கலைஞர் செய்திகள் : தனியார் மருத்துவமனைகளுக்கு கொடுக்கப்பட்ட 1.29 கோடி தடுப்பூசிகளில் 22 லட்சம் தடுப்பூசிகள் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்று பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதை அடுத்து, பொதுமக்களுக்கு கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. தடுப்பூசிகளை ஒன்றிய அரசு அதிகமாகக் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்காததன் விளைவு, நாடுமுழுவதும் தடுப்பூசிக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உட்பட பல மாநில முதல்வர்கள் 18 வயதுக்கு மேல் இருப்பவர்களுக்கு செலுத்தப்படும்
தடுப்பூசிகளை ஒன்றிய அரசு இலவசமாக வழங்க வேண்டும் என தொடர்ச்சியாக வலியுறுத்தினர். இதனால் ஒன்றிய அரசு நாட்டிலுள்ள 18 வயதைக் கடந்த அனைவருக்கும் ஜூன் 21 முதல் தடுப்பூசிகளை இலவசமாக வழங்கும் என தெரிவித்தது.
ஒன்றிய அரசின் தவறான முடிவு... தனியார் மருத்துவமனைகளில் தேங்கிக் கிடக்கும் 1 கோடி தடுப்பூசிகள்!
மேலும் தனியாருக்கு வழங்கும் 25 சதவீத அளவை குறைக்க வேண்டும் என ஒன்றிய அரசிடம் வலியுறுத்தப்பட்டது. ஆனால் அதேநேரம், தனியாருக்கு தடுப்பூசி வழங்கும் சதவீதத்தை ஒன்றிய அரசு குறைக்கவில்லை. இந்நிலையில் தனியார் மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட்ட 1.85 கோடி தடுப்பூசிகளில் வெறும் 22 லட்சம் தடுப்பூசிகள் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக ஒன்றிய அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில்,"நாடு முழுதும் 1.85 கோடி தடுப்பூசிகள் தனியார் மருத்துவமனைக்கு ஒதுக்கப்பட்டதில் 1.29 கோடி தடுப்பூசிகளை மருத்துவமனைகள் பெற்றன. இவற்றில் 22 லட்சம் தடுப்பூசிகள் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளன" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தடுப்பூசி போட்டுக்கொள்ள நிலவும் தயக்கமும், தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி விலையும் குறைவான பயன்பாட்டுக்குக் காரணமாக இருக்கலாம் என்றும் 25% டோஸ்கள் தனியார் மருத்துவமனைக்கு அளிக்கப்பட்டதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
நாடுமுழுவதும் தடுப்பூசிக்குத் தட்டுப்பாடு இருந்தாலும், பல மாநிலங்களில் தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசிகள் தேங்கிக் கிடப்பது அதிர்ச்சியடையச் செய்துள்ளது. எனவே தனியாருக்கு ஒதுக்கப்படும் அளவை ஒன்றிய அரசு குறைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக