மின்னம்பலம் : திமுக பொதுச் செயலாளர் துரைமுருகனின் மகனும், வேலூர் திமுக நாடாளுமன்ற உறுப்பினருமான கதிர் ஆனந்துக்கு எதிராக திமுகவினரே சாலை மறியல் நடத்தியதோடு, அவருக்கு எதிரான கடுமையான கோஷங்களையும் எழுப்பியிருக்கிறார்கள்.
ஒன்பது மாவட்டங்களில் நடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெற்ற ஒன்றிய , மாவட்ட கவுன்சிலர்கள் இன்று (அக்டோபர் 22) கூடி தங்களது தலைவரை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். இந்த வகையில் ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்ட அசம்பாவிதங்கள் திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் ஒன்றியத்தில் அரங்கேறியுள்ளன.
ஏற்கனவே மின்னம்பலத்தில் அக்டோபர் 20 ஆம் தேதி, துரைமுருகன் பெயரைச் சொல்லி ஆலங்காயத்தில் திமுக அட்டகாசம் என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.
மேலும் திமுக மாசெவின் வேட்பாளரை தோற்கடித்து தனது ஆதரவாளரான பாரியின் மனைவி சங்கீதாவை வெற்றிபெறச் செய்ய அதிமுகவுடனும், பாமகவுடனும் கதிர் ஆனந்த் பேசி வருகிறார் என்றும் அந்த செய்தியில் குறிப்பிட்டிருந்தோம்,’
இன்று அதுதான் நடந்திருக்கிறது. பாரியின் வசம் இருந்த ஆறு கவுன்சிலர்களில் ஒருவர் நேற்று மாசெ தேவராஜ் பக்கத்துக்கு சென்றுவிட்டார். இதையடுத்து தான் உட்பட திமுக கவுன்சிலர்கள் ஐந்து பேரின் ஆதரவை மட்டுமே பெற்றிருந்த சங்கீதா பாரி இன்று (அக்டோபர் 22) அதிமுக 4 கவுன்சிலர்கள், பாமகவின் 2 கவுன்சிலர்கள், ஒரு சுயேச்சை ஆகியோரின் ஆதரவோடு சேர்மன் ஆகிவிட்டார். இவரை திமுக வேட்பாளர் சங்கீதா பாரி என்று ஊடகங்கள் அறிவித்தன.
ஆனால், மாவட்டச் செயலாளர் தேவராஜின் ஆதரவு திமுக கவுன்சிலர்கள் ஆறு பேர் வாக்களிக்கவே அனுமதிக்கப்படவில்லை. இதை எதிர்த்து இன்று ஆலங்காயத்தில் மாசெ தேவராஜ் ஆதரவாளர்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினார்கள். அப்போது திமுக பொதுச் செயலாளர் துரை முருகனின் மகன் கதிர் ஆனந்துக்கு எதிராக கடுமையான கோஷங்களை எழுப்பினார்கள்
’துரோகி கதிர் ஆனந்த் ஒழிக, அதிமுகவின் கைக்கூலி கதிர் ஆனந்த் ஒழிக திமுகவை தோற்கடித்த நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் ஒழிக, சொந்தக் கட்சிக்காரரை தோற்கடித்த கதிர் ஆனந்த் ஒழிக, துரோகம் துரோகம் சொந்த கட்சிக்கு துரோகம்’ என்றெல்லாம் கோஷம் எழுப்பினார்கள் திமுகவினர்.’இந்த போராட்டத்தின் போது ஒருவர் தீக்குளிக்க முயல அவரை காவல்துறையினர் தடுத்து அழைத்துச் சென்றனர்.
இந்தப் போராட்டத்தின்போது செய்தியாளர்களிடம் பேசிய திமுக மாவட்டச் செயலாளர் தேவராஜின் மகனும், சேர்மன் பதவிக்கு நிறுத்தப்பட்ட காயத்ரியின் கணவருமான பிரபாகரன்,
“ ஆலங்காயம் ஒன்றியத்தில் உள்ள 18 வார்டுகளில் 11 வார்டுகளை பெரும்பான்மையை திமுக கைப்பற்றியுள்ளது. இதில் இருந்து பிரிந்து கையூட்டு பெற்ற நான்கு கவுன்சிலர்கள் அதிமுகவுடன் சேர்ந்து பாமகவுடன் சேர்ந்து ஒருவரை சேர்மன் ஆக தேர்ந்தெடுத்துள்ளனர். திமுகவைச் சேர்ந்த ஆறு கவுன்சிலர்கள் ஓட்டு போட அனுமதிக்கப்படவே இல்லை. ஓட்டுப் போட நேரம் முடிந்துவிட்டது என்று சொல்லி கதவை சாத்தி வெளியே தள்ளிவிட்டனர். இப்படி ஒரு தலைபட்சமான தேர்தலை நடத்தியிருக்கிறார்கள். இதற்கு முழு காரணமும் எம்பி கதிர் ஆனந்த் தான். அவருடைய ஆதரவில்தான் அதிமுக பாமக கூட்டணியோடு திமுகவின் கையூட்டு பெற்ற சிலர் மட்டும் சேர்ந்து கூட்டணி அமைத்துள்ளனர். அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணியோடு சேர்ந்து இதை செய்துள்ளார்கள். இது தமிழ்நாட்டிலேயே எங்கும் நடக்காத துரோகம். இதை தலைவர் முதல்வரின் கவனத்துக்குக் கொண்டு சென்றுள்ளோம்” என்று கூறியிருக்கிறார்.
கட்சியின் பொதுச் செயலாளருடைய மகனே கட்சிக்கு துரோகம் செய்துவிட்டார் என்று திமுகவினர் பகிரங்கமாக போராட்டம் நடத்தியிருக்கிறார்கள். என்ன செய்யப் போகிறார் திமுக பொதுச் செயலாளர்?
-ஆரா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக