Suguna Diwakar - soodram.con : சமூக வலைத்தளங்களில் ஈழ ஆதரவாளர்களுக்கும் தி.மு.க.வினருக்குமான மோதல் உச்சத்தை அடைந்துள்ளது.
நாம் தமிழர் கட்சியினரும் சில ஈழத்தமிழர்களும் கலைஞரையும் தி.மு.க.வையும் தனிப்பட்ட முறையில் வசைபாடி பின் பெரியார், அண்ணா உள்ளிட்ட திராவிட இயக்க முன்னோடிகளையும் வசைபாடும் நிலைக்குச் சென்றதையும்
அதற்கு எதிர்வினையாகத் தி.மு.க.வினரில் ஒருபிரிவினர் பிரபாகரனையும் விடுதலைப்புலிகள் இயக்கத்தையும் விமர்சனம் என்பதைத் தாண்டி தனிநபர் இழிவுபடுத்துதல் என்ற எல்லைக்குச் செல்வதையும் காணமுடிகிறது.
ஈழப்பிரச்னைக்கும் தமிழக அரசியலுக்குமான உறவு என்பதற்கு நீண்டகால வரலாறு உண்டு.
குறிப்பாக ஈழத்தமிழர்களுக்கும் திராவிட அரசியலுக்குமான தொடர்பு ஏறத்தாழ ஒரு நூற்றாண்டுக்கால உறவு. 1932ல் இலங்கைக்குச் சென்ற பெரியார் அங்குள்ள தமிழர்களிடம் ஆற்றிய உரை, ‘ஈ. வெ. இராமசாமியின் இலங்கை உபந்யாசம்’ என்ற பெயரில் நூலாக வெளியானது. பிறகு ‘தந்தை பெரியாரின் இலங்கைப்பேருரை’ என்ற பெயரில் பல பதிப்புகள் கண்டது அந்த நூல். கடவுள், சாதி, மதத்தைப் போலவே அந்த உரையில் தேசியம் குறித்தும் கடுமையான விமர்சனத்தை முன்வைத்திருப்பார் பெரியார். ஒற்றை அடையாளத்தின்கீழ் நிறுவப்படும் தேசியம் குறித்து நாம் இப்போது பேசுகிறோம். ஆனால் இதை 30களில் பேசி நம்மை ஆச்சர்யப்படுத்தியிருப்பார் பெரியார்.
திராவிடர் கழகமும் திராவிட முன்னேற்றக்கழகமும் ஈழத்தமிழர்கள் மத்தியிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது. குறிப்பாகக் கலைஞரின் தமிழுக்கும் எம்.ஜி.ஆரின் சினிமாவுக்கும் ஈழத்தில் ரசிகர்கள் அதிகம். இனப்பிரச்னை ஈழத்தில் தொடங்கிய காலத்திலேயே திராவிடர் கழகமும் தி.மு.க.வும் தமிழர்களின் மீதான உரிமை மறுப்பைக் கண்டித்து தீர்மானம் போட்டிருக்கின்றன. ஈழத்தந்தை என்றழைக்கப்படும் செல்வநாயகம் பெரியாரைச் சந்தித்தார். என்றாலும் 80-களுக்குப் பிறகுதான் ஈழப்பிரச்னை தமிழக அரசியலில் தாக்கம் செலுத்த ஆரம்பித்தது.
சிங்களப் பேரினவாத ஒடுக்குமுறைக்கு எதிராக ஈழத்தில் உருவான ஆயுதக்குழுக்கள், 1983-ல் நடந்த ஜூலை இனப்படுகொலைகள் ஆகியவற்றின் விளைவாக, ஈழத்தமிழர் பிரச்னை குறித்து தமிழக மக்கள் கவனம் செலுத்த ஆரம்பித்தனர். அதற்கு முக்கிய காரணம் திராவிட இயக்கமே.
இலங்கையில் உருவான பெருவாரியான போராளிக்குழுக்கள் தமிழகத்தைத் தங்கள் ஆதரவுத்தளமாகப் பயன்படுத்திக்கொண்டனர். வெறுமனே அரசியல் ஆதரவுத்தளம் என்று மட்டுமல்லாமல் ஆயுதப்பயிற்சிக்கான தளமாகவும் பயன்படுத்திக்கொண்டனர்.
அன்றைக்கிருந்த இந்திராகாந்தி அரசும் தெற்காசியாவில் தன் ஆதிக்கத்தை நிலைநாட்ட, பல்வேறு போராளி அமைப்புகளுக்கு ஆதரவு தந்து ஆயுதப் பயிற்சியும் அளித்தது. அப்போதைய தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு தந்து நிதியுதவியும் அளித்தார். கலைஞர் திரட்டித்தந்த நிதியைப் புலிகள் வாங்கிக்கொள்ளவில்லை. தொடக்கக் காலத்தில் தி.மு.க. தலைவர் கலைஞர், ‘டெலோ’ ஆதரவாளராக இருந்தார். டெலோ தலைவர் சபாரத்தினம் புலிகளால் கொல்லப்பட்டபோது அதைக் கண்டித்த கலைஞர், ‘பாலைவன ரோஜாக்கள்’ படத்தில் சத்யராஜ் கதாபாத்திரத்துக்கு சபாரத்தினம் பெயரைச் சூட்டினார்.
ஈழ ஆதரவு அரசியலில் அ.தி.மு.க, திராவிடர் கழகம், தி.மு.க. என்னும் மூன்று இயக்கங்களும் ஈடுபட்டாலும் தீவிரமாக இயங்கி ஈழ ஆதவு மனநிலையைத் தமிழ் மக்கள் மத்தியில் கொண்டுபோனது திராவிடர் கழகமும் தி.மு.க.வும்தான். தொடக்ககாலத்தில் இருந்தே விடுதலைப்புலிகள் இயக்கத்தை ஆசிரியர் கி.வீரமணி உறுதியாக ஆதரித்ததால் திராவிடர் கழகத்தினர் புலிகளுக்குப் பல்வேறு உதவிகளைச் செய்தனர். கலைஞரும் வீரமணியும் ‘டெசோ’ இயக்கத்தின் மூலம் ஈழப்பிரச்னையை அகில இந்திய அளவில் கொண்டுசென்றனர்.
எம்.ஜி.ஆர் புலிகளை ஆதரித்ததன் காரணம், அவர் கண்டியில் பிறந்தததும் அவருடைய தனிப்பட்ட சாகச ஆதரவு மனப்பான்மையும்தான் என்று தோன்றுகிறது. தனிப்பட்ட முறையில் சிங்கம் வளர்த்ததைப் போல் புலிகளையும் வளர்க்க எண்ணினார். எம்.ஜி.ஆர் தனிப்பட்ட முறையில் புலிகளை ஆதரித்தாரே தவிர அதைக் கட்சியின் அடிமட்டத்தொண்டர்கள் வரை கொண்டு செல்லவில்லை. அதனால்தான் பின்னாளில் ஜெயலலிதா தீவிர புலி எதிர்ப்பாளராகச் செயற்பட்டபோது அ.தி.மு.க.வில் சிறு அதிருப்தியும் எழவில்லை.
மாறாகத் திராவிடர் கழகமும் தி.மு.க.வும் ஈழ ஆதரவைத் தன் தொண்டர்களிடமும் தமிழ் மக்களிடமும் கொண்டுசென்றன. தமிழ்நாட்டில் பிரபாகரன் என்று பெயர் வைத்தவர்களின் தந்தை திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவராகவோ தி.மு.க.வைச் சேர்ந்தவராகவோ இருப்பார் என்பதே நிதர்சனம். புலிகள் இயக்கம் தமிழகத்தில் தடைசெய்யப்பட்ட பின் அதிகமும் நெருக்கடிகளைச் சந்தித்தவர்கள் திராவிடர் கழகத்தில் இருந்த, மற்றும் விலகித் தனி இயக்கம் கண்ட பெரியாரிஸ்ட்களே. பேரறிவாளன் அதற்கு ஒரு குறியீட்டு உதாரணம். விடுதலைப்புலி ஆதரவுக்காகத் தி.மு.க.விலும் வைகோ, சுப்புலெட்சுமி ஜெகதீசன் ஆகியோர் கடுமையான நெருக்கடிகளைச் சந்தித்தனர். ஒரு முதல்வராக இருந்தபோதும் இலங்கையில் இருந்து திரும்பிய ‘இந்திய அமைதிப்படை’யை வரவேற்கச் செல்வதற்கு மறுத்தவர் கலைஞர்.
தி.மு.க. – புலிகள் விலகல் எங்கிருந்து ஆரம்பித்தது?
13 ஆண்டுகால வனவாசத்துக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த கலைஞருக்கு மிகவும் நெருக்கடியாக அமைந்தது பத்மநாபா படுகொலை. புலிகளைப் பொறுத்தவரை தங்களது ஆயுத நடவடிக்கைகளில் குறியாக இருந்தார்களே தவிர, அத்தகைய நடவடிக்கைகள் தங்கள் ஆதரவு சக்திகளுக்கு எப்படியான நெருக்கடியை ஏற்படுத்தும் என்று கவலைப்படவில்லை. அதன் விளைவுதான் பாண்டிபஜார் துப்பாக்கிச்சூடும் பத்மநாபா படுகொலையும். தி.மு.க. ஆட்சிக்கு வரும்போதெல்லாம் ‘விடுதலைப்புலிகள் ஊடுருவல். சட்டம் ஒழுங்கு கெடடுவிட்டது. கருணாநிதி ஆட்சியைக் கலைக்கவேண்டும்’ என்று ஜெயலலிதா, சோ.ராமசாமி, சுப்பிரமணியன் சுவாமி போன்றோர் பல்லவி பாடுவர். இதைக் குறித்துப் புலிகள் பெரிதாக அலட்ட்டிக்கொள்ளவில்லை. அதன் உச்சம் ராஜீவ் படுகொலை.
ராஜீவ் படுகொலையின்போது வேட்டையாடப்பட்டது
தி.க. மற்றும் தி.மு.க.வினரும் அவர்களது உடைமைகளுமே. ராஜீவ் கொலைக்கு முன்பே புலிகளைக் காரணம் காட்டி கலைஞர் ஆட்சி கலைக்கப்பட்டது. ஜெயின் கமிஷனும் ராஜீவ் கொலைக்குத் தி.மு.க.வைக் குற்றம் சாட்டியது. இதற்கு இடையில் ‘கலைஞரைக் கொலைசெய்து வைகோவைத் தி.மு.க.வின் தலைவராக்க புலிகள் முயல்வதாக’ உளவுத்துறை கொடுத்த அறிக்கையையும் கலைஞர் வெளியிட்டார். விளைவு வைகோ வெளியேற்றம், தி.மு.க உடைவு. அந்த அறிக்கையில் சொல்லப்பட்டது உண்மையா, கலைஞர் அந்த அறிக்கையைப்ப் பயன்படுத்திக்கொண்டாரா என்று தெரியவில்லை. ஆனால் அதற்குப்பின் தி.மு.க.வுக்கும் புலிகளுக்கும் இடையே ஆழமான இடைவெளி ஏற்பட்டது என்னவோ உண்மை.
புலிகளை விட்டு தி.மு.க விலகி நின்றபோதும் கலைஞர் சில காரியங்களைச் செய்யத் தவறவில்லை. ராஜீவ் கொலைவழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களில் நளினியின் தண்டனையை ஆயுள்தண்டனையாக மாற்றியவர் கலைஞரே. ‘மற்றவர்களின் மரணதண்டனையை ஏன் குறைக்கவில்லை?’ என்று இப்போது கேட்பது சுலபம்.
ஆனால் அன்றையநிலையில் அது பெரிய காரியம். ‘ஈழத்தாயின் ஆதரவாளர்கள்’, நளினியின் தண்டனை குறைக்கப்பட்டதற்கு ஜெயலலிதா என்ன அறிக்கை விடுத்தார் என்று தேடிப்படிக்கவும். அதேபோல் அ.தி.மு.க. கூட்டணியில்ல் இருந்தாலும் விடுதலைச்சிறுத்தைகள் பொதுச்செயலாளர் ரவிக்குமார் ஈழ அகதிகள் முகாம்களின் அவலம் குறித்து விகடனில் எழுதிய கட்டுரையைப் படித்து, உடனே அவரையே ஆய்ந்து அறிக்கை தரச் சொன்னதுடன், அந்த அறிக்கை பரிந்துரைகளை நிறைவேற்றவும் செய்தார் கலைஞர். ஈழ அகதிக்குழந்தைகள் தமிழகத்தில் கல்வி கற்க ஏற்பாடுகளைச் செய்தவரும் கலைஞர்தான் (அடுத்து ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா அதை ரத்து செய்தார்). ஏழுதமிழர் விடுதலை ஆதரவு இயக்கம் வலுவடைந்தபோது மரணதண்டனை ஒழிப்புக்காகக் குரல் கொடுத்தார்.
‘ஈழத்தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்கப்பட வேண்டும்’ என்றும் கலைஞர் கோரிக்கை வைத்தார்.
ஆனால் 2009 இறுதிப்போர் காலகட்டம், கலைஞரின்
அரசியல் வாழ்க்கைக்கான பெரும் சவால். இன்றைக்குப் புலிகளை விமர்சிக்கும் பல தி.மு.க.வினரும்கூட அன்று கலைஞரைத்தான் கடுமையாக விமர்சித்தார்கள். மத்தியில் கிடைத்த பதவிகளும் குடும்ப அரசியலும் கலைஞரை வேறு முடிவுகள் எடுக்கவிடாமல் தடுத்திருக்கலாம். ஆனால் கலைஞரால் அதிகபட்சம் என்ன செய்திருக்க முடியும்? காங்கிரஸ் அரசுக்குத் தந்த ஆதரவை வாபஸ் வாங்கியிருக்கலாம். தன் முதல்வர் பதவியையும் துறந்திருக்கலாம்.
ஆனால் இதனால் இலங்கையில் போர் நின்றிருக்கும் என்பதற்கான எந்த உத்திரவாதமும் இல்லை. மேலும் இந்தியாவில் ஜனநாயகத்தைக் காப்பாற்ற எமெர்ஜென்சி காலத்தில் அவர் ஆட்சியை இழந்தபோதோ ஈழ ஆதரவுக்காக அவர் ஆட்சி கலைக்கப்பட்டபோதோ மீண்டும் அவரையே தமிழக மக்கள் வாக்களித்து முதல்வராகத் தேர்ந்தெடுக்கவில்லை. ஓர் அரசியல்வாதியாக மீண்டும் தான் வெல்வதற்கான நிச்சயத்தன்மையில்லாதபோது, தன் பதவி விலகலால் போரும் நிற்க வாய்ப்பில்லாதபோது அவர் என்னதான் செய்வார்?
2009 இலங்கை இனப்படுகொலை என்பது மாபெரும் துயரம். அதற்காகக் கலைஞர் மீதான விமர்சனம் என்பதை அப்போதைய மனநிலையாகப் புரிந்துகொள்ளலாம். ஆனால் நாம் தமிழர் கட்சியோ ஈழப்படுகொலைக்குக் காரணமே கலைஞரும் தி.மு.க.வும்தான் என்று திரும்பத் திரும்பப் பேசியது. அதற்கும் மேலே போய் திராவிடத்தையும் பெரியாரையும் வசைபாட ஆரம்பித்தார்கள். புலிகளை ஆதரித்து தங்கள் வாழ்க்கையையே அர்ப்பணித்த திராவிட இயக்கத்தினர்மீது அவதூறுகளைக் கட்டவிழ்த்தார்கள். ஈழ ஆதரவுக்காகச் சிறைக்கொடுமைகளை அனுபவித்த கோவை ராமகிருஷ்ணனையும் வைகோவையும் கொஞ்சமும் மனச்சாட்சியற்று ‘தெலுங்கர்கள்’ என்று அடையாளப்படுத்தித் தாக்குதல் தொடுத்தார்கள். இவற்றுக்கான எதிர்வினை இன்று அதேபோன்ற எதிர்முனைத் தீவிரமாக மாறியுள்ளது.
கலைஞரும் புலிகளும் விலகியிருந்தபோதும் இருதரப்பும் பரஸ்பரம் புழுதிவாரித் தூற்றியதில்லை. தமிழ்ச்செல்வன் இறந்தபோது கலைஞர் இரங்கல் கவிதை எழுதினார். பிரபாகரனோ மற்ற புலிகள் இயக்க முன்னணிப் போராளிகளோ தமிழக அரசியல் தலைவர்களை அவதூறாகப் பேசியதில்லை. ஆனால் இப்போது இல்லாத கலைஞரையும் பிரபாகரையும் முன்னிட்டு இருவரையும் இருதரப்பும் பரஸ்பரம் வசைபாடுகிறது.
புலிகள் இயக்கத்தின்மீது குழந்தைப்போராளிகளைப் பயன்படுத்தியது, சகோதரப்படுகொலைகள், முஸ்லீம்கள் மீதான பகையுணர்வு, சர்வதேச அரசியல் சூழலைக் கணக்கிலெடுக்காத தன்மை குறித்த விமர்சனங்களை சிறுதரப்பு முன்வைத்தது. ஆனால் புலிகளின் தீவிர ஆதரவாளர்களாக இருந்த பெரியாரியக்கத்தினரும் தி.மு.க.வினரும் இந்த விமர்சனங்களைக் கண்டுகொண்டதில்லை.
ஆனால் இன்று பிரபாகரனை வசைபாடுவதற்கு இந்த விமர்சனங்களைக் காலந்தாழ்த்தி பயன்படுத்திக்கொள்கின்றனர். 12 ஆண்டுகளுக்குப் பின் இல்லாத புலிகளை விமர்சித்து என்ன பயன்?
ஈழத்தமிழர்களுக்கும் ஈழ ஆதரவாளர்களுக்கும் இன்றுள்ள கடமை, இலங்கை அரசின் அதிகாரம் குவிக்கப்படுவதை எதிர்ப்பதும் ஈழத்தமிழர்களின் உரிமைக்காகவும் இலங்கை அரசின் போர்க்குற்ற விசாரணைக்காகவும் குரல்கொடுப்பதும்தான். சம்பந்தமில்லாமல் நாம் தமிழர் கட்சியுடன் இணைந்து தலைவால் புரியாமல் தமிழக அரசிலில் தலையிடுவது விபரீதங்களையே ஏற்படுத்தியுள்ளது. இன்னொருபுறம் புலிகளை விமர்சிப்பது என்ற பெயரில் தி.மு.க.வின் நட்புச்சக்திகளை வசைபாடும் திருச்செயலிலும் சிலர் இறங்கியுள்ளனர். கலைஞரை முன்வைத்து பிரபாகரனை இழிவுபடுத்துபவர்களும் பிரபாகரனை முன்வைத்து கலைஞரை இழிவுபடுத்துபவர்களும் வரலாறு அறியாதவர்களாகவோ வரலாற்றை உணராதவர்களாகவோதான் இருப்பார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக