சனி, 19 ஜூன், 2021

மேகதாட்டு அணை: கர்நாடக அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம்!

மேகதாட்டு அணை: கர்நாடக அரசுக்கு முதல்வர் கண்டனம்!

minnambalam : மேட்டூர் அணையிலிருந்து குறுவை சாகுபடிக்காகக் கடந்த ஜூன் 12ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் தண்ணீர் திறந்து வைத்தார். அப்போது, "டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி பரப்பை அதிகரிப்பதே இந்த அரசின் இலக்கு. வழக்கம்போல் ஆண்டுதோறும் ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணையை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்தார்.

இதனிடையே கர்நாடக அரசு காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாட்டுவில் அணைகட்ட முயற்சி செய்து வருகிறது. இந்த அணை கட்டப்பட்டால் தமிழ்நாடு  விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள். இதனால் அணை கட்டுவதற்குத் தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

இந்நிலையில் நேற்று (ஜூன் 18) பேட்டியளித்த கர்நாடகா முதல்வர் எடியூரப்பா கேள்வி ஒன்றுக்குப் பதில் அளிக்கையில், மத்திய அரசின் அனுமதி வந்தவுடன் மேகதாட்டு அணையின் கட்டுமானப் பணிகள் தொடங்கப்படும்” என்று தெரிவித்தார்.

இதற்கு, கண்டனம் தெரிவித்து தமிழ்நாடு அரசு  முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், கர்நாடக முதல்வர் ஒருதலைபட்சமாக அறிவித்திருப்பது கண்டனத்திற்குரியது.

இத்திட்டம் தமிழ்நாடு விவசாயிகளின் நலனுக்கு விரோதமானது. தமிழ்நாட்டிற்குக் கிடைக்கும் காவிரி நீரின் அளவினைக் குறைத்திடும் என்றும் கூறி தமிழ்நாடு அரசு மிகக் கடுமையாக இத்திட்டத்தை எதிர்த்து வருகிறது.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, பிரதமரிடம் தமிழ்நாடு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் அத்தீர்மானத்தை 28.3.2015 அன்று நேரடியாக வழங்கியும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்றத்தில் இந்தப் புதிய அணை கட்டுவது தொடர்பாகத் தமிழ்நாடு அரசு தொடுத்த வழக்கும் நிலுவையில் உள்ளது. காவிரி மேலாண்மை ஆணையத்திலும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்போது பிரதமர் மோடியை டெல்லியில் நேரில் சந்தித்தபோது “மேகதாட்டு அணைக் கட்டுவதற்கு அனுமதி வழங்கக் கூடாது” என வலியுறுத்தியிருக்கிறேன்.

இந்நிலையில் கர்நாடக முதல்வர் எடியூரப்பா தன்னிச்சையாக இப்படியொரு அறிவிப்பை வெளியிட்டிருப்பது இரு மாநில நல்லுறவிற்கு எவ்வித்திலும் உகந்த ஒரு நிலைப்பாடு அல்ல என்பதோடு, தமிழ்நாட்டையும் - தமிழ்நாட்டு விவசாயிகளையும் வஞ்சிக்க முயற்சிக்கும் செயலாகும்.

தமிழ்நாட்டு விவசாயிகள் மற்றும் தமிழ்நாட்டு மக்களின் நலனுக்கும் - உச்ச நீதிமன்றத்தின் காவிரி இறுதித் தீர்ப்பிற்கும் எதிரான மேகதாட்டு அணைக் கட்டும் முடிவினை கர்நாடக மாநில அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்றும், மேகதாட்டு அணைக் கட்ட மத்திய அரசு அனுமதி வழங்கக் கூடாது என்றும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.

-பிரியா

 

கருத்துகள் இல்லை: