மின்னம்பலம் : அதிமுகவின் பொதுச் செயலாளர் என்றே தன்னை உறுதியாகக் குறிப்பிட்டு அதிரடியான அரசியல் நடவடிக்கைகளில் இறங்கியிருக்கிறார் சசிகலா. ஆனால் அரசியலின் இந்த இரண்டாவது இன்னிங்சில் அவரது ஃபர்ஸ்ட் லுக் வீரியமாக வீச்சாக அதிர்வுகளை ஏற்படுத்தக் கூடியதாக இருந்ததா என்று கேட்டால்.... சசிகலாவின் முழுமையான ஆதரவாளர்கள் கூட, ‘இன்னும் வைப்ரன்ட்டா இருந்திருக்கணும்தான்’ என்கிறார்கள் உதட்டை சுருக்கிக் கொண்டு.
கடந்த ஜனவரி 27 ஆம் தேதி சிறையில் இருந்து சசிகலா அதிகாரபூர்வமாக விடுதலை செய்யப்பட்டாலும் அப்போது அவருக்கு கொரோனா தொற்று இருந்ததால், பெங்களூரில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அதன் பின் கொரோனாவில் இருந்தும் அவர் விடுதலையாகி அங்கேயே சில நாட்கள் ஓய்வெடுத்து பிப்ரவரி மாதம்தான் சென்னை திரும்பினார். அதிமுக கொடி கட்டிய ஒரு நிர்வாகியின் காரில் சென்னை வந்த சசிகலா, சட்டமன்றத் தேர்தலில் ஒரு அதிர்வை ஏற்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மார்ச் 3 ஆம் தேதி இரவு, ‘நான் அரசியலில் இருந்து சற்றே ஒதுங்கிக் கொள்கிறேன்’ என்று ஒரு அறிக்கையை வெளியிட்டு அதிர்ச்சிப்படுத்தினார் சசிகலா. ஆனபோதும் கோயில்களுக்கு சென்றபோது அவரை அமமுகவின் வேட்பாளர்கள் சந்தித்து ஆசி பெற்றனர்.
இந்த நிலையில்தான் அதிமுக பொன் விழா அக்டோபர் 17 ஆம் தேதி தொடங்க இருப்பதை முன்னிட்டு அக்டோபர் 16 ஆம் தேதி மெரினாவில் இருக்கும் ஜெயலலிதா நினைவிடத்துக்கு முதன் முதலில் செல்லத் திட்டமிட்டார் சசிகலா. அதாவது சிறை சென்று வெளியே வந்த பிறகு.
2017 ஆம் ஆண்டு பிப்ரவரி 15 ஆம் தேதி ஜெயலலிதா நினைவிடத்துக்குச் சென்று ஓங்கியடித்து உணர்ச்சிக் கொப்பளிக்க சத்தியம் செய்துவிட்டு பெங்களூரு சிறைக்கு சென்ற சசிகலா எட்டு மாதங்கள் கழித்து முதன் முறையாக தனது அரசியல் வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை ஆரம்பிப்பதற்கான விதை முகூர்த்தம்தான்.... அக்டோபர் 16 ஆம் தேதி.
அன்று சசிகலாவை வரவேற்க பிரம்மாண்டமான கூட்டத்தைக் கூட்ட வேண்டும், சென்னையே அதிர வேண்டும். ஊடகங்கள் மூலம் இதைப் பார்த்து தமிழ்நாடும் அதிர வேண்டும். சசிகலாவுக்கு திரளும் கூட்டத்தைப் பார்த்து ஓபிஎஸ், எடப்பாடிக்கும் பயம் வரவேண்டும், பாஜகவும் மிரள வேண்டும், திமுகவும் அதிமுக என்றால அது சசிகலாதான் என்ற முடிவுக்கு வரவேண்டும் என்பதுதான் சசிகலா ஆதரவாளர்களின் மூன்று அம்ச திட்டம்.
இதற்காகவே அக்டோபர் 10 ஆம் தேதி காலை அமமுகவின் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் அக்கட்சியின் தலைமை அலுவலகமான ராயப்பேட்டை மணிக்கூண்டு அருகே உள்ள அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த 17 மாவட்டச் செயலாளர்கள் கலந்துகொண்டனர். கூட்டத்தை துணைப் பொதுச் செயலாளரான செந்தமிழனும், பொறியாளர் அணிச் செயலாளரும், மாசெவுமான கரிகாலனும் இணைந்து நடத்தினார்கள்.
”சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் 17 மாவட்ட அமைப்புகள் இருக்கின்றன. ஒவ்வொரு மாவட்டச் செயலாளரும் ஆயிரம் பேரைத் திரட்டினாலும் 17ஆயிரம் பேர் வர வேண்டும். ஆயிரம் பேர் என்று சொன்னால்தான் 500 முதல் 700 பேர் வரை வருவார்கள். எப்படிப் பார்த்தாலும் 10 ஆயிரம் பேருக்கு குறைவில்லாமல் வரவேண்டும் என்பதுதான் எங்கள் திட்டம். அதற்காக அக்டோபர் 11 திங்கள் முதல் ஒவ்வொரு மாவட்டத்திலும் வட்டச் செயலாளர்கள் கூட்டங்களை நடத்த இருக்கிறோம். இதையும் தாண்டி சென்னை மாநகரம் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து சின்னம்மாவின் முதல் பொது நிகழ்ச்சியை காண பொது மக்களும் வருவார்கள். இதையெல்லாம் கணக்கெடுத்தால் கூட்டம் இன்னும் அதிகரிக்கும்” என்றெல்லாம் அமமுக நிர்வாகிகள் கச்சிதமாகக் கணக்கிட்டார்கள்.
ஆனால், அக்டோபர் 16 ஆம் தேதி சசிகலாவின் அரங்கேற்றம் எதிர்பார்க்கப்பட்ட கூட்டம் இன்றி பெரிய அதிர்வுகள் இன்றி சாதாரண ஒரு நிகழ்வாகவே நடந்தேறியது. சசிகலா வரும்போது ஜெயலலிதா நினைவிடத்தில் கூடியிருந்தவர்களின் கூட்டம் மூவாயிரம் முதல் நாலாயிரம்தான் என்பதை உறுதி செய்துகொண்ட பிறகுதான் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மூலம் சசிகலாவை சகட்டு மேனிக்குத் தாக்க உத்தரவிட்டார் எடப்பாடி.
தி.நகர் வீட்டில் இருந்து காலை 10.30க்குப் புறப்பட்டு இடையில் ஒரு கோயிலுக்கு சென்று வழிபட்டு எந்த வித அடர்த்தியும் இல்லாமல் 12 மணிக்கெல்லாம் மெரினாவுக்கு வந்துவிட்டார் சசிகலா. இத்தனை மாதங்கள் காத்திருந்தது இதற்குத்தானா? எப்பேற்பட்ட கூட்டத்தைக் கூட்டியிருக்க வேண்டும்? ஏன் மிஸ் ஆனது? அமமுக தலைமை அலுவலகத்தில் வரவேற்பு கொடுப்பதற்காக போட்ட கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் என்னவாயின? போலீஸ் கூட சசிகலா தரப்புக்கு ஒத்துழைப்பு அளிப்பது போலத்தானே செய்திகள் வந்தன? சசிகலாவுக்கு பிரம்மாண்டக் கூட்டம் கூட்டுவதை தினகரன் விரும்பவில்லையா? இப்படி ஏகப்பட்ட கேள்விகள் அரசியல் அரங்கில் எதிரொலித்துக் கொண்டிருக்கின்றன.
’அமமுக கொடிகளை எடுத்துவரக் கூடாது என்று சசிகலா கருதியதாக தகவல்கள் பரவியதால் அமமுகவினர் சிஸ்டமேட்டிக்காக கூட்டம் திரட்டவில்லை’என்றும் சில நிர்வாகிகள் கூறினார்கள்.
ஆனால் சசிகலாவின் இரண்டாவது இன்னிங்ஸில் மாஸ் மிஸ் ஆனதற்கு காரணமே தமிழ்நாடு போலீஸ்தான் என்கிறார்கள் அமமுகவின் மூத்த நிர்வாகிகள்.
” அக்டோபர் 14 ஆம் தேதி சிந்தாதிரிப்பேட்டை டிசி ஆபீசில் அமமுகவின் முக்கிய தலைமைக் கழக பிரமுகர்களை போலீஸ் உயரதிகாரிகள் சந்தித்தனர். அப்போது துணை கமிஷனர் பகலவன், திருவல்லிக்கேணி ஏ.சி. பாஸ்கர், மற்றும் டிராபிக் போக்குவரத்து அதிகாரிகள் இருந்தனர். அவர்கள் அமமுக தலைமை நிர்வாகிகளிடம், ’உங்களை அனுமதிக்கிறோம். ஆனால் அதற்கு பல கண்டிஷன்கள் இருக்கின்றன’ என்றார்கள். என்ன கண்டிஷன்கள் என்று அமமுகவினர் கேட்டபோது போலீஸ் அதிகாரிகள் அடுக்கினார்கள்.
பிரம்மாண்டமான கூட்டம் திரட்டுவதாக இருந்தால் உங்களுக்கு அனுமதி இல்லை. மெரினா நினைவிட வளாகத்துக்குள் பத்தாயிரம் பேர் வரை கூடிட இட வசதி உள்ளது. ஆனால் இரண்டாயிரம் பேர் வரைதான் அனுமதிக்கப்படுவீர்கள். அதுவும் சமூக இடைவெளியோடுதான் இருக்க வேண்டும். அடுத்த கண்டிஷன், நினைவிட வளாகத்துக்குள் முன்கூட்டியே சென்றுவிட வேண்டும். அங்கிருந்து யாரும் மெயின் ரோடான காமராஜர் சாலைக்கு வந்துவிடக் கூடாது. உங்களால் பொதுப் போக்குவரத்து பாதிக்கப்பட கூடாது. உங்களுக்கு பார்க்கிங் இடம் தரமாட்டோம். அங்கே கூட்டத்தை இறக்கிவிட்டுவிட்டு வண்டிகளை எடுத்துக் கொண்டு வெகுதூரம் போய்விட வேண்டும். சசிகலாவோடு ஆறு வண்டிகளுக்கு மேல் நினைவிட வளாகத்துக்குள் அனுமதிக்க மாட்டோம். மீறி வந்தால் அங்கே நிறுத்த விடமாட்டோம். இத்தனை கண்டிஷன்களை காவல்துறை அதிகாரிகள் எங்களிடம் தெரிவித்தனர்.
அதுமட்டுமல்ல சசிகலாவின் நிகழ்ச்சியை நேரடி ஒளிபரப்பு செய்துவிடக் கூடாது என்று மீடியாக்களுக்கும் அரசுத் தரப்பில் இருந்து செய்தித் துறை மூலம் அழுத்தம் தரப்பட்டது.
சசிகலாவுக்கு திமுக பயப்படுகிறது. எடப்பாடியை எதிர்ப்பதற்காக சசிகலாவை ஊக்குவிக்க திமுக அரசு தயாராக இல்லை. ஏனென்றால் பன்னீர்செல்வம் திமுகவை பாராட்டிக் கொண்டிருக்கிறார். எடப்பாடி வெளிப்படையாக பாராட்டாவிட்டாலும், ‘நான் என் நாலரை வருட ஆட்சியில் உங்கள் மீது ஏதும் கேஸ் போட்டேனா?’என்று உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரத்தில் வெளிப்படையாகவே திமுகவை நோக்கி டீலிங் தொனியில் பேசுகிறார். ஆனால் ஜெயலலிதாவிடம் இருக்கும் உறுதியான திமுக எதிர்ப்பு சசிகலாவிடம்தான் இருக்கிறது. சசிகலாவை பலம் காட்ட அனுமதித்தால் அவர் அதிமுகவை ஒருங்கிணைத்துவிடுவார். அது நடக்கக் கூடாது என்று திமுக கருதுகிறது. இதுதான் சசிகலாவுக்கு அக்டோபர் 16 ஆம் தேதி பிரம்மாண்ட கூட்டம் கூடாததற்கான காரணம். எடப்பாடியை கொம்பு சீவ சசிகலாவை திமுக ஆதரிக்கிறது என்று வெளியே சிலர் பேசுகிறார்கள். ஆனால் அதெல்லாம் உண்மையல்ல. சசிகலா மீண்டும் தலையெடுத்துவிடக் கூடாது என்று திமுக அரசு திட்டமிட்டு வேலை செய்திருக்கிறது” என்கிறார்கள் அமமுக மூத்த நிர்வாகிகள்.
-ஆரா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக