மின்னம்பலம் : ஆசிரியர் தினமான இன்று (செப்டம்பர் 5) பல்வேறு தலைவர்கள் ஆசிரிய சமுதாயத்தின் மேன்மைகளை உணர்ந்து வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.
சமூக தள பக்கங்களின் மூலம் ஏராளமான தனி நபர்களும் தத்தமது ஆசிரியர்களை நினைவு கூர்ந்து நன்றி தெரிவித்து வருகிறார்கள்.
அந்த வகையில் தற்போது பாஜகவில் இருக்கும் குஷ்பு தனது ஆசிரியர் யார் என்பதை ஒட்டி வெளியிட்டிருக்கும் ட்விட்டர் பதிவால் அரசியல் அரங்கத்தில் சலசலப்பு ஏற்பட்டிருக்கிறது.
குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில், “மிக முக்கியமாக எனது வழிகாட்டியும் ஆசிரியருமான டாக்டர் கலைஞர் அவர்களுக்கு நான் நன்றி சொல்லியே ஆக வேண்டும்.
’அரசியல் என்பது வெறுப்பும், விரக்தியும் இல்லை, மாறாக அரசியல் என்பது நம்பிக்கையும் தொண்டும் ’ என்பதை எனக்கு கற்றுக் கொடுத்தவர் கலைஞர்தான்”என்று குறிப்பிட்டிருக்கிறார் குஷ்பு.
இதுதான் அரசியல் அரங்கில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
குஷ்பு சினிமா உலகத்தில் வெற்றி கொடி நாட்டிய நிலையில் 2010 மே மாதம் அப்போதைய தமிழக முதல்வரும் திமுக தலைவருமான கலைஞர் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.
திமுகவில் சில சர்ச்சைகளுக்கு உள்ளான குஷ்பு 2014 ஆம் ஆண்டு திமுகவில் இருந்து விலகினார். பின் காங்கிரஸில் இணைந்தார். காங்கிரஸில் தேசிய செய்தித் தொடர்பாளர் என்ற நிலையில் இருந்தவர் கடந்த 2020 ஆம் ஆண்டு திடீரென காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் சேர்ந்தார்.இந்த பின்னணியில் குஷ்பு இன்று (செப்டம்பர் 5) தனது அரசியல் ஆசிரியர் என்று கலைஞரை குறிப்பிட்டுள்ளார். குஷ்புவின் கருத்துக்கு எதிர்வினையாக, “உங்களது அரசியல் ஆசிரியர் கலைஞர் என்றால், எப்படி நீங்கள் பாஜகவில் இருக்கிறீர்கள்? இது முரண்பாடாக இருக்கிறதே” என்று பலரும் குஷ்புவிடம் கேட்டு வருகிறார்கள்.
“குஷ்பு சமீபத்தில் பாஜகவில் வருத்தத்தில் இருந்து வருகிறார். அதுவும் குறிப்பாக சில வாரங்களாக பாஜகவில் பெண்கள் நடத்தப்படும் விதம் பற்றி தமிழகத்தில் பெரிய சர்ச்சை வெடித்திருக்கிறது. பாலியல் வீடியோ சர்ச்சையில் சிக்கி பாஜக பொதுச் செயலாளராக இருந்த கே.டி.ராகவன் பதவி விலகினார். அந்த சர்ச்சையை ஒட்டி பத்திரிகையாளர் மதன் ரவிச்சந்திரன் வெளியிட்ட ஆடியோவில் பாஜக தலைவர் அண்ணாமலை, ‘ கமலாலயத்தில் தன் அலுவலகத்துக்கு குஷ்பு, காயத்ரி ரகுராம் போன்றவர்கள் வந்தால் கூட தான் யாரையாவது வைத்துக்கொண்டுதான் பேசுகிறேன்’ என்ற ரீதியில் சொன்னதாக இருந்தது. இதெல்லாம் குஷ்புவுக்கு பெரும் வருத்தத்தைக் கொடுத்திருக்கிறது. மேலும் கே.டி.ராகவன் விஷயத்தில் கட்சி இன்னும் எந்த நடவடிக்கையும் எடுக்காதது குஷ்புவுக்கு கோபத்தையும் கொடுத்திருக்கிறது. பொதுவாகவே பெண்கள் முன்னேற்றத்திலும், பெண்ணுரிமை விவகாரங்களிலும் முதல் வரிசையில் குரல் கொடுப்பார் குஷ்பு. ஆனால் இந்த விவகாரத்தில் புழுங்கித் தவிக்கிறார்.
இந்த நிலையில்தான் ஆசிரியர் தினத்தைப் பயன்படுத்தி இன்று தனது பள்ளி ஆசிரியர்கள், திரையுலக ஆசிரியர்களான இயக்குனர்கள் பலரை நினைவுபடுத்தி நன்றி சொல்லியிருக்கும் குஷ்பு தனது அரசியல் ஆசிரியராக கலைஞரை மட்டுமே குறிப்பிட்டுள்ளார். உள்ளபடியே பாஜகவில் குஷ்பு மகிழ்ச்சியாக இருந்திருந்தால் தனது ஆசிரியராகவும் நாட்டின் ஆசிரியராகவும் பிரதமர் மோடியை அல்லவா குறிப்பிட்டிருக்க வேண்டும்? ஏன் அவர் பெயரைக் குறிப்பிடாமல் கலைஞர் பெயரைக் குறிப்பிட்டுள்ளார்?
திமுகவில் ஏற்கனவே ஸ்டாலினுக்கும் குஷ்புவுக்கும் சிறு மோதல் ஏற்பட்டது. இப்போது அதை சரி செய்து மீண்டும் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைய தன மன விருப்பத்தைத்தான் இந்த ட்விட்டர் மூலமாக வெளிப்படுத்தியுள்ளார் குஷ்பு” என்கிறார்கள் பாஜகவில் அவரது நிலையைப் பற்றி அறிந்த குஷ்புவின் நண்பர்கள்.
கலைஞரை அரசியல் ஆசிரியராக வரித்துக் கொண்டு குஷ்பு பாஜகவில் தொடர்வது லாஜிக்கை மீறிய மேஜிக் ஆகத்தான் இருக்கும்.
-ஆரா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக