அப்போது, பண மதிப்பிழப்பு நடவடிக்கையை மத்திய அரசு அறிவித்த நேரத்தில், 1,900 கோடி ரூபாய் பழைய நோட்டுகளை மாற்றுவதற்காக, புதிதாக பல சொத்துக்களை சசிகலா வாங்கியிருந்ததை கண்டுபிடித்தனர்.
இது தொடர்பாக, சசிகலாவுக்கு வருமான வரித் துறையால் அனுப்பப்பட்ட நோட்டீசுக்கு, 2017 டிச., 11 அன்று சசிகலாவின் ஆடிட்டர் சார்பில் பதில் அளித்த போது, ஓர் உண்மை வெளிப்பட்டது.
அந்த சொத்துக்களை வாங்கியதற்கான தொகை முழுதும், சசிகலாவின் சொத்துக்கள் மற்றும் அவருடைய நிறுவனங்களிலிருந்து கிடைத்த வருவாய் தான் என்று கூறியிருந்த அவர்,
'கோடநாடு எஸ்டேட் உள்ளிட்ட ஐந்து நிறுவனங்களில் 2016 ஏப்ரல் 1 முதல், அதே ஆண்டு டிச., 5 வரை ஜெயலலிதாவுடன் பங்குதாரராக இருந்தார்.
கடந்த 2016- டிச.,5-ம் தேதி, ஜெயலலிதா மறைவுக்குப் பின், பங்குதாரர் அமைப்பு கலைக்கப்பட்டதால், சசிகலாவே இந்த நிறுவனங்களுக்கு உரிமையாளராக மாறிவிட்டார்' என்று விளக்கம் அளித்திருந்தார்.இது, ஏற்றுக் கொள்ளக்கூடாத தவறான விளக்கம் என்று சொல்லும், சீனியர் வழக்கறிஞர் பாலாஜி ஸ்ரீதர் கூறுவதாவது: மூன்று பேர் இருக்கும் ஒரு பங்குதாரர் நிறுவனத்தில், ஒருவர் இறந்துவிட்டால், அவருக்குரிய பங்கின் மதிப்பை அவருடைய வாரிசுகளுக்குக் கொடுத்துவிட்டு, நிறுவனத்தை மற்ற இருவரும் நடத்தலாம்.
இரண்டு பேர் மட்டுமே இருக்கும் ஒரு பங்குதாரர் நிறுவனத்தில், ஒருவர் இறந்துவிட்டால் அந்த அமைப்பே கலைந்து விடும். அதில் பாதிச்சொத்து, இறந்து போன பங்குதாரரின் வாரிசுக்கு சேரும். கடனிருந்தால் பாதியை அவர்களே ஏற்க வேண்டியிருக்கும். அந்த நிறுவனத்தை மற்ற பங்குதாரர் நடத்திக் கொள்ளலாம். ஆனால் முழுச் சொத்துமே அவருடையது என்று சொல்ல சட்டப்படி உரிமையில்லை.இவ்வாறு பாலாஜி ஸ்ரீதர் கூறுகிறார்.
ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு தாக்கலான போது, 1996ல் அவருடைய வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிரடி சோதனைகளை நடத்தியது. அப்போது அவரது வீட்டில் இருந்த தங்க நகைகள், வைர அணிகலன்கள், 100 ஜோடி காலணிகள், ஜெயலலிதாவும், சசிகலாவும் ஏராளமான நகைகள் அணிந்து சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் என எல்லாமே, ஊடகங்களுக்கு தரப்பட்டு, பக்கம் பக்கமாக படங்கள் போடப்பட்டன. அவை, தமிழக மக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின.ஆனால், அதே சொத்துக் குவிப்பு வழக்கில் சேர்க்கப்பட்ட கோடநாடு எஸ்டேட், அப்போது வெறும் எஸ்டேட்டாக மட்டுமே இருந்தது. அதற்கு பின்பே அங்கு, அங்குலம் அங்குலமாக அலங்கார வேலைகள் நடந்தன.
சசிகலா சிறையில் இருந்தபோது, 2019 டிச.,11ல், அவர் சார்பில் அவருடைய ஆடிட்டர் வருமான வரித் துறைக்கு அளித்த விளக்கத்தில், 'ஜெயலலிதாவும், நானும் மட்டுமே கோடநாடு எஸ்டேட் நிறுவனத்தின் பங்குதாரராக இருந்தோம். அவர் இறந்த பின், அந்த சொத்து தனக்கு மட்டுமே சொந்தம்' என்று கூறப்பட்டிருந்தது. அதற்கு பிறகு தான், கடந்த ஆண்டு அக்டோபரில், கோடநாடு எஸ்டேட் மற்றும் சிறுதாவூர் பங்களா போன்ற சொத்துக்களை, பினாமி சொத்து தடுப்பு மற்றும் பரிவர்த்தனை சட்டப் பிரிவு 24 -1ன் கீழ், முடக்கியுள்ளதாக வருமான வரித் துறை 'நோட்டீஸ்' கொடுத்தது.
இந்த சொத்துக்களின் பினாமி, பயனாளி, உரிமையாளரின் நடவடிக்கை குறித்து கருத்துகளை தெரிவிக்க வாய்ப்பு தரப்பட்டும், அது தரப்படாததால் தான், சொத்துக்களை முடக்கம் செய்வதாக தெரிவித்தது. ஆனால்,இப்போதும் சசிகலா நியமித்தஆட்களால் தான், கோடநாடு எஸ்டேட் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின்படி, இந்த சொத்தையும், தமிழக அரசு உடனடியாக அரசுடைமை ஆக்குவதோடு, ஊழலின் குறியீடாக விளங்கும் கோடநாடு எஸ்டேட்டை உலகமே அறியும் பொருட்டு, அதன் 'போட்டோ'க்கள் மற்றும் 'வீடியோ'க்களை, ஊடகங்கள் வாயிலாக அரசு வெளியிட வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட ஊடகங்களை, போட்டோ மற்றும் வீடியோ எடுக்க கோடநாடு எஸ்டேட்டுக்குள் அனுமதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதைச் செய்ய வேண்டியது தமிழகஅரசின் கடமை.
சட்டம் என்ன சொல்கிறது?
-ஜெ., சொத்துக்கள், சட்டப்படி யாருக்கு உரிமையாகும் என்பது குறித்து, கோவையை சேர்ந்த சீனியர் வழக்கறிஞர் ஆர்.சண்முகம் கூறியதாவது:ஓர் அரசு ஊழியர் நேர்மையாக சம்பாதித்த சொத்து, அவருடைய வாரிசுகளுக்கு சேரும். ஆனால், லஞ்சப் பணத்தில் அவர் பெயரிலோ, பினாமி பெயரிலோ சொத்துக்கள் வாங்கியிருந்தால், அவர் குற்றவாளி என்று நிரூபிக்கப்படும் பட்சத்தில், அந்த சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ஏலம் விடப்பட்டு, அரசு கஜானாவில் சேர்க்கப்பட வேண்டும். குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு, 452 மற்றும் ஊழல் தடுப்புச் சட்டப் பிரிவு 5 - 1 - இ ஆகியவை இதைத் தெளிவாகச் சொல்கின்றன. பல்வேறு உயர் நீதிமன்ற, உச்ச நீதிமன்ற தீர்ப்புகளும் இதை உறுதி செய்திருக்கின்றன.
தமிழக முதல்வர் என்ற அரசு பொறுப்பிலிருந்த ஜெயலலிதாவுக்கு, வாரிசுரிமை அடிப்படையில் வந்த சொத்துக்கள், அவர் சுய சம்பாத்தியத்தில் சேர்த்த சொத்துக்கள், முதல்வரான பின் வாங்கப்பட்டு, சொத்துக்குவிப்பு வழக்கில் இணைக்கப்பட்ட சொத்துக்கள் என, மூன்று விதமான சொத்துக்கள் இருந்தன.இவற்றில் முதல் இரண்டு வகை சொத்துக்களுக்கு, ஹிந்து வாரிசுரிமை சட்டம், 1956 பிரிவு 15 - 2 - ஏ படி, ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயகுமாரின் மகள் தீபா, மகன் தீபக் ஆகியோர் உரிமை கோரலாம்.மூன்றாம் வகை சொத்துக்களுக்கு அவர்கள் உட்பட யாரும் உரிமை கோர முடியாது. அவையனைத்தும் அரசுக்கு சொந்தமானவை.இவ்வாறு அவர் கூறினார்.இதே கருத்தை அ.தி.மு.க., -தி.மு.க.,வை சேர்ந்த சீனியர் வழக்கறிஞர்கள் பலரும் உறுதி செய்கின்றனர்.
ஜெ., சொத்து மதிப்பு எவ்வளவு?--
கடந்த 1991ல், ஜெயலலிதா தாக்கல் செய்த வேட்பு மனுவில், அவருக்கு இருந்த மொத்த சொத்து மதிப்பு 2.01 கோடி ரூபாய். அந்த தேர்தலில் வென்று, 1991 - 1996 வரை, அவர் முதல்வராக இருந்த காலகட்டத்தில், அவர் அரசிடம் மாத ஊதியமாகப் பெற்ற தொகை ஒரு ரூபாய் மட்டுமே. ஆனால் 1996ல் அவருடைய சொத்து மதிப்பு 66.44 கோடி ரூபாய். அதுதான் வருமானத்துக்கு அதிகமாகச் சேர்த்த சொத்து வழக்கானது.
ஜெயலலிதா மறைவதற்கு முன், கடைசியாக நின்ற 2016 சட்டசபை தேர்தலில், ஆர்.கே.நகர் தொகுதியில் அவர் வேட்பு மனுவுடன் காண்பித்த சொத்துக் கணக்கின்படி, அப்போது அவருக்கு இருந்த அசையும் மற்றும் அசையா சொத்துக்களின் மொத்த மதிப்பு 113 கோடி ரூபாய்.சென்னை போயஸ் கார்டனில் 10 கிரவுண்ட் பரப்பளவில் உள்ள வேதா இல்லமும் (அன்றைய மதிப்பு: 43.96 கோடி ரூபாய்) அதில் அடக்கம். அத்துடன், அதே பகுதியிலுள்ள இரண்டு இடங்கள் (மதிப்பு: 7.83 கோடி ரூபாய்), ஆந்திர மாநிலம் கெடிமேட்லாவில் இருக்கும் 14.50 ஏக்கர் விவசாய நிலம், செய்யூரில் உள்ள 3.43 ஏக்கர் விவசாய நிலம்.
ஐதராபாத் ஸ்ரீநகர் காலனியிலுள்ள ஒரு வீடு (மதிப்பு: 5.03 கோடி ரூபாய்), சென்னை பார்சன் மேனர் மற்றும் மந்தைவெளி ஆகிய பகுதிகளில் இருந்த இரண்டு வணிகக் கட்டடங்கள் ஆகியவையும் அதில் பட்டியலிடப்பட்டிருந்தன. இவையனைத்தும் ஜெயலலிதா பெயரில் மட்டுமே இருந்த சொத்துக்கள்.
இவற்றைத் தவிர்த்து, ஜெயா பப்ளிகேஷன்ஸ், சசி என்டர்பிரைசஸ், 900 ஏக்கர் பரப்பளவுள்ள கோடநாடு எஸ்டேட் மற்றும் டீ பேக்டரி, ராயல்வேலி புளோரிடெக் எக்ஸ்போர்ட், கிரீன் டீ எஸ்டேட் ஆகியவை ஜெயலலிதாவுக்கு இருந்த அசையா சொத்துக்களாக வேட்பு மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தன. வேட்பு மனுவில் அதற்குக் காட்டப்பட்ட மதிப்பு 27.44 கோடி ரூபாய். உண்மையில் இதன் மதிப்பு பல ஆயிரம் கோடி இருக்கும்.
இதில் அரசியல் செய்வது நல்ல அரசுக்கு அழகல்ல!
'கோடநாடு எஸ்டேட் உள்ளிட்ட பல்வேறு சொத்துக்களில் இருந்து, சசிகலாவுக்கு நல்ல வருமானம் வருகிறது. அவற்றை விற்றும் பெரும்தொகை சேர்க்க முடியும். அவரிடம் பணம் இருந்தால் தான், அ.தி.மு.க.,வுக்கு குடைச்சல் கொடுப்பார்; அது தி.மு.க.,வுக்கு தான் நல்லது' என்று ஸ்டாலினுக்கு அக்கட்சியின் முக்கிய தலைவர்கள் சிலர் ஆலோசனை கூறியுள்ளதாக ஒரு தகவல் உலா வருகிறது. கோடநாடு எஸ்டேட், சிறுதாவூர் பங்களாவை அரசுடைமை ஆக்காமலிருக்க இதுவும் ஒரு காரணமாக கூறப்படுகிறது. தி.மு.க.,வை தமிழக மக்கள் தேர்ந்தெடுத்ததற்கு, அ.தி.மு.க., அரசின் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளும் ஒரு முக்கிய காரணம்.
தி.மு.க., பழி வாங்குகிறது என்று யாரும் நினைக்க மாட்டார்கள். காரணம், அ.தி.மு.க., அரசே சில சொத்துக்களை அரசுடைமையாக்கிய போதும், அதற்காக அ.தி.மு.க., அனுதாபிகள் கூட கவலைப்படவில்லை. கோடநாடு எஸ்டேட்டை அரசுடைமை ஆக்கினால், பல நுாறு கோடி ரூபாய்க்கு ஏலம் போகும். அதை விடுத்து, இதை அரசு எஸ்டேட் ஆக்கினால் எந்த பயனுமில்லை. கோடநாடு எஸ்டேட் மட்டுமின்றி சிறுதாவூர், பையனுார் பங்களாக்கள் மற்றும் ஏற்கனவே அ.தி.மு.க., ஆட்சியில் அரசுடைமை ஆக்கப்பட்ட சொத்துக்கள் அனைத்தையும் ஏலம் விட்டால், ஆயிரம் கோடி ரூபாய் அரசுக்கு கிடைக்கும். இவற்றில் பல இடங்கள் தொழிற்பேட்டை, தொழிற்சாலைகள் அமைப்பதற்கான இடமாக இருக்கலாம். அப்படியிருந்தால் அவற்றை விற்று விடலாம். அந்தத் தொகையை அரசின் கஜானாவில் சேர்த்தால், தி.மு.க., அரசை தமிழக மக்கள் நிச்சயம் கொண்டாடுவர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக