நக்கீரன் செய்திப்பிரிவு : ஆன்மீகவாதி போர்வையில் மாணவிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சிவசங்கர் பாபா மீது போக்சோ பிரிவின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியான நிலையில்,
இந்த வழக்கு நேற்று (14.06.2021) சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றப்பட்டது. தற்போது டேராடூனில் உள்ள அவரை விசாரிக்க சி.பி.சி.ஐ.டி குழு விரைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில் ஹரி சர்வதேச பள்ளியின் நிறுவனர் சிவசங்கர், ஆன்மீகவாதி என்ற போர்வையில் மாணவிகளைப் பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கியது குறித்து அந்தப் பள்ளியின் முன்னாள் மாணவிகள் சமூக வலைதளங்களில் பரபரப்பு குற்றச்சாட்டுகளை வைத்துவருகின்றனர்.
இதுதொடர்பான வழக்கில் மாமல்லபுரம் அனைத்து மகளிர் காவல்துறையினர் போக்சோ உட்பட 8 பிரிவுகளின்கீழ் சிவசங்கர் பாபா உள்ளிட்ட சிலர் மீது வழக்குப் பதிவு செய்யபட்ட நிலையில், இந்த வழக்கு நேற்று சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றப்பட்டது.
இந்நிலையில் சிவசங்கர் பாபா நெஞ்சுவலி காரணமாக உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக சான்றுகளை, புகைப்படங்களை அவரது தரப்பினர் சமர்ப்பித்திருந்தனர். இதையடுத்து டேராடூனில் உள்ள சிவசங்கர் பாபாவை நேரடியாக விசாரிக்க சி.பி.சி.ஐ.டி குழு விரைந்தது. மேலும், சிவசங்கர் பாபா வெளிநாடு தப்பிச் செல்லாமல் இருக்க விமான நிலையங்களுக்கு லுக் அவுட் நோட்டீஸ் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக