வியாழன், 1 ஜூலை, 2021

பெரியார் இயக்கங்களும் அரக்கர்களும் .. தொடர் மோதல்கள் ..

 Ashok R : பல மாதங்கள் கழித்து நேற்று இரவு சுபவீ அய்யாவிடம் தொலைபேசியில் பேசினேன். மனம்விட்டு சில விஷயங்களைப் பகிர்ந்து கொண்டேன்.
பலகால இறுக்கம் விலகியதால் நிம்மதியாக உணர்கிறேன்.
அதேநேரம் அவரது நேற்றைய உரையில் எனக்கு உடன்பாடில்லாத விஷயங்களையும், தபெதிகவில் இருந்துகொண்டு மே17க்கு ஊழியம் செய்யும் 'பொய் பிரியர்' ஒருவர் எப்படி விஷயங்களைத் திரித்துப் பகிர்கிறார் என்பதையும் சொன்னேன். அனைத்தையும், அது மாற்றுக்கருத்தாக இருந்தாலும் விரிவாகப் பதிவு செய்யுங்கள் என்றார். ஏற்கனவே மிக விரிவாக லிபர்ட்டி சேனலில் பேட்டி கொடுத்திருக்கிறேன். எனினும்,
1) Space, Clubhouseல் சுபவீ, கொளத்தூர் மணி, ஆசிரியர் போன்ற தலைவர்களை அரக்கர்கள் மரியாதைக் குறைவாகப் பேசினர் என்பது மாபெரும் அவதூறு. மிகபெரிய பொய். சாக்கடையில் இருந்து நாற்றம் வருவதைப் போல தபெதிக/மே17காரர் ஒருவரிடம் இருந்து இப்படியான பொய்கள் முதல் நாளில் இருந்தே உற்பத்தியாகிக் கொண்டிருக்கின்றன. குறைந்தபட்சம் தலைவர்கள் இதையெல்லாம் fact check செய்யவேண்டும்.


2) திமுக வெற்றிக்கு நாங்கள்தான் காரணம் என யாரோ பதிவு செய்திருக்கலாம். அதை ஒரு மாபெரும் கூட்டத்தின் கருத்தாக எடுத்துக்கொண்டு அத்தனை இளைஞர்களும் அப்படித்தான் நினைக்கிறார்கள் என்ற தோற்றத்தை உருவாக்குவது தவறு.
ஆதன் டிவி பேட்டியில் "நாங்க ஒரு 1000 ஃபாலோயர் வச்சிருந்தா நாங்களாம் பெரிய ஆளுனு அர்த்தமா? திமுக யாருடைய ஆலோசனையையும் நம்பி இல்லை. அது தன் கொள்கைகளைத் தானே வகுக்கும் பேரியக்கம்.  எங்களைப் போய் திக எனும் மாபெரும் இயக்கத்துக்கு மாற்றாக வர நினைக்கிறோம் என்றெல்லாம் பேசுவது காமடியாக இல்லையா? எந்த உலகத்தில் வாழ்கிறீர்கள்?" என்றுதான் கேட்டிருந்தேன். உண்மை இப்படி இருக்க, அரக்கர்கள் எல்லோரும் தலைக்கனமாய் திரிவதைப் போலச் சொல்வது தவறான புரிதல்.

3) அதே ஆதன் டிவி பேட்டியில் சுபவீ அய்யா ஆரம்பத்தில் இருந்தே சீமானை எதிர்த்ததையும், "பெரியாரையும் கலைஞரையும் திட்டியபோது எங்கே போனீர்கள்?" என்ற கேள்வி அவருக்கானதல்ல என்பதையும் பதிவு செய்திருக்கிறேன். ஆனால் அவர் அவரை நோக்கியும் அக்கேள்வி எழுப்பப்பட்டதாகச் சொல்வது வேதனையளிக்கிறது.
மேலும்,  "திமுக மேல் பழி சுமத்தாத  புலி ஆதரவாளர்களிடம் எங்கள் உரையாடல் இல்லை. திமுக தான் இனப்படுகொலை செய்தது என்று பழி சொல்லும் புலி ஆதரவாளர்களை நோக்கியே எங்கள் உரையாடல்" என்பதையும் பல முறை பதிவுசெய்திருக்கிறேன்.

4. Twitterல் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் இருக்கிறார்கள். கலைஞர் மேல் அவதூறு வைக்கப்படும் போது, ஆபாச ட்ரெண்ட் செய்யப்படும்போது உடனே எதிர்வினை ஆற்றுகிறார்கள். அதையெல்லாம் அரக்கர்கள் பேரில் எழுதுவதும், அவர்களது spontaneous கோபத்தில் நியாயம் தேடுவதும் நாகரீகம் தேடுவதும் அநியாயமாகப் படுகிறது. நான் ஒரு பதிவை retweet செய்ததாகச் சொல்கிறார். அது நினைவில்லை. தெரியாமல் நடந்திருக்கலாம். தெரியாமல் அப்படிச் செய்திருந்தால்கூட அது தவறுதான். வருத்தங்கள். நான் எந்த இடத்திலும் புலிகள் மீதோ யாரின் மீதோ அவதூறாகப் பேசவில்லை. ஆதாரமின்றி அந்தக் குற்றச்சாட்டு மீண்டும் மீண்டும் சொல்லப்படுகிறது.

5. சமூகநீதியா, உங்கள் அறிவுரையைக் கேட்கிறோம். திராவிட இயக்கமா, உங்கள் அறிவுரையை வணங்கி ஏற்கிறோம். நாகரீகம் கற்றுக்கொடுக்கிறீர்களா, இருகைகூப்பி உங்கள் அறிவுரையை ஏற்கிறோம். சுபவீ அய்யாவை நான் திராவிட இயக்கத்தின் வாழும் வழிகாட்டியாகப் பார்க்கிறேன். இனியும் அப்படித்தான் என்றும் அப்படித்தான். இதைப் பல இடங்களில் பதிவும் செய்திருக்கிறேன். ஆசிரியர் எங்களை அரைவேக்காடு என திட்டினாலும் அவர் பின்னால்தான் அணிவகுப்போம் என்றும் என் பேட்டிகளில் குறிப்பிட்டிருக்கிறேன். நீங்கள் எங்களைப் 'பேசாதே' எனச் சொன்னால்கூட நாங்கள் ஏற்றுக்கொள்வோம். ஆனால் 'பதில் பேசாதே' எனச் சொல்வது நியாயமாகுமா? தீ மூட்டுகிறவர்களை விட்டுவிட்டு அதை அணைக்க முற்படுகிறவர்களைக் கண்டிக்கலாமா?

நேற்று கூட ஜெகத் கஸ்பார் சொல்கிறார் "2009ல் திமுக கைவிட்டுவிட்டது" என. அது நியாயமா? இன்னும் இப்படி பேசிக் கொண்டிருப்பவர்களுக்கு பதில் சொல்லும் விதமாக உண்மையான வரலாற்றை நாங்கள் பதிவுசெய்ய நினைப்பது தவறா?
நேற்று 28நிமிடம் ஆற்றிய உரையில் கூட நாம் தமிழர், புலம்பெயர் தமிழர் சேர்ந்து கலைஞர் மீது செய்த ஆபாச ட்ரெண்டிங் பற்றி ஒரு வார்த்தை இல்லையே!!!  ராஜபக்சேவை விட்டுவிட்டு கலைஞரை குற்றம் சாட்டினால் மட்டும் இனப்படுகொலைக்கான நியாயம் பாதிக்கப்படாதா? கொஞ்சம் ராஜபக்சே பத்தியும் பேசுங்களேன் என அந்தப் பக்கம் அறிவுரை சொல்லவில்லையே!!!
புலிகளை விமர்சித்துவிட்டோம் என்பதற்காக எங்களை RSS, இந்துத்துவவாதி, துரோகிகள், எங்களிடம் திமுக கவனமாக இருக்க வேண்டும், "கேணைத்தனமாக பேசுகிறார்கள்"  என்றெல்லாம் எங்களை வர்ணித்து கொளத்தூர் மணி அவர்கள் விடுத்த அறிக்கைதான் பல அரக்கர்களை "நாங்க திமுக இல்லைன்னா, அப்பப்ப இடம்மாறும் நீங்களா திமுக?" என கேட்க வைத்தது.  
வழக்கம்போல் எங்கள் எதிர்வினை விமர்சிக்கப்படுகிறதே தவிர அதைத் தூண்டிய வினை வீதியில் விடப்பட்டுவிட்டது.

இந்த விவாதத்தில் ஆரம்பத்தில் இருந்தே மே17 மீது நாங்கள் குற்றம்சாட்டியபோதும், என் பேட்டியில் தெளிவாக அதைச் சொல்லியிருக்கும்போதும், அதைப் பற்றி ஒரு வார்த்தைகூட சொல்லாதது ஏன்?
அதையெல்லாம் விட,  ஐநா அறிக்கையிலேயே புலிகள் பற்றி அவ்வளவு விமர்சனங்கள் இருக்கும்போது நாங்கள் 'எதிர்வினையாக' வைக்கும் விமர்சனங்களா உலகநாடுகளின் பார்வையை திசைதிருப்பப் போகிறது? நாங்கள் அவ்வளவு பெரிய ஆட்களா?

நாங்கள் ரொம்ப சாதாரணமான இளைஞர்கள். ஒவ்வொரு தலைவராக அழைத்து "நீங்க அறிக்கை விடுங்க." "நீங்க கண்டிக்கணும்" "இவங்களை அடக்கி வைக்கணும்" "இவங்களை தலைமை கண்டிக்கணும்" என்றெல்லாம் சதாசர்வ காலமும் புலம்பாமல், லாபி செய்யாமல், மனதில் பட்டதைச் சுவரில் எழுதிவிட்டுச் செல்லும் மிகச் சாதாரண திராவிட இயக்கத்து இளைஞர்கள். எங்களுக்கு எதிராக திமுகவிடம் அறிக்கை வாங்குவதற்கு கடந்த ஒரு மாதமாகச் சிலர் சாமதானபேத தண்டங்களைச் செய்வதைப் பார்த்தால் பாவமாகத்தான் இருக்கிறது. அறிக்கை கூட வரலாம். வந்தாலும் அது வரும் சூழலையும் அதன் பின்பான அழுத்தத்தையும் நாங்கள் புரிந்துகொள்வோம். ஏனெனில் கட்சி என்பது எல்லோருக்குமானது. அதன் செயல்பாட்டை நாங்கள் புரிந்தே இருக்கிறோம்.

ஆனால் எங்களையோ நாங்கள் பெரிதாய் செயல்படும் சமூகவலைதளங்களையோ பலரும் முழுதாகப் புரிந்து கொள்ளவில்லை என்பதைப் புரிந்து கொள்ளமுடிகிறது.  நான்கு பேர் வாயை மூடிவிட்டால் நானூறு பேர் வாயை மூடலாம் என நினைப்பது அறியாமை. Social media அப்படி இயங்குவதுமில்லை.
இதை எழுதும்போது என் மனதில் தோன்றும் இரண்டு வாசகங்களோடு என் பதிவை முடிக்கிறேன். இவற்றைதான் திராவிட இயக்கத்தின் மையக் கோட்பாடுகளாக நான் பார்க்கிறேன். இதில் இரண்டாவது வாசகத்தை ஒரு மேடையில் சுபவீ அய்யா சொல்லித்தான் நான் முதன்முறையாகக் கேட்டேன்.
"யார் சொல்லியிருந்தாலும் எங்கு படித்திருந்தாலும் நானே சொன்னாலும் உனது புத்திக்கும் பொது அறிவுக்கும் பொருந்தாத எதையும் நம்பாதே."
 -பெரியார்
"நீங்கள் சொல்வதை நான் மறுக்கிறேன், ஆனால் நீங்கள் அதை சொல்வதற்கான உரிமைக்காக சாகும் வரை போராடுவேன்."
-வால்டேர்
-டான் அசோக்
ஜூலை 1, 2021

கருத்துகள் இல்லை: