சனி, 23 ஜூலை, 2022

தேங்கி நிற்கும் 6.5 லட்சம் கார்கள்...சிப் கருவி தட்டுப்பாடு

மின்னம்பலம் : இந்தியாவில் 6 லட்சத்து 50,000 கார்கள் உற்பத்தியில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக மோட்டார் வாகனத் துறையைச் சேர்ந்த நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கான காரணத்தையும் நிலவரத்தையும் விளக்கியுள்ளனர்.
தற்போது இந்தியாவில் தயாரிக்கப்படும் எண்ட்ரி லெவல் கார்கள், விலை அதிகமான கார்கள் என அனைத்து வகையான கார்களிலும் செமி கண்டக்டர் ‘சிப்’களின் தேவை என்பது அதிகமாக இருக்கிறது.
ஒரு காரில் இருக்கும் இன்ஜின், ஹெட்லைட், டிரைவிங் அசிஸ்ட் ஆகியவற்றைக் கட்டுப்படுத்துவது, பாதுகாப்புக்குத் தேவையான ஏர்பேக், ஏபிஎஸ் போன்ற பாதுகாப்பு வசதிகளைச் செயல்படுத்துவது என காரின் வெளிப்பக்கத்திலும் சரி, உட்புறத்திலும் சரி பல்வேறு பகுதிகளில் மைக்ரோ சிப்கள் பயன்படுத்தப்படுகின்றன.


இந்த நிலையில் கார்களில் பொருத்தப்படும் ‘சிப்’ கருவிக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக உலக அளவில் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால், இந்தியாவில் கார் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. ‘ஆர்டர்’ செய்யப்பட்ட கார்களை உரிய காலத்தில் பெற முடியாமல், வாடிக்கையாளர்கள் பல மாதங்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
முன்னணி கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுசுகி மட்டும் 3 லட்சத்து 40,000 கார்களை உற்பத்தி செய்து அளிக்க முடியாமல் நிலுவையில் வைத்துள்ளது. ஹூண்டாய், மஹிந்திரா ஆகிய நிறுவனங்கள், 3 லட்சம் கார்களுக்கான ஆர்டரை நிலுவையில் வைத்துள்ளன.
டாடா மோட்டார்ஸ், கியா, ஹோண்டா கார்ஸ் ஆகியவையும் கணிசமான ஆர்டர்களை நிலுவையில் வைத்துள்ளன. மொத்தம் 6 லட்சத்து 50,000 கார்கள் உற்பத்தியில் தாமதம் ஏற்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் இரண்டு மாதங்கள் முதல் ஒன்பது மாதங்கள் வரை காத்திருக்க வேண்டியிருப்பதாக இந்தத் துறையின் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

– ராஜ்

கருத்துகள் இல்லை: