ipdtamil.com : கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் ஆந்திர இளைஞர் ஒருவர் தூக்கிடு தற்கொலை செய்து கொண்டார். அவர் ஈஷா மையத்தில் ஆறு மாத யோகா பயிற்சியில் சேர்ந்து பயிற்சி பெற்று வந்தார்.
ஈஷா யோக மையத்தில் யோகா பயிற்சி மேற்கொண்டு வந்த ஒரு இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆந்திர மாநிலத்தை சேர்ந்த அந்த இளைஞர் ஈஷா யோக மையத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணையை துவக்கியுள்ளனர். மன அழுத்தம் காரணமாக பாதிக்கப்பட்டிருந்த அந்த இளைஞன் சிகிச்சைக்காக வந்த இடத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டிணத்தைச் சேர்ந்தவர் கொள்ளு ரமணா. இவருக்கு வயது 32. இவர் மன அழுத்தம் காரணமாக கோவையில் உள்ள ஈஷா யோக மையத்தில் ஆறு மாத யோகா பயிற்சியில் சேர்ந்து பயிற்சி பெற்று வந்தார்.
இந்த நிலையில் நேற்றிரவு ஈஷா மையத்தில் உள்ள அவரது அறையில் கடிதம் எழுதி வைத்துவிட்டு, அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதி வைத்த தற்கொலை கடிதத்தில் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்துகொள்வதாக எழுதப்பட்டிருந்தாக கூறப்படுகிறது. இது குறித்து ஆலாந்துறை போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் அங்கு சென்ற போலீசார் ரமணாவின் உடலை கைப்பற்றினர். போலீசார் இளைஞரது உடலை பிரேத பரிசோதனை செய்ய கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
இதனிடையே காவல் துறையினர் தற்கொலை செய்து கொண்ட நபர் எழுதி வைத்திருந்த கடிதத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருவதாக கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து ஈஷா யோகா மைத்தில் டி.எஸ்.பி திருமால் தலைமையிலான போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈஷா யோக மையத்தில் யோகா பயிற்சி பெற்று வந்த நபர் மன அழுத்தம் காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரச்சனை இல்லாத மனிதன் என உலகில் யாரும் இல்லை. பிரச்சனைகள் வரும்போது அவற்றை தீர்க்க வழிகாண வெண்டுமே தவிர, நம்மை தீர்த்துக்கொள்ள நினைக்கக்கூடாது. எந்த பிரச்சனைக்கும் தற்கொலை தீர்வாகாது. உங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற கீழ்காணும் எண்ணை தொடர்பு கொள்ளவும். மாநில உதவிமையம்: 104
– Sripriya Sambathkumar
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக