொறன்ரோவின் மேயராக ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட பெரும்பான்மை வாக்குகளால் தெரிவு செய்யப்பட்டார்.
இதேவேளை கவுன்சிலர் பதவிக்கான தமிழ் வேட்பாளர்களில் 'நம்பிக்கை' நட்சத்திரமாகக் கருதப்பட்ட நீதன் சாண் என்பவர் எதிர்பார்த்தளவு வாக்குகளைப் பெறவில்லை. இவர் ரொறன்ரோ ஸ்ரார், குளோப் அன்ட் மெயில் ஆகிய இரு பத்திரிகைகளினால் பரிந்துரைக்கப்பட்டவராக இருந்த போதிலும் 19 வருடங்களாக அப் பிரதேச கவுன்சிலராக இருக்கும் றேமன்ட் சோ என்பவர் இந்த முறையும் இலகுவாக வெற்றிக் கணியைத் தட்டிக் கொண்டார்.
இன்னொரு வேட்பாளரான பார்த்தி கந்தவேல் என்பவர் வெற்றிபெற்றவருக்கு மிக நெருக்கமான போட்டியை கொடுத்த ஒரு வேட்பாளராக காணப்பட்டார். அதே போன்று அஸ்வின் பாலசுப்பிரமணியம் என்ற வேட்பாளரும் கணிசமான வாக்குகளைப் பெற்றிருந்தார்.
நமு பொன்னம்பலம், ரோய் விக்னராஜா, ரோஜ் ரட்ணவேல், வேந்தன் ராமநாத வவுனியன் போன்ற வேட்பாளர்களும் இந்தத் தேர்தலில் குறிப்பிடத்தக்க போட்டியை வெற்றி பெற்றவர்களிற்குக் கொடுத்து தோல்வியைத் தழுவியிருந்தார்கள்.
ரொப் போட் அவர்களின் பிரச்சாரப் பணிகளிற்கான குழுவாக பணியாற்றிய சாம்; அசோகன், சிறினிவாசன், சுரேன் சிவா, ரேவதி சாமிநாதன் ஆகியோரது அணிகளின் முயற்சியால் ரொப் போட் அவர்களின் முகாமை தமிழர்கள் சார்பாக மாற்றுவதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சி வெற்றி பெற்றதையிட்டு ரொறன்ரோ மக்கள் மகிழ்ச்சி தெரிவித்திருந்தனர்.
கனடா மார்க்கம் நகரசபைத் தேர்தலில் இரண்டு தமிழர்கள் வெற்றி!
கனடாவின் ரொறன்ரோ மாநகரசபைக்கு அண்மித்த பிரதேசமான மார்க்கம் நகரசபைத் தேர்தலில் இரண்டு தமிழர்கள் வெற்றியீட்டியுள்ளனர்.
இது தமிழர்களிற்கு கனடா தழுவிய ரீதியில் கிடைத்த வெற்றிகளாகும். இதேவேளை இன்னொரு நகரான மிசசாகாவிற்கான மேயராகப் போட்டியிட்ட தமிழரான ராம் செல்வராசா தோல்வியைத் தழுவிக் கொண்டுள்ளார்.
உள்ளூராட்சிச் சபைக்கு 2006ம் ஆண்டு தெரிவான தமிழரான திரு.லோகன் கணபதி இம்முறை மார்க்கம் ஏழாம் வட்டாரத்தில் மீண்டும் வெற்றி பெற்றுள்ளார். திரு. லோகன் கணபதி 3,558 வாக்குகளையும் அவருக்கு அடுத்த இடத்தில் உள்ளவர் 2,768 வாக்குக்களையும் பெற்றார்.  இதேவேளை இதே தேர்தலில் இப் பிரதேசத்திற்கான கல்விச்சபையை பிரதிநிதித்துவப்படுத்தும் தேர்தலில் முதன்முறையாகப் போட்டியிட்ட செல்வி. யுவனிதா நாதன் 8,252 வாக்குக்களைப் பெற்றுத் தெரிவானார். இவரை எதிர்த்துப் போட்டியிட்டவர் 1,968 வாக்குகளைப் பெற்றார்.
வலதுசாரி தீவிர வலதுசாரிச் சிந்தனையாளரான மேயர் ரொப்  போர்ட் இன் வெற்றி ரொறன்ரோ மாநகரத்தில் வாழும் மக்களுக்க மேலும் வாழ்க்கைச்சுமைகளை ஏற்படுத்தலாம் என அரசியல் அவதானிகள் கருத்து தெரிவிக்கின்றனர். மேலும் குடியேற்றவாசிகள் அதிகம் வாழும் இப் பிரதேசத்தில் மேயர் ரொப்  போர்ட் இனால் உருவாக்கப்படும் புதிய வரிச்சுமைகள் மறைமுகமாக இவ் குடியேற்றவாசிகளை மையப்படுத்தியதாக அமையலாம். புலிகளின் ஏகபோகம் உடைக்கப்பட்டுள்ளதை இடதுசாரி சிந்தனைப் புலி எதிர்பாளர்கள் பெற்ற வாக்குகள் எடுத்தியம்பி நிற்கின்றன. இது நம்பிக்கை தரும் ஒரு நிகழ்வாகும். கனடா போன்ற நாடுகளில் பணம் படைத்தவர்கள் மட்டும் தேர்தலில் வெல்லும் முறமைகள் நிறையவே உள்ளதை இத் தேர்தலிலும் தமிழர் இருவரின் வெற்றி காட்டி நிற்கின்றது. மேலும் 4 வருடங்களில் இவர்கள் தங்களைப் பலப்படுத்தும் வேலைகளை திறம்பட செய்து முடிப்பர்.
பிரதான போட்டியாளர் ஜோர்ஜ் சிமிதமன் இன் தோல்வி கடும் கோட்பாட்டு கத்தோலிக்க நிறுவனங்களின் வெற்றியாகவும் ஒரு பால் திருமணத்திற்கான முழுமையான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்ற மக்களின் சிந்தனையாகவும் பார்க்கப்படுகின்றது.
புலம் பெயர் தேசங்களில் வாழும் தமிர்கள் தமது வாழ்வுத் தரத்தின் அடிப்படையில் தீவிர வலது சாரி செயற்பாடுகளை மேலும் வளர்த்துக் கொள்வதை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது.
89 வயதான மக்கோலின் என்ற பெண்மணி 12 வது முறையாக மிசிசாக்கா மேயராக தொடர்ந்தும் வெற்றி பெற்றுள்ளார். இவர் தனக்கு அடுத்தபடியாக வந்தவரை விட மிக அதிகப்படியான வாக்குகளை பெற்றுள்ளார். மொத்தத்தில் 76 வீத வாக்குகளை பெற்றுள்ளார்.

கருத்துகள் இல்லை: