Arun Ambalavanar : முருகுப்பிள்ளை நவரத்தினசாமி ( பெப்ரவரி 16, 1909 - சூன் 30, 1969) பாக்குநீரிணையை முதன் முதலில் நீந்திக் கடந்தவர் என்ற பெருமை பெற்றவர்.
தனது 44ஆவது அகவையில் 1954 மார்ச் 26 இல் இவர் இச்சாதனையைப் புரிந்தார்.
இவர் ஆழிக்குமரன் ஆனந்தனின் மாமனார் ஆவார்.
பாடசாலை கல்வி முடிந்ததும் விவசாயத் திணைக்களத்தில் விவசாய விவரித்தல் (Expansion) உத்தியோக்கராகக் கடமையை ஏற்றுக் கொண்டு; அந்தத் துறையிலும் தனது அர்ப்பணிப்புடனான சேவையை ஆற்றிவந்தார்.
விவசாய விவரித்தல் உத்தியோகத்தராகக் கடமையாற்றிக் கொண்டிருந்த பொழுது அவர் பெற்றகள அனுபவங்களும், ஆய்வு ஊக்கமும் புதிய படைப்பாற்றல் ஒன்றுக்கான எண்ணக் கருவை வளர்த்து வந்தது. அவரது அயராத முயற்சியினால், விதை தூவும் இயந்திரத்தைக் கண்டு பிடித்து அரசின் பாராட்டுக்கனையும் பெற்றுக் கொண்டதுடன்,அதன் உரிமத்தையும் பெற்றுக் கொண்டார். விவசாயத்துறையில் அவருக்கு இருந்த ஆர்வத்தையும், அறிவார்ந்த ஆற்றலையும் இனங்கண்ட விவசாயத் திணைக்கள பணிப்பரளரால்,விவசாயப் பகுதி போதனாசிரியராகப் பதவி உயர்த்தப்பட்டார்.
விவசாயத் திணைக்களத்தில், போதனாசிரியராகச் சிறப்புடன் பணியாற்றி வந்த நவரத்தினசாமியின் ஆழ் மனதில், ஆழப் பதிந்துபோய் இருந்த, 'பாக்கு நீரிணையை நீந்திக் கடந்து சாதனை புரிய வேண்டும்' என்ற அந்த இலட்சிய வேட்கை மீண்டும் வெளிக் கொணரத் தொடங்கியபோது, தனது நீச்சல் பயிற்சியிலும் கவனத்தைச் செலுத்தத் தொடங்கினார்.
1954 மார்ச் 16 இல் பாக்குநீரிணையில் வல்வெட்டித்துறையில் இருந்து கோடியக்கரை வரையான 34 மைல் தூரத்தைக் கடக்க முயன்று கடுமையான கடல் கொந்தளிப்பினால் தோல்வியடைய நேர்ந்தது. கோடியக்கரையை அடைவதற்கு 7 மைல்கள் இருக்கையில் அவரால் தொடர்ந்து நீந்த முடியவில்லை. இதனால் 9 நாட்களுக்குப் பின்னர் மீண்டும் முயற்சி செய்ய முடிவு செய்தார்.
1954 மார்ச் 25 மாலை 4:10 மணிக்கு அவர் தனது இரண்டாவது பயணத்தை ஆரம்பித்தார். பல இடர்களுக்கு மத்தியில் 1954 மார்ச் 26 மாலை 7 மணிக்கு 27 மணி நேரம் நீந்திய பின்னர் வேதாரண்யத்தை வந்தடைந்தார்.
அடுத்த நாள் காலையில் கோடியக்கரை, வேதாரண்யம், திருநெல்வேலி மக்கள் பெரும் வரவேற்பு அளித்தனர். நவரத்தினசாமி மார்ச் 28 மாலை 6:30 இற்கு வல்வெட்டித்துறை வந்தடைந்தார். சேர் கந்தையா வைத்தியநாதன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரி. இராமலிங்கம், வ. நல்லையா, என். எம். பெரேரா உட்பட பெருமளவு மக்கள் இவரை வல்வெட்டித்துறையில் வரவேற்றனர். யாழ்ப்பாணக் குடாநாடு விழாக்கோலம் பூண்டிருந்தது. இந்திய, இலங்கை ஊடகங்கள் இச்சாதனைக்கு முக்கியத்துவம் கொடுத்து எழுதியிருந்தன. இந்தியப் பிரதமர் ஜவகர்லால் நேரு, இலங்கைப் பிரதமர் சேர் ஜோன் கொத்தலாவலை ஆகியோர் வாழ்த்துச் செய்திகள் அனுப்பியிருந்தனர். கொழும்பில் காலிமுகத்திடலில் 1954 ஏப்ரல் 9ல் நடந்த ஒரு பாராட்டு நிகழ்வில் பிரதமர் இவருக்கு ஒரு வெள்ளிக் கேடயத்தைப் பரிசாகக் கொடுத்தார். எலிசபெத் மகாராணி தனது பிறந்த நாள் நினைவாக இவருக்கு British Empire Medal (BEM) வழங்கிக் கௌரவித்தார். இவ்விருது கொழும்பில் உள்ள குயீன்சு மாளிகையில் 1955 சனவரி 15 இல் நவரத்தினசாமிக்கு வழங்கப்பட்டது
நீச்சல் வீரன் நவரத்தினசாமியைக் கெளரவிக்கும் முகமாக கடந்த 25.03.2014 ஆம் ஆண்டு நவரத்தினசாமியின் சிலை தொண்டைமனாற்றுச் சந்தியையொட்டி திறந்து வைக்கப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக