பனிக்கன்குளம் பகுதியில் பையில் ஏதோ வைத்து , வழிமறித்து விற்க முயன்றாளொரு பெண்!
“பாலைப்பழம்!”
பார்த்ததும் வாகனத்தை நிறுத்தினேன்.
மாஸ்க்கை மீண்டும் சரிப்படுத்திக் கொண்டு கேட்டேன்
“என்ன விலை?”
“ஒரு Bag நூறு ரூபா!”
அருகில் வீதியோரமாக அவள் கணவனாக இருக்க வேண்டும். ஒரு பெரிய சட்டியிலிருந்த பாலைப் பழங்களை பைகளில் போட்டுக் கொண்டிருந்தார்
ஒரு Bag ஐப் பணங்கொடுத்து வாங்கிவிட்டேன். அப்பெண் விடுவதாயில்லை.
“அண்ணே இன்னும் இரண்டு வாங்குங்கண்ணே!”
“வேணாம் போதும்!”
இப்பொழுது அவளது கணவர் எழுந்து என்னருகில் வருகின்றார்.
“விடியேல இருந்து நிற்கிறமண்ணே! ஒருத்தரும் வாகனத்தை நிற்பாட்டுகினமில்லை. வீட்டில சரியான கஸ்ரமண்ணே! நாங்கள் விறகு வெட்டி றோட்டில வைச்சு விற்கிறது. இப்ப ஆட்கள் வாறயில்லை விறகு யாவாரமுமில்லை! அதோட பாலைப்பழம் விற்கத் தொடங்கினம் இந்தக் கொறோனாக்குப் பயந்தோ தெரியா சனங்கள் வாகனத்தை நிற்பாட்டுதுகளில்லை! நீங்கள் தானண்ணே முதல் யாவாரம்.”
அவர் மூச்சு விடாமல் பேசவும் எனது அடுத்த கேள்விக்கணை பறந்தது.
“ உங்களுக்கு எத்தனை பிள்ளையள்?”
“இரண்டு, ஒரு ஆம்பிளைப் பிள்ளையும், ஒரு பொம்பிளைப் பிள்ளையும் சின்னாக்களண்ணே!”
“அப்ப நீங்க ரெண்டு பேரும் இங்க நின்றாப் பிள்ளையளை ஆரு பாக்கினம்?”
“அவை தனியத்தான் நிற்கினம், அவைக்குப் பழகீற்றுதண்ணே!”
என்று கூறவும், பயணத்தடை காலப் பஞ்சஅரக்கனின் கோரப்பிடி அக்குடும்பத்தையும் விட்டு வைக்கவில்லை என்று விளங்கிக் கொள்ள அதிக நேரம் எடுக்கவில்லை எனக்கு!
வவுனியா மக்களுக்கான பயணத்தடைக் கால உதவிக்காக எனது மாணவன் த. நிரோஐன் ஒதுக்கிய பணத்தில் இரண்டாயிரம் ரூபாவை அந்த மனிதனிடம் நீட்டினேன்.
“வேண்டாமண்ணே!”
“பரவாயில்லைப் பிடியுங்க! பிள்ளையளுக்கு சமையலுக்கேதும் வாங்குங்க!” என்றேன்.
“அவ்வளவு காசுக்கும் பாலைப்பழம் தரட்டாண்ணே! சும்மா காசு வேண்டாமண்ணே!”
“தம்பி, நான் ஒரு ஆசிரியர். என்னிடம் படித்த மாணவன் உங்களைப் போல ஆட்களுக்கு உதவ என்று ஒதுக்கிய நிதிதான் இது யோசிக்காமப் பிடியுங்க!” என்றேன்.
வாங்கிக் கொண்டார்.
வாழ்க்கையில் பிடிப்பற்று விரக்தியுறும் நிலையிலிருக்கும் இது போன்ற குடும்பங்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க வைத்த எனதருமை மாணவர்கள் போற்றுதற்குரியவர்கள்!
கடந்த திங்கட்கிழமை குழந்தையொன்றுக்குத் தந்தையாகித் தான் பெற்ற மகிழ்ச்சியை ; ஏழைகளை மகிழ்வித்து இரட்டிப்பாக்க வேண்டுமென்றெண்ணிய எனதன்பு மாணவன் த. நிரோஜனுக்கு என்னுடைய நல்வாழ்த்துக்கள்!
அன்புடன் K.KAJARUBAN
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக