சரணடைந்து படையினரால் தடுக்கப்பட்டு, புனர்வாழ்வளிக்கப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் சில உறுப்பினர்களும் ஆதரவாளர்களும் மீண்டும் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இது வரையில் பத்துக்கு மேற்பட்டோர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர் என உறவினர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த ஆண்டு நடைபெற்ற இறுதிப் போரின் போது கைது செய்யப்பட்ட மற்றும் சரணடைந்த விடுதலைப் புலிப் போராளிகள் படையினரின் புனர்வாழ்வு முகாம்களில் புனர்வாழ்வளிக்கப்பட்ட பின்னர் கட்டம் கட்டமாக விடுவிக்கப்பட்டு வருகின்றனர்.
இவ்வாறு அரசாங்கத்தினால் மன்னிப்பளித்து விடுவிக்கப்பட்டு வரும் விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்களில் சிலர் மீண்டும் புலனாய்வுப் பிரிவினால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைக்காக கொழும்புக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
இவ்வாறு மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளோரில் ஆண், பெண் முன்னாள் போராளிகள் மற்றும் விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்களாகச் செயற்பட்டதாகக் கருதப்படுவோரும் அடங்குகின்றனர்.
நெடுந்தீவு, பருத்தித்துறை, கிளிநொச்சி, மன்னார், யாழ்ப்பாணம் போன்ற பிரதேசங்களில் இருந்து இந்தக் கைதுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
இவ்வாறு கைது செய்யப்பட்டு கொண்டு செல்லப்பட்ட சந்தேக நபர்களைப் பற்றிய தகவல்களைப் பெறுவதில் சிரமங்களைத் தாம் எதிர்நோக்கியுள்ளதாக கைது செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
எனினும் கைது செய்யப்படும்போது சட்டரீதியான முறைப்படி தகுந்த ஆதாரங்களுடனும் பொலிஸ் தரப்பினருடனும் வந்தே படையினர் மேற்படி சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைக்காக அழைத்துச் சென்றனர் என்றும் கைது செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
எனினும் கைது செய்து கொண்டு செல்லப்பட்டமை தொடர்பாகவும் கைது செய்யப்பட்டோரின் நிலையைப் பற்றியும் யாரிடம் றைப்பாடு தெரிவிப்பது என்று தமக்குத் தெரியவில்லை என்றும் உறவினர்கள் கூறுகின்றனர்.
படையினரால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டோரில் உடல் உறுப்புகளை இழந்தவர்கள், குடும்ப உறுப்பினர்களை இழந்தவர்கள் என்போரும் உள்ளனர்.
இவ்வாறு மேற்கொள்ளப்படும் கைதுகளால் விடுவிக்கப்பட்ட மற்றும் விடுவிக்கப்படும் முன்னாள் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களின் குடும்பத்தினரிடையே பதற்றமும் கவலையும் தோன்றியுள்ளன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக