இலக்கியா இன்போ : சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்ட தன்னுடைய மகளை விஏஓ ஒருவரே போலீசை தாக்கி காரில் வலுக்கட்டாயமாக இழுத்து செல்ல முயன்றார். சினிமாவில் பார்ப்பது போல் நடந்த சம்பவத்தை பொதுமக்களே தடுத்து நிறுத்தி பெண்ணை காப்பாற்றினார்கள்.
புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் கிராமத்தை சேர்ந்த பாரதி (23) என்பவரும், நாகப்பட்டினம் மாவட்டம் செம்பியன்மாதேவி பகுதியை சேர்ந்த மதன்ராஜ் (24) என்பவரும் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வருகின்றனர்.
அப்போது ஏற்பட்ட நட்பு காதலாக மாறவே கடந்த இரண்டு ஆண்டுகளாக உயிருக்கு உயிராக காதலித்து வந்துள்ளனர்.
இருவரும் வெவ்வேறு சமூகம் என்பதால் பெண் வீட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. எனவே இருவரும் பதிவு திருமணம் செய்ய முடிவு செய்துள்ளனர்.
இதற்காக கடந்த 9-ஆம் தேதி திருச்சியில் இருந்து நாகை வந்த இருவரும், நேற்று முன்தினம் (12-10-2021) பதிவு திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளனர்.
அங்கு பதிவு திருமணம் செய்து இறுதியாக கையெழுத்து போட இருக்கையில், சார்பதிவாளர் அலுவலகத்தில் உள்ளே திடீரென நுழைந்த பெண்ணின் தந்தை மற்றும் உறவினர்கள், பெண்ணை அடித்து வலுக்கட்டாயமாக இழுத்துள்ளனர்.
இதனால் இரு தரப்பிற்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனையடுத்து பெண்ணின் உறவினர்கள் பெண்ணை அங்கிருந்து நாகை நீதிமன்ற வளாகத்தின் வழியே இழுத்து சென்றுள்ளனர் .
அப்போது “அப்பா என்னை விட்டுடுங்க ப்ளீஸ்.. ” என அழுது கத்திக் கொண்டிருந்தார். இதைக் கேட்ட அங்கிருந்த பொதுமக்கள் அவர்களிடம் கேட்டபோது பதில் எதுவும் சொல்லாமல் பெண்ணை காரில் ஏற்றுவதற்கு முயற்சி செய்தனர்.
அப்போது அங்கிருந்த பொதுமக்கள் காரை மடக்கி பெண்ணை கீழே இறக்கிவிடும்படி கூறினர்.
அப்போது அங்கு வந்த ஒரு பெண் போலீஸ், ‘பெண்ணை விடுங்கள். நீங்கள் யார்?’ என கேட்டபடியே இளம்பெண்ணை மீட்க முயன்றார்.
அதற்கு பெண்ணின் தந்தை, ‘நான் ஒரு கிராம நிர்வாக அலுவலர். என்னை தடுக்க கூடாது’ என கூறிவிட்டு பெண் போலீசை தள்ளிவிட்டு பெண்ணை இழுத்து செல்வதில் முனைப்போடு இருந்தார்.
இதனையடுத்து அங்கு கூடுதல் போலீசார் விரைந்து வந்து இளம்பெண்ணை கடத்த முயன்ற காரை வழிமறித்து பெண்ணை உடனடியாக மீட்டு நீதிபதி முன்பாக ஆஜர்படுத்துவதற்காக அழைத்து சென்றனர்.
இதற்கிடையே பாதிக்கப்பட்ட காதலர் மதன்ராஜ், தனது மனைவியை கடத்தி சென்றதாகவும், இருவருக்கும் பாதுகாப்பு தந்து மனைவியை மீட்டுத்தர வேண்டும் என்றும் வெளிப்பாளையம் போலீசாரிடம் புகார் மனு அளித்துள்ளார்.
இந்த நிலையில், சம்பவத்தை விசாரித்த நீதிபதிகள் இருவரும் மேஜர் என்பதால் அவர்களின் வாழ்க்கையில் தலையிட எவருக்கும் உரிமை இல்லை.
இருவருக்கும் முழு சம்மதத்துடன் திருமணம் சிறப்பாக நடந்தது. மேலும் இந்த ஜோடிகளுக்கு எந்த தொந்தரவும் தரக் கூடாது என பெற்றோர் உறவினர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
சட்டப்படி 18 வயது ஆன குழந்தைகளின் தனிப்பட்ட வாழ்க்கையில் பெற்றோர் உட்பட யாரும் தலையிட உரிமை இல்லை என்பதை இந்த சமூகம் உணர வேண்டியது முக்கியம் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக