புதன், 20 அக்டோபர், 2021

10 ஆயிரம் கோடிகளை பதுக்கிய முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்

 மின்னம்பலம் : தமிழ்நாடு  முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் குடும்பத்தைக் குறிவைத்து அக்டோபர் 18ஆம் தேதி 43 இடங்களில் ரெய்டு செய்தனர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸார், மற்ற ரெய்டுகள் போல் இல்லாமல் இந்த ரெய்டு டென்ஷன் இல்லாமல் இருந்ததாகச் சொல்கிறார்கள் அதிகாரிகள்.
விஜயபாஸ்கரின் குடும்பம், நட்புகள், உறவுகள், தொழில் பார்ட்னர்கள் எனக் கணக்கெடுத்துச் சரியாகத் திட்டமிட்டு அக்டோபர் 18ஆம் தேதி, காலை 6.30 மணிக்கு 430 பேர் அடங்கிய ஒரு பெரிய டீம் 43 இடங்களுக்குச் சென்று ரெய்டில் ஈடுபட்டனர். ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு தெற்கு சரகம் எஸ்பி சண்முகம் தலைமையிலும் டிஎஸ்பி இமயவரம்பன் மேற்பார்வையிலும் இந்த ரெய்டு நடைபெற்றது.
ரெய்டு நடைபெறும் ஒவ்வோர் இடத்துக்கும் அதன் எல்லைக்குட்பட்ட காவல் நிலையத்திலிருந்து ஒரு இன்ஸ்பெக்டர் தலைமையில் பத்துக்கும் மேற்பட்ட போலீஸார் காலை 8.00 மணி முதல் ரெய்டு முடியும் வரையில் பாதுகாப்புப் பணிக்கு வெளியில் நிறுத்தப்பட்டிருந்தனர்

விஜிலென்ஸ் ரெய்டு வரும் என்று நீண்ட நாட்களாகக் காத்திருந்த விஜயபாஸ்கர் மற்றும் அவரைச் சார்ந்தவர்கள் முன்னெச்சரிக்கையாகத் துடைத்துப் பெருக்கி சுத்தமாக வைத்திருந்தார்கள். ஆனால், விஜயபாஸ்கரின் விளையாட்டுகளைத் தெரிந்த விஜிலென்ஸ் அதிகாரிகள் 2021 சட்டமன்றத் தேர்தலில் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்த சொத்துகள் விவரத்தையும், 2016, 2011இல் கொடுத்துள்ள சொத்து விவரங்களையும் கையில் எடுத்து வைத்திருந்தனர்.

2021இல் கொடுக்கப்பட்ட உறுதிமொழி பத்திரத்தில் விஜயபாஸ்கர் பெயரில் அசையும் சொத்து ரூ.29,77,03,890 , அசையா சொத்து மதிப்பு ரூ.7,94,07,984 கோடி, மனைவி ரம்யா பெயரில் அசையும் சொத்து ரூ.6,95,05,800 கோடி, அசையா சொத்து ரூ.15,63,87,652, கூட்டுக் குடும்பம் சொத்து ரூ.6,69,539, ரிதன்யா பிரியதர்ஷினி பெயரில் அசையும் சொத்து ரூ.67,40,577, அனன்யா பெயரில் ரூ.46,68,986 என்று காட்டியுள்ளார்.

ரெய்டுக்கு சென்றவர்கள் ஆராய்ந்து பார்த்ததில் ஒன்றும் கிடைக்கவில்லை. அது அவர்கள் எதிர்பார்த்ததுதான், ரெய்டுக்கு போகும்போதே ஒவ்வொரு இடத்துக்கும் புள்ளியியல் துறையிலிருந்து ரிப்போர்ட் வாங்கி சென்றார்கள். வரக்கூடிய வருமானத்தில் மூன்றில் ஒரு பங்கைச் செலவு செய்யலாம், இரு மடங்கு சேவிங் செய்யலாம், அந்தச் செலவுகளைப் பற்றியும் அதில் தெளிவாகக் கொடுத்திருப்பார்கள். உதாரணமாகச் சென்னையில் வாழ்பவர் உயர்தர வாழ்க்கை நடத்தினால் எவ்வளவு செலவாகும், கார், டீசல் அல்லது பெட்ரோல், மருத்துவச் செலவுகள், விழா செலவுகள் என்பன போன்ற புள்ளிவிவரங்களைக் கொடுத்துள்ளனர். அதைவைத்துப் பார்த்தாலே விஜயபாஸ்கருக்குக் குறுக்கு வழியிலிருந்து பலமான பணமும் சொத்துகளும் வந்துள்ளது என்பது தெரியவந்துள்ளதாகச் சொல்கிறார்கள் அதிகாரிகள்.

ரெய்டுக்கு சென்ற வீடுகளில், அலுவலகங்களில் சம்பந்தப்பட்டவர்களிடம் ஆதார் கார்டு, பான் கார்டு, ரேஷன் கார்டு, வாக்காளர் அட்டை, டிரைவிங் லைசன்ஸ், பாஸ்போர்ட் இதன் நகல்கள் மற்றும் தொடர்பு எண்களை மட்டும் தவறாமல் எடுத்துக்கொண்டு சென்றுவிட்டார்கள்.

ஆதார் கார்டு, வாக்காளர் அட்டை, பான் கார்டு, டிரைவிங் லைசன்ஸ் சம்பந்தப்பட்டவர்கள் பெயர்களை பத்திரப் பதிவுத் துறை ஐஜி அலுவலகத்தில் கொடுத்தால் போதும், சொத்து வாங்கியது, விற்பனை செய்தது, கம்பெனியில் பங்குதாரரானது, முதலீடு செய்தது அனைத்தும் ஸ்கேன் ரிப்போர்ட் எடுத்துவிடலாம்.

பாஸ்போர்ட்டை வைத்து எந்தெந்த நாட்டுக்கு எப்போது போனார், அவருடன் யார் போனார், எந்த நாட்டில் என்ன முதலீடு செய்தார் என்பதை அனைத்து விவரங்களையும் உருவி விடலாம். விஜயபாஸ்கரும் அவரது குடும்பம், தொழில் பார்ட்னர்கள் குறிப்பிட்ட பலர் பலமுறை வெளிநாட்டுக்குப் போய் வந்துள்ளார்கள், இதுவரையில் மேலோட்டமாக பார்த்ததில் வெளிநாட்டிலும், வெளிமாநிலத்திலும் முதலீடு செய்துள்ளார் என்ற தகவல்கள் கிடைத்துள்ளன.

சந்தேகப்படக்கூடிய 75 நபர்களின் பான் கார்டு மற்றும் ஆதார் கார்டு வைத்து வங்கியில் பணம் பரிமாற்றம் செய்யப்பட்டதையும், நலிந்தவர் கம்பெனியிலிருந்து அதிகமான தொகை எப்படி மாறியது என்று துல்லியமாக எடுத்துவிடலாம்.

அமைச்சர் விஜயபாஸ்கர் நூதன முறையில் செய்துள்ளார். ஆடிட்டிங் அழகாக செய்து வைத்துள்ளார், பாதுகாத்துக்கொள்ள மத்திய மாநில அரசுகளில் நல்ல சோர்ஸுகளும் வைத்துள்ளார்.

விஜயபாஸ்கர் தனது தங்கை தனலட்சுமியை கல்பாக்கத்தில் பாலமுருகன் என்பவருக்குத் திருமணம் செய்துகொடுத்துள்ளார், கல்பாக்கம் மெயின் ரோட்டில் பெரிய அளவில் பல் மருத்துவ க்ளினிக்கை அதிகமான எக்யூப்மென்ட்களுடன் நடத்திவருகிறார், வீடும் நல்ல மதிப்பில் கட்டியுள்ளார்கள் அதுவும் அசுர வளர்ச்சிதான்.

விஜயபாஸ்கருக்கு நெருக்கமான சினேகிதி ஒருவர் மூலமாக அதிகமான முதலீடும் செய்துள்ள தகவல்களும் விஜிலென்ஸ் போலீஸுக்குக் கிடைத்துள்ளது.

சென்னை பெசன்ட் நகரில் நடத்திவந்த ஸ்பா, உயர் ரகமாக இருந்துள்ளது அதன் மதிப்புகள், ஸ்பாவுக்கு வரும் கஸ்டமர்கள் விவரம், பணியாளர்கள் விவரம், சமீபத்தில் வேலைக்கு வராமல் போனவர்கள் அல்லது நிறுத்தப்பட்டவர்கள் விவரங்களையும் சேகரித்துள்ளார்கள்.

மருந்து கம்பெனிகள், மருத்துவத் துறைக்குத் தேவையான எக்யூப்மென்ட் தயாரிக்கும் கம்பெனிகளில் பங்குதாரராக உள்ளது, ஸ்கூல்கள், டிரான்ஸ்போர்ட், வெளிநாடுகளில் முதலீடுகள் செய்துள்ளதை மேலோட்டமாகக் கணக்குப் போட்டுப் பார்த்ததில் விஜயபாஸ்கர் குடும்பத்தின் இன்றைய சொத்து மதிப்பு சுமார் 10 ஆயிரம் கோடிக்கு இருக்கும்.

ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு சட்டம் (2018)இன்படியும், அதற்கு முந்தைய சட்டப் பிரிவுகளின்படியும் வழக்கு போடப்பட்டுள்ளது. அதனால் எந்த ஓட்டை போட்டும் தப்பிக்க முடியாது. விஜிலென்ஸ் போலீஸார் முழுமையாக சொத்துகளை முடக்கம் செய்து குற்றப் பத்திரிகையை விரைவாகத் தாக்கல் செய்வார்கள், அதற்கு மேல் ஆட்சியில் உள்ளவர்கள் கையில்தான் உள்ளது என்கிறார்கள் விஜிலென்ஸ் அதிகாரிகள்.

-வணங்காமுடி


கருத்துகள் இல்லை: