News18 Tamil : சாத்தான்குளம் போலீசார் தன்னை கொலை செய்து விடுவதாக மிரட்டியதாக மார்ட்டின் என்பவர் உயிரோடு இருக்கும் போது வெளியிட்ட வீடியோ தூத்துக்குடி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் தைக்கா தெருவைச் சேர்ந்தவர் 45 வயதான மார்டின். வேன் ஓட்டுநரான இவர், ஃபைனான்ஸ் தொழிலிலும் ஈடுபட்டு வந்தார்.இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த மீரான் மைதீன் என்பவருக்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கலில் பிரச்சனை ஏற்பட்டு, முன்விரோதம் இருந்து வந்தது.
இந்த நிலையில், கடந்த 10ம் தேதி அன்று இரவு மார்ட்டின் தனது சகோதரரான மணிகண்டன் என்பவருடன் இருசக்கர வாகனத்தின் சாத்தான்குளம் பள்ளிவாசல் அருகே வந்து கொண்டிருந்தார். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த பாபு சுல்தான், மைதீன் மீரான், புகாரி உட்பட 10க்கும் மேற்பட்டோர் மார்ட்டினை வழிமறித்து அரிவாள் மற்றும் கத்தியால் தாக்கி கொலை செய்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற சாத்தான்குளம் காவல் நிலைய போலீசார், மார்ட்டினின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலையாளிகளைப் பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசாரின் தீவிர தேடுதல் வேட்டையில் பாபு சுல்தான், புஹாரி, ரஸ்ருதின், பாரீஸ், ஜிந்தா மற்றும் அப்துல் சமது ஆகிய 6 பேரை கடந்த 11ம் தேதி போலீசார் கைது செய்தனர்.
மேலும் இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட மீரான் மைதீன், முகமது பிலால் ஆகிய 2 பேர் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனர். இதனிடையே மார்ட்டின் உயிரிழப்பதற்கு முன்னதாக வெளியிட்ட வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
அதில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சாத்தான் குளம் போலீசார் தன்னை சட்டவிரோதமாக காவலில் எடுத்து அடித்து கொடுமைப்படுத்தியதாக குறிப்பிட்டுள்ளார். காவல் உதவி ஆய்வாளர் ஒருவர் வேறு குற்றவாளிகளை தேடி வரும் போதெல்லாம், தனது வீட்டிற்குச் வந்து குடும்பத்தினரை மிரட்டிச் சென்றதாகவும் கூறியுள்ளார். நடத்தப்பட்டது திட்டமிட்ட கொலையே என்றும் இந்த கொலை தொடர்பாக போலீசார் முறையான விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக