நக்கீரன் செய்திப்பிரிவு : கள்ளக்குறிச்சி அடுத்த சின்னசேலத்தில் தனியார் பள்ளியில் படித்து வந்த பன்னிரெண்டாம் வகுப்பு மாணவி உயிரிழப்பில் மர்மம் நீடிப்பதாக மாணவியின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அங்கு பாதுகாப்புக்கு வந்திருந்த காவல்துறை வாகனம் மீது போராட்டக்காரர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தியதால் அங்கு அசாதாரண சூழல் நிலவி வருகிற நிலையில் போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டனர்.
தற்போது நடைபெற்ற பிரேப் பரிசோதனை அறிக்கையில் தெளிவு இல்லை எனக்கூறி கடந்த ஐந்து நாட்களாக மாணவியின் உடலைப் பெறாமல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்று நடைபெற்ற கல்வீச்சு அங்கு பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. முதற்கட்டமாக தடியடி நடத்தி போலீசார் போராட்டக்காரர்களை அப்புறப்படுத்த நினைத்த நிலையில் போராட்டம் கட்டுக்கடங்காததால் காவல்துறையினர் வானத்தை நோக்கி துப்பாக்கிசூடு நடத்தி போராட்டக்காரர்களை எச்சரித்தனர்.
மேலும் போராட்டக்காரர்கள் அங்கு இருந்த காவல்துறை வாகனத்திற்கு தீ வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. போராட்டத்தில் மேலும் பலர் குவிந்து வருவதால் அங்கு பதற்றமான சூழ்நிலை தொடர்ந்து வருகிறது. இந்த கலவரத்தில் டி.ஐ.ஜி பாண்டியன் உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் காயமடைந்துள்ளனர்.
'பள்ளி வளாகத்தை தாக்குவது, காவல் வாகனத்தை தாக்குவது, காவல்துறையினரை தாக்குவது போன்ற சம்பவங்களை தொடர்ந்து நடத்தினால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். வீடியோ பதிவு ஆதாரங்களுடன் பிற்காலத்திலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்போம்' என தமிழக டிஜிபி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தற்பொழுது கலவரம் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில் கள்ளக்குறிச்சி தாலுகாவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார். அதேபோல் பாதுகாப்பிற்காக அண்டை மாவட்ட போலீசாரும் குவிக்கப்பட்டுள்ளனர். செய்தியாளர்களைச் சந்தித்த கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர், ''இரண்டு மூன்று நாட்களாக போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. அவர்களிடம் நாம் பேச்சுவார்த்தையில் தான் இருந்தோம். இன்று பல்வேறு குழுவினர்கள் வாட்ஸ் அப் குழுக்கள் மூலமாக திடீரென அசம்பல் ஆகிவிட்டார்கள். இதனால் வன்முறை சம்பவங்கள் காலை நிகழ்ந்துவிட்டது. காவல்துறை பாதுகாப்பு இரண்டு மூன்று நாட்களாக கொடுத்துக் கொண்டுதான் இருந்தோம். ஆனால் போராட்டக்காரர்கள் எண்ணிக்கை நாம் எதிர்பார்த்ததை விட அதிகமாக இருந்ததால் இந்த சம்பவம் நிகழ்ந்து விட்டது'' என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக