சனி, 23 அக்டோபர், 2021

'மீண்டும் உங்களை சந்திக்கிறேன்': 22 நாள் மருத்துவ சிகிச்சைப் பிறகு பாரதி பாஸ்கர் உற்சாக பேச்சு!

 கலைஞர் செய்திகள்  : மருத்துவ சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய பாரதி பாஸ்கர், விரைவில் மேடையில் உங்களைச் சந்திக்கிறேன் என தெரிவித்துள்ளார்.
தனது பட்டிமன்ற பேச்சின் மூலம் உலகத் தமிழர்களிடையே பெரும் பாராட்டை பெற்றவர் பாரதி பாஸ்கர். எம்.பி.ஏ படித்திருக்கும் பாரதி பாஸ்கர் வங்கியில் பணியாற்றிய போது, சாலமன் பாப்பையாவுடன் இணைந்து தனது பட்டிமன்ற பேச்சை தொடர்ந்து வந்தார்.
சாலமன் பாப்பையா பட்டிமன்றங்களில் தனது பேச்சாற்றலால் பாரதி பாஸ்கர் பிரபலமடைந்தார். மற்றொரு பேச்சாளரான ராஜாவும், பாரதி பாஸ்கரும் இணைந்து பங்கேற்கும் பட்டிமன்றங்கள், பட்டிமன்ற பிரியர்களின் கவனத்தை ஈர்த்தது.
இந்நிலையில், பாரதி பாஸ்கருக்கு கடந்த 9ம் தேதி காலையில் திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து அவர் சிகிச்சைக்காக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், பாரதி பாஸ்கரின் மூளைக்குச் செல்லும் நரம்புகளில் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக தெரிவித்தனர்.


இதையடுத்து 22 நாள் தொடர் மருத்துவச் சிகிச்சை முடிந்து வீட்டிற்குத் திரும்பியுள்ளார். தற்போது நலமுடன் இருப்பதாகவும், மேடையில் உங்களைச் சந்திக்கிறேன் என பட்டிமன்றம் ராஜா யூடியூப் சேனலில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், " மூளையில் ஏற்பட்ட ரத்தக் கசிவால் 22 நாள்கள் மருத்துவச் சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பியுள்ளேன். தற்போது உடல்நலம் தேறி வருகிறது. பழைய தெம்புடனும், உற்சாகத்துடனும் மேடையில் உங்களைச் சந்திக்கின்ற நாளை உங்களைப் போலவே நானும் ஆவலுடன் எதிர்நோக்கிக் காத்துக் கொண்டிருக்கிறேன்.

உங்களுக்காக நான் எதுவுமே செய்தது இல்லை. அப்படி இருக்கையில் பலரும் எனக்காப் பிரார்த்தனை செய்துள்ளீர்கள். உங்கள் அனைவருக்கும் நன்றி. மீண்டும் சந்திப்போம்" என தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: