திங்கள், 18 ஜூலை, 2022

அமெரிக்காவில் முகாமிட்ட அரசு குழு - தங்கம் தென்னரசு தலமையில் நிறுவனங்களுடன் ஆலோசனை

 Noorul Ahamed Jahaber   -  Google Oneindia Tamil :   வாஷிங்டன்: தமிழ்நாட்டில் ஆய்வு மற்றும் மேம்பாட்டுதுறையில் கூடுதல் முதலீடுகளை ஈர்க்க அமெரிக்காவில் பன்னாட்டு நிறுவனங்களுடன் தமிழ்நாடு அரசு குழு ஆலோசனை நடத்தி வருகிறது.
கடந்த 2021 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த திமுக அரசு தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை வளர்க்கவும், சர்வதேச நிறுவனங்களை தொழில் தொடங்க அழைக்கவும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில் MADE IN TAMILNADU என்ற பெயரில் தமிழ்நாட்டின் உற்பத்தியை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.


துபாய் எக்ஸ்போ தொழிற் கண்காட்சி கடந்த மார்ச் மாதம் நிறைவடைந்தது. 192 நாடுகள் கலந்துகொண்ட இந்த கண்காட்சியில் கடந்த மார்ச் 26, 27 ஆகிய நாட்களில் தமிழ்நாடு அரசின் அரங்கம் அமைக்கப்பட்டது. அதில், தமிழ்நாடு அரசின் சார்பில் கைத்தறி, விவசாயம் உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கான அரங்குகள் அமைக்கப்பட்டன.

அதனை தொடர்ந்து கடந்த மே 30 ஆம் தேதி ஜெர்மனியில் உலக புகழ்பெற்ற ஹன்னோவர் மெஸ்ஸே (Hannover Messe) என்ற தொழில் கண்காட்சி நடைபெற இருக்கிறது.
ஜூன் 2 ஆம் தேதி வரை நடைபெற இருக்கும் இந்த தொழில் கண்காட்சியில் பல உலக நாடுகள், சர்வதேச நிறுவனங்கள் கலந்துகொண்டன.

அமெரிக்காவில் தொழில்துறை அமைச்சர் தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை ஒரு டிரில்லியன் டாலர் கொண்டதாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டு வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பல்வேறு துறைகளின் கீழ் அந்நிய முதலீடுகளை ஈர்க்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இதற்காக அமெரிக்கா சென்றுள்ள தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையிலான குழு பல முன்னணி நிறுவனங்களின் தலைவர்களை சந்தித்தது. குறிப்பாக ஆய்வு மற்றும் மேம்பாட்டுத் துறைகளில் அந்நிய முதலீடுகளை ஈர்க்கும் வகையில் நிறுவனங்களின் தலைவர்களை சந்தித்து தமிழ்நாடு அரசு குழு ஆலோசனை மேற்கொண்டது.

அமேசான், மைக்ரோசாப்ட் உள்ளிட்ட நிறுவனங்களின் தலைமை அதிகாரிகளை சந்தித்த குழுவினர், தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவது குறித்து ஆலோசித்தனர். இந்த மாதத்தின் தொடக்கத்தில் வெளியிடப்பட்ட தொழிற்கொள்கையில், ஆய்வு பூங்காக்கள், ஆராய்ச்சி மையங்கள், கண்டுபிடிப்பு மையங்கள் போன்றவற்றை நிறுவவும் ஆய்வு மற்றும் மேம்பாட்டுத்துறையில் உள் கட்டமைப்புகளை வளர்க்க ஆராய்ச்சியாளர்கள், விஞ்ஞானிகளின் எண்ணிக்கையை அதிகரித்து புதிய கண்டுபிடிப்புகளை கொண்டு வர வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

குறிப்பாக சன்மினா நிறுவன அதிகாரிகளிடம் தமிழ்நாட்டில் எலெக்டிரானிக் உற்பத்தித்துறை வளர்ச்சியில் அவர்களின் பங்கு குறித்து ஆலோசிக்கப்பட்டது. அத்துடன், இண்டெல் ஃபவுண்ட்ரி சர்வீசஸ் நிறுவன அதிபர் ரந்தின் தாக்கூரிடம் செமிகண்டக்டர் உற்பத்தி தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டனர். அதேபோல் பிரபல தொழில்நுட்ப நிறுவனமான ஃப்ரஸ்வொர்க்ஸ் நிறுவனர் கிரிஷ் மாத்ருபூதத்திடமும் தமிழ்நாடு குழு ஆலோசித்துள்ளது. இந்த சந்திப்பில் அதிகாரப்பூர்வ ஒப்பந்தங்கள் எதுவும் கையெழுத்தாகவில்லை. ஆனால் இது எதிர்கால முதலீடுகளுக்கு உதவும் என்று கூறப்படுகிறது

கருத்துகள் இல்லை: