நக்கீரன் : தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஒருமாத காலமாகத் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. இதில் பல்வேறு புதிய அறிவிப்புகளைத் தமிழ்நாடு அரசு அறிவித்துவருகிறது.
இந்நிலையில், இன்று கடைகள் மற்றும் நிறுவனங்களில் நின்று கொண்டு பணியாற்றுபவர்களுக்கு இருக்கைகள் வழங்கப்பட வேண்டும் என்பதற்கான சட்டத்திருத்தம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதற்கான சட்டமுன்வடிவை தொழிலாளர் நலத்துறை அமைச்சர் திட்டக்குடி கணேசன் தாக்கல் செய்தார். தமிழகத்தில் கடைகள் மற்றும் நிறுவனங்களில் ஊழியர்கள் வேலைநேரம் முழுதும் நிற்கவைக்கப்படுகின்றனர். இதனால் அவர்களுக்கு பல்வேறு உடல் நலக்கேடுகள் ஏற்படுகிறது. ஏற்கனவே கடந்த 4 ஆம் தேதி நடைபெற்ற தொழிலாளர் நலத்துறை ஆலோசனைக் கூட்டத்தில் நின்று வேலை செய்யும் ஊழியர்களுக்கு இருக்கை வழங்க வேண்டும் என்ற கருத்துக்களின் அடிப்படையில் இந்த சட்டமுன்வடிவு கொண்டுவரப்பட்டுள்ளது. 1947 ஆம் ஆண்டு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டத்தில் இந்த திருத்தம் கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளது.
அங்காடித்தெரு படத்தின் கனவு மெல்ல நிறைவேறுகிறது..." தமிழக அரசிற்கு நன்றி தெரிவித்த இயக்குநர் வசந்தபாலன்!
நக்கீரன் செய்திப்பிரிவு : தமிழ்நாட்டில் கடைகள் மற்றும் நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்கள் உட்கார்ந்துகொண்டே வேலை செய்யும் வகையில் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை தமிழக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் இன்று சட்டமன்றத்தில் வெளியிட்டார். கடைகள் மற்றும் நிறுவனங்களில் பணிபுரியும் நபர்கள் வேலை நேரம் முழுவதும் நின்று கொண்டே வேலை செய்யும்போது பல வகையான உடல்நலக் கேடுகளுக்கு ஆளாகின்றனர். இதைத் தவிர்க்கும் பொருட்டு இந்தச் சட்டத்திருத்தமானது செய்யப்படவுள்ளது.
இந்த நிலையில், தமிழக அரசின் இந்த முடிவிற்கு இயக்குநர் வசந்தபாலன் நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ள வசந்தபாலன், "தமிழக அரசுக்கு நன்றி. என் அங்காடித்தெரு திரைப்படத்தின் கனவு மெல்ல மெல்ல நிறைவேறுகிறது. அங்காடித்தெரு திரைப்படத்தில் தொடர்ந்து நின்று கொண்டே வேலை செய்வதால் கால்களில் ஏற்படக்கூடிய வெரிக்கோஸ் நோய் பற்றி கூறியிருப்பேன். உங்களுக்கு நினைவிருக்கலாம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
அங்காடித்தெரு திரைப்படம் கடந்த 2010ஆம் ஆண்டு வெளியானபோது கடைகள் மற்றும் நிறுவனங்களில் தொழிலாளர்கள் நின்று கொண்டு வேலை செய்வது தொடர்பான விவகாரம் விவாதப்பொருளானது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக