மின்னம்பலம் : திமுக எம்.எல்.ஏ எழிலரசன் அதிகாரிகள் , ஆட்சியர் முன்னிலையில் கடுமையான வார்த்தையைப் பயன்படுத்தியது குறித்து விளக்கமளித்தார்.
காஞ்சிபுரம் மாவட்டம் காஞ்சிபுரம் தொகுதியில் சுற்றுலாத் துறை அமைச்சர் மதிவேந்தன், மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி, டிஎஸ்பி முருகன், அறநிலையத் துறை அதிகாரி தியாகராஜன் ஆகியோர் அத்திவரதர் கோயில் அருகில் உள்ள அரசால் அமைக்கப்பட்ட பக்தர்கள் தங்குமிடம் மற்றும் கார், பஸ் பார்கிங் ஏரியாவை கடந்த 17ஆம் தேதி பார்வையிட்டனர்.
அப்போது, எம்.எல்.ஏ எழிலரசன் சற்று கோபமாக அதிகாரிகளை பார்த்து, ‘செருப்பு பிஞ்சிடும்’ என கடுமையான வார்த்தையில் திட்டிய வீடியோ இணையத்தில் வைலரானது.
இதுதொடர்பாக காஞ்சிபுரம் தொகுதி எம்.எல்.ஏ.வும், திமுக மாணவர் அணி மாநில அமைப்பாளருமான எழிலரசனிடம் நாம் விசாரித்தோம்.
அவர் கூறுகையில், “காஞ்சி நகரப் பகுதியில் ஏகாம்பரநாதர் கோயிலுக்குச் சொந்தமான 16 ஏக்கர் நிலம் உள்ளது, அதில் ஒன்றிய அரசு நிதி உதவியுடன் சுமார் 22 கோடி மதிப்பீட்டில் யாத்திரி நிவாஸ் (பக்தர்கள் தங்கும் விடுதி) மற்றும் கோயிலுக்கு வருமானம் ஈட்டும் வைகையிலும் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும் வகையிலும் 7ஏக்கர் அதாவது சுமார் மூன்று லட்சம் சதுர அடி பரப்பளவில் பார்கிங் அமைக்கப்பட்டுக் கடந்த அதிமுக ஆட்சியில் அவசரம் அவசரமாக 2021 பிப்ரவரி மாதத்தில் திறப்பு விழா செய்தனர்.
இந்நிலையில் கடந்த 17ஆம் தேதி சுற்றுலாத் துறை அமைச்சர் மதிவேந்தன் கலெக்டர், டிஎஸ்பி மற்றும் மற்றத் துறை அதிகாரிகளும் அந்த இடத்திற்கு சென்றோம். பார்க்கிங் உள்ளே போக முடியாத அளவுக்கு லாரிகள் நின்றன. ஆக்கிரமிப்புகளும் இருந்தன. நாங்கள் லாரி சந்துக்குள் புகுந்துதான் சென்றோம். அங்கிருந்த இருவரை பார்த்து நீங்கள் யார் என்று கேட்டேன்.
உடனே ஒருவர் அறநிலையத் துறை அதிகாரி (இஒ) தியாகராஜன் சொன்னார். நாங்கள்தான் தற்காலிகமாகத் தனியார் செக்யூரிட்டியை போட்டு வைத்துள்ளோம் என்றார். அவரிடம் இது யாருடைய லாரிகள் என்று விசாரித்தபோது, அது முன்னாள் அதிமுக கவுன்சிலர் நந்தகுமார் ஆக்கிரமித்து வைத்துள்ளார். அவரை எதுவும் கேட்கமுடியவில்லை என்றார்.
அவரிடம் இது கோயில் சொத்து அரசாங்கத்துக்குச் சொந்தமானது, எனவே இதனை அப்புறப்படுத்த சொல்லுங்கள் இல்லை என்றால் என, கோபத்தில் அந்த கடுமையான வார்த்தையைப் பயன்படுத்திவிட்டேன் , அதை இப்படியெல்லாம் திரித்துப் பிரித்து எடிட் செய்து அதிகாரிகளைத் திட்டியதாகக் கூறுகிறார்கள்” என்றார்.
-வணங்காமுடி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக