கலைஞர் செய்திகள் : சிறுபான்மையினர் நலத்துறைக்கான நிதியை ஒன்றிய அரசு தொடர்ந்து புறக்கணித்து வந்த அதிர்ச்சி தகவல் ஆர்.டி.ஐ. மூலம் தெரிய வந்துள்ளது.
சிறுபான்மையினர் நலத்துறைக்கான நிதியை ஒன்றிய அரசு தொடர்ந்து புறக்கணித்து வந்த அதிர்ச்சி தகவல் ஆர்.டி.ஐ. மூலம் தெரிய வந்துள்ளது. கடந்த 4 ஆண்டுகளாக தலா 3 ஆயிரம் ரூபாய் அளவுக்கே நிதி ஒதுக்கியதும் தெரியவந்துள்ளது.
மதுரையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் எஸ்.கார்த்திக். இவர் ஆர்.டி.ஐ. மூலம் தமிழ்நாட்டிற்கு சிறுபான்மையினர் நலத்துறைக்கான ஒன்றிய அரசின் நிதி விபரங்களை கேட்டிருந்தார். இதில் பல்வேறு அதிர்ச்சித்தகவல்கள் வெளிவந்துள்ளது.
அதன் விபரம் வருமாறு:-
ஒன்றிய அரசு, தன் பங்கிற்கு மாநில சிறுபான்மையினர் நலத்துறைக்கு நிதி ஒதுக்கீடு செய்து வருகிறது. இதன்படி கடந்த 2011-12 முதல் 2015-16 வரையிலான 5 ஆண்டுகளில் ரூ.172 கோடியே 43 லட்சத்து 10 ஆயிரம் வரை, தமிழ்நாடு சிறுபான்மையினர் நலத் துறைக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
“சிறுபான்மையினர் நலத்துறைக்கு ஆண்டுக்கு வெறும் 3 ஆயிரம் மட்டுமே ஒதுக்கீடு..” : மோடி அரசின் சதி அம்பலம் !
இந்நிலையில், கடந்த 4 ஆண்டுகளாக அதாவது, 2018-19 முதல் 2021-22 வரை, ஆண்டொன்றுக்கு வெறும் ரூ.3 ஆயிரம் மட்டுமே நிதி ஒதுக்கியுள்ளது. இதன்படி இந்த நான்கு ஆண்டுகளுக்கான மொத்த நிதி ஒதுக்கீடு வெறும் ரூ.12 ஆயிரம் மட்டுமே. இதன்மூலம் ஒன்றிய அரசு, சிறுபான்மையினருக்கான நலத்திட்ட நிதி ஒதுக்கீட்டை அடியோடு புறக்கணித்திருப்பது வெட்ட வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஆண்டுக்கு ரூ.3 ஆயிரம் என கண்துடைப்பிற்காகவே இந்த நிதி தரப்பட்டுள்ளது.
இதை விட கொடுமையாக, கடந்த 2016-17 மற்றும் 2017-18 ஆகிய நிதியாண்டுகளில் ஒன்றிய அரசு தமிழகத்திற்கு சிறுபான்மையினர் நலத்துறைக்கென ஒரு பைசாவும் நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. இவ்வாறு நிதி ஒதுக்கீடுகளை தவிர்த்து வருவது, மாநிலத்தில் சிறுபான்மையினர் மக்களுக்காக பிரத்யேகமாக தொடர்ந்து வழக்கத்தில் இருந்து வரும் கல்வி மற்றும் பொருளாதார மேம்பாட்டு பணிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து சமூக ஆர்வலர் எஸ்.கார்த்திக் கூறும்போது, “ஒன்றிய அரசு ஆண்டு தோறும் ரூ.100 கோடி வரை நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். இனியாவது மாநில அரசுக்கு வழங்குவதில் ஒன்றிய அரசு பாரபட்சமின்றிநடந்து கொள்ள வேண்டும்” என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக