வீரகேசரி : இலங்கையின் 8வது புதிய ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாக்குகளினால் தெரிவு செய்யப்பட்டுள்ளார் என நாடாளுமன்ற பொதுச் செயலாளரும், தெரிவத்தாட்சி அதிகாரியுமான தம்மிக்க தஸநாயக்க சபையில் அறிவித்தார்.
ரணில் விக்ரமசிங்கவிற்கு 134 வாக்குகளும், டளஸ் அழகபெருமவிற்கு 82 வாக்குகளும், தேசிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்ட அநுர குமார திஸாநாயக்கவிற்கு 3 வாக்குகளும் கிடைத்துள்ளன.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, நாட்டு மக்களின் எதிர்ப்புக்கு மத்தியில், நாட்டை விட்டு வெளியேறியிருந்தார்.
இதையடுத்து, சிங்கப்பூர் சென்ற கோட்டாபய ராஜபக்ஷ, கடந்த 14ம் தேதி தனது விலகல் கடிதத்தை, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிற்கு அனுப்பியிருந்தார்.
இந்த நிலையில், அரசமைப்புச் சட்டப்படி, பதில் ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க, கடந்த 15ம் தேதி, பிரதம நீதியரசர் முன்னிலையில் சத்திய பிரமானம் செய்துக்கொண்டார்.
இதையடுத்து, புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் இடம்பெற்றது.
இதில் பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர்களான டளஸ் அழகபெரும மற்றும் அநுர குமார திஸாநாயக்க ஆகியோர் போட்டியிட்டனர்.
இந்தப் போட்டியில் வென்று, புதிய ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஐக்கிய மக்கள் சக்தி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் சில உறுப்பினர்கள் என முக்கிய கட்சிகள் டளஸ் அழகபெருமவிற்கு ஆதரவை வழங்கியிருந்தன.
ஆனால், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவுடன் ரணில் விக்ரமசிங்க போட்டியிட்டார்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உள்ளிட்ட சில தமிழ் கட்சிகள் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவித்திருந்தன.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஒருவர், நாடாளுமன்ற வாக்கெடுப்பின் ஊடாக தெரிவு செய்யப்பட்ட முதலாவது சந்தர்ப்பம் இது என்பது குறிப்பிடத்தக்கது. பதவியில் இருந்த ஜனாதிபதி ஒருவர் நாட்டை விட்டு வெளியேறி, பதவி விலகியதும் தற்போது நடந்ததுதான் முதல் முறை.
ரணில் விக்கிரமசிங்கவின் ஐக்கிய தேசியக் கட்சிக்கு நாடாளுமன்றத்தில் உள்ள ஒரே எம்.பி. அவர் மட்டுமே. ஒரே எம்.பி.யாக உள்ளவர் தற்போது நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவு பெற்று தற்போது ஜனாதிபதி ஆகியிருக்கிறார்.
ரணில் கடந்து வந்த அரசியல் பாதை
1994 – 2022 (ஐக்கிய தேசியக் கட்சி தலைவர்)
1977 – முதல் முறை நாடாளுமன்றம் பிரவேசம்
1978 – இளையோர் விவகார அமைச்சராக பதவியேற்பு (இலங்கையின் மிக இளைய அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சர்.)
6 தடவைகள் பிரதமர் பதவியை வகித்தார்.
எதிர்கட்சித் தலைவர் பதவியை வகித்தார்.
2020 – ஐ.தே.கட்சிக்கு கிடைத்த ஒரேயொரு தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு, நாடாளுமன்றத்திற்கு தேர்வு.
2022 – பதில் ஜனாதிபதி – ஜனாதிபதி
நாட்டை கட்டியெழுப்ப ஒன்றிணைவோம்
ரணில் விக்ரமசிங்க பொருளாதார ரீதியில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையை கட்டியெழுப்புவதற்கு தமக்கு ஒத்துழைப்புக்களை வழங்குமாறு, ரணில் விக்ரசிங்க, ஜனாதிபதியாக தெரிவானதை அடுத்து, சபையிலுள்ள அனைவரிடமும் கோரிக்கை விடுத்தார்.தமிழ் கட்சிகளையும் தம்முடன் கைக்கோர்த்து, நாட்டை கட்டியெழுப்புவதற்கு ஒத்துழைப்புக்களை வழங்குமாறும் அவர் கோரிக்கை விடுத்தார்.
அத்துடன், தனது பதவி பிரமான நிகழ்வை, நாடாளுமன்றத்தில் நடத்துவதற்கு தனக்கு அனுமதியை வழங்குமாறு, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம், ரணில் விக்ரமசிங்க கோரிக்கை விடுத்தார்.
காலியான ரணில் எம்.பி. பதவி
ரணில் ஜனாதிபதியானமையை அடுத்து வெற்றிடமான நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு, அவரின் ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து ஒருவர் தெரிவு செய்யப்படவுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக