நக்கீரன் -ஜீவாதங்கவேல் : கார்ப்பரேட் நிறுவனங்கள், ஐ.டி.கம்பெனிகள், அரசு ஊழியர்களுக்கெல்லாம் இந்த கரோனாவின் கொடுமைகள் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.
ஆனால், அன்றாடம் உழைத்து அதன் மூலம் கிடைக்கும் சொற்ப வருமானத்தில் வாழும் உழைக்கும் மக்கள் தான் கொடுந்துன்பம் அனுபவித்து, இப்போதும் அதிலிருந்து மீளாது இருக்கிறோம்.
அதிலும் குறிப்பாக மக்களின் வாழ்வியலோடு கலந்தது பண்டிகைகளும், குடும்ப திருவிழாக்களும் அப்படிப்பட்ட நிகழ்வுகளில் பண்பாட்டுக் கலைநிகழ்வுகள் நம் தமிழ்க் கலாச்சாரத்தில் தொன்று தொட்டு நடக்கிறது. அந்த வரிசையில் குடும்ப நிகழ்வுகளாள சீர், சடங்குகள், திருமண விழாக்கள் தொடங்கி கோயில் நிகழ்ச்சிகள் எல்லாவற்றிலும் மேளம், நாதஸ்வரம் இசைப்பது ஒரு மங்கள நிகழ்வாக நடைபெற்று வருகிறது. இந்த தொழிலில் ஈடுபடும் கலைஞர்கள் தமிழ்நாட்டில் ஏறக்குறைய ஐம்பதாயிரம் குடும்பங்கள் உள்ளது.
கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக கரோனா தாக்கம் காரணமாக, கோவில் திருவிழா, திருமணம், மற்றும் அனைத்து வகையான விசேஷங்களும் மத்திய, மாநில அரசுகள் போட்ட ஊரடங்கு தடையால் எல்லாமே நிறுத்தப்பட்டது. இதை மட்டுமே நம்பி வாழும் மனித கூட்டம் இருக்கிறது. அவர்கள் உணவுக்கும் வாழ்வியல் தேவைக்கும் என்ன செய்வார்கள் என்ற அடிப்படை சிந்தனை கூட இது வரை இருந்த அரசுக்கு இல்லை. இப்போது மக்கள் நலன் காக்கும் அரசாக தி.மு.க. அரசு வந்துள்ளது.
எங்கள் தொழில் இப்போதும் இயல்பான நிலைக்கு வரவில்லை மிகவும் சிரமமான வாழ்க்கைதான் நாதஸ்வரம், தவில் வாசிப்பது, மேளம் இசைப்பதைத் தவிர வேறு எதுவும் எங்களுக்குத் தெரியாது. கரோனாவுக்கு பிறகு எங்களது வாழ்வாதாரம் கேள்விக் குறியாகி உள்ளது. எனவே இத்தொழிலில் ஈடுபடும் அனைத்து கலைஞர்களுக்கும் ஓய்வூதியம் வழங்கத் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கலைஞர்களுக்கு இசைக்கருவியும் மூத்த கலைஞர்களுக்கு ஓய்வூதியமும், பேருந்துகளில் இலவச பேருந்து பாஸ், இலவச வீடு, வீட்டு மனை பட்டா ஆகியவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழ்நாடு அரசும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் எங்கள் மீது கருணை காட்டுவார்கள் என நம்பிக்கையுடன் இசை வாசித்து வாழ்கிறோம். இப்படி ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நம்மிடம் கூறிய தமிழ் இசைக் கலைஞர்கள் அரசுக்குக் கோரிக்கை மனுவும் கொடுத்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக