Rubasangary Veerasingam Gnanasangary : மின்னலின் காந்த அலையால் தாக்கப்பட்ட எனது அனுபவம்.
பல வருடங்களுக்கு முன்னர், நான் pizza டெலிவரி செய்வதற்காக காரில் இருந்து பீட்சாவை காவிக்கொண்டு அந்த வீட்டின் கதவை நோக்கி சென்று கொண்டிருந்தேன்.
வீட்டின் பக்கத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்ட கரவன் வண்டி (caravan - படத்தில் உள்ளது) மீது மின்னல் தாக்கியது.
அந்த கரவனுக்கும் எனக்கும் சுமார் பதினைந்து அடி தூரம்தான் இருக்கும். சலீங் என்று கண்ணாடிகள் உடையும் சத்தம், நான் நிதானமாகத்தான் நடந்து சென்று கொண்டிருந்தேன். ஆனால் எனது கால்கள் விறுவிறு என்று அடிகள் வைக்கத் தொடங்கின. என்னை ஏதோ இழுப்பது போன்று உணர்ந்தேன். நானும் அதை எதிர்க்க முயற்சிக்கிறேன் ஒரு நொடிக்குள்ளேயே சடார் என்று என்னை குப்பற விழுத்தியது. அதே வேகத்தில் நானும் எழுத்துவிட முயற்சித்தேன் ஆனால் தொடர்ந்து சில நொடிகளுக்கு என்னை இழுத்துப் பிடித்தவண்ணமே இருந்தது.
எனது கைவிரல்கள் இரண்டில் இரத்த உறைவு சிறிதாகவும் முழங்கால்கள் கொஞ்சம் பலமாகவும் அடிபட்டதை காரில் ஏறி அமர்ந்த பின்னரே உணர்ந்தேன்.
Dr. கனகசபாபதி வாசுதேவா அவர்களிடம் "மின்னல் தாக்கி அநியாய இறப்புகள் ஏற்படுகின்றனவே, அதுபற்றிய தங்கள் ஆலோசனையை எழுதுங்களேன்" என்று கேட்டிருந்தேன். அவரும் எழுதி உள்ளார்.
இது ஒரு முக்கியமான பதிவு. share பண்ணாவிடினும் லைக் மற்றும் comment செய்வதன் மூலம் பலரின் கண்களில் படும். நன்றி.
Farm to Table : மின்னல் - 1
மின்னல் தாக்குதலில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்வது எப்படி!
By Dr. கனகசபாபதி வாசுதேவா MBBS, Post Graduate Diploma in Legal Medicine (DLM ), MD (Forensic Medicine)
முல்லைத்தீவில் நால்வரினை பலி கொண்ட மின்னல்.
கடந்த மாதத்தில் மட்டும் முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இடம் பெற்ற மின்னல் தாக்குதல்களின் பொழுது நான்கு பேர் பரிதாபகரமான முறையில் மரணத்தினை தழுவியமை பலருக்கும் தெரியாமல் இருக்கும். இவ்வாறான பரிதாபகரமான அகால மரணங்கள் நிச்சயம் தடுக்கப்பட கூடியவையே. மக்களிடையே விழிப்புணர்வு இன்மையும் அலட்சியமுமே இவ்வாறான மரணங்களுக்கு எதுவாக அமைந்து விடுகின்றன என்றால் அது மிகையாகாது. பொதுமக்கள் பலரும் கூறும் விடயம் யாதெனில் தாங்கள் பல வருடங்களாக இவ்வாறு விவசாயம் செய்யும் பொழுதும் வெளிகளில் நின்று வேறு வேலை செய்யும் பொழுதும் தங்களை இவ்வாறு மின்னல் தாக்கவில்லை என்பதுவும் மற்றும் தங்களுக்கு இவ்வாறு மின்னல் தாக்கும் என்பது தெரியாது என்பதுவுமே.
இனி நாம் திறந்தவெளியில் இருப்பின் மின்னல் தாக்குதலில் இருந்து எவ்வாறு எம்மை பாதுகாத்து கொள்ளலாம் என்பது பற்றி பார்ப்போம்.
1. வெளிவேலைகளுக்கு செல்வதற்கு முன்பாக அன்றைய தினத்திற்குரிய வானிலை அறிக்கையினை கவனத்தில் கொள்ளல் நன்று. இடி மற்றும் மின்னல் பற்றிய எச்சரிக்கை இருப்பின், அந்த வேலையினை அல்லது பயணத்தினை ஒத்திப்போடுவது சிறந்தது.
2. இடி இடிக்கும் பொழுது அருகில் உள்ள சீமேந்திலால் ஆன கட்டிடங்களுக்குள் செல்லவும். அல்லது வாகனங்களில் உள்ளே இருந்தவாறு கண்ணாடிகளை மூடிக்கொள்ளலாம். மேலும் தகரக்கூரை உடைய கட்டிடங்களை தவிர்க்க வேண்டும்.
3. உயரமான மலைப்பகுதியில் அல்லது மேடான பகுதியில் இருந்தால் உடனடியாக சமவெளி பகுதி நோக்கி உடனடியாக நகர வேண்டும்.
4. சமவெளி அல்லது வயல் வெளி பகுதியில் இருந்தால் அருகில் உள்ள கட்டிடங்களுக்கு செல்ல வேண்டும். மரங்களுக்கு கீழே செல்ல கூடாது. பொதுவாக மக்கள் மின்னலுடன் மழையும் பெய்யும் சந்தர்ப்பத்தில் மழையில் இருந்து தப்புவதற்காக மரத்தின் கீழ் ஒதுங்குவதினை தவிர்க்க வேண்டும்.
5. ஆறு மற்றும் குளம் போன்ற நீர்நிலைகளில் இருந்தால் உடனடியாக வெளியேற வேண்டும். அவ்வாறே ஈரலிப்பான நீர் நிறைந்த வயல் வெளிகளில் இருந்தாலும் உடனடியாக வெளியேற வேண்டும். சில சந்தர்ப்பங்களில் இவ்வாறு வெளியறவே ஒருசில மணித்தியாலங்கள் செலவாகும் என்பது குறிப்பிடத்தக்கது. அருகில் உள்ள காய்ந்த நிலப்பரப்பிற்கு செல்லவேண்டும்.
6. தரையில் படுத்த நிலையில் இருந்தால் மின்னல் தாக்கும் வாய்ப்பு அதிகரிக்கும்.
7. 30/30 என்ற விதியினை கைக்கொள்வது நன்று. அதாவது மின்னலினை கண்டபின் 30 இலக்கம் எண்ணுவதற்குள் இடி ஓசை கேட்குமானால்(அதாவது அவர்களிற்கு அண்மையிலேயே மின்னல் தாக்கம் நடைபெறவுள்ளது) மின்னல் பாதுகாப்பான இடங்களிற்கு செல்ல வேண்டும் அதன் பின்னர் கடைசி இடி ஓசை கேட்டு 30 நிமிடங்களின் பின்னரே வெளியே வர வேண்டும் (இடி ஓசை நின்ற பின்னரும் மின்னல் தாக்கம் நிகழ வாய்ப்புள்ளது) .
8. மின்சாரத்தினை கடத்தும் வயர்களுக்கு, உலோக கம்பிகளுக்கு மற்றும் எதாவது உலோக பொருட்களுக்கு அருகாமையில் நிற்றல் அல்லது அவற்றினை தொடுகையில் வைத்திருத்தல் நல்லது அல்ல.
9. இவ்வாறே கைத்தொலை பேசி, நிரந்தர தொலைபேசி மற்றும் ஏனைய மின்சாதனங்களை இடி மின்னலின் பொழுது கையாழ்வது ஆபத்தினை விளைவிக்கும்.
10. மரத்தடியில், குறிப்பாக தனியாக உள்ள மரத்தடியில் ஒதுங்க கூடாது.
11. திறந்த வெளியில் அல்லது வயல் வெளியில் நின்றிருந்தால் , கால்கள் இரண்டையும் மடக்கி குத்தி ,கைகளால் கால்களை சுற்றி, கைகளினால் காதுகளை மூடி கண்களை மூடி, தலை கவிழ்ந்த நிலையில் அமரவேண்டும். இவ்வாறு செய்யவது மின்னல் தாக்கும் பரப்பினை குறைக்க உதவும்.
12. இடி இடிக்கும் பொழுது குழுவாக இருந்தால் உடனடியாக பிரிந்து செல்ல வேண்டும். இதனால் ஏற்படும் உயிரிழப்புக்கள் குறைவாக இருக்கும்.
13. இறப்பர் செருப்புக்களோ வாகனங்களின் ரயர்களோ மின்னலின் தாக்குதலில் இருந்து பாதுகாப்பினை தராது.
இடி தாக்குவதை 45 நிமிடங்கள் முன்பே கணிக்கும் தொழில்நுட்பம்.
இடியும் மின்னலும் எங்கே தாக்கும் என்பதை முன்கூட்டியே கணித்துவிட்டால், இந்த உயிரிழப்புகளைத் தவிர்க்க முடியும்தானே.
அதற்கான ஒரு தொழில்நுட்பத்தை பல நாடுகள் பயன்படுத்தி வருகின்றன. இந்த தொழிநுட்பத்தைப் பயன்படுத்தி இடி-மின்னல் பயணிக்கும் பாதையை உடனுக்குடனே மேப்பில் டிராக் செய்ய முடியும். இந்த நொடி மின்னல் எந்த இடத்தில் பயணிக்கிறது என்று பார்க்க முடியும் என்பது மட்டுமில்லாமல், துல்லியமாக எந்த கிராமத்தை மின்னல் தாக்கப் போகிறது என்பதை 45 நிமிடம் முன்னதாகவே கணிக்க முடியும். ஆனாலும், உயிரிழப்புகளைத் தடுப்பது இன்னும் சவாலானதாகவே இருக்கிறது. குறிப்பிட்ட ஊருக்கு எச்சரிக்கையை அனுப்பிவிட முடியும் என்றாலும், அந்த ஊரிலேயே தனிமையான வயல்வெளிகளில் வேலை செய்கிறவர்கள், நடந்து செல்கிறவர்கள், செல்பேசி இல்லாதவர்கள் போன்றவர்களை எப்படி 45 நிமிடத்துக்குள் தொடர்புகொண்டு எச்சரிப்பது என்பதே சவாலான பணி.
முற்றும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக