வியாழன், 17 டிசம்பர், 2020

ஐஐடியில் இட ஒதுக்கீடு ரத்து? தமிழகத்தில் எதிர்ப்பு!

ஐஐடியில் இட ஒதுக்கீடு ரத்து? தமிழகத்தில் எதிர்ப்பு!

  minnambalam :ஐஐடியில் இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய பரிந்துரைக்கப்பட்டிருப்பதற்குத் தமிழகத்தில் எதிர்ப்பு எழுந்துள்ளது. 

 ஐஐடி நிறுவனங்களில் ஆசிரியர்கள் நியமனத்தில் மட்டுமின்றி, மாணவர் சேர்க்கையிலும் இட ஒதுக்கீட்டைப் பயனுள்ள வகையில் செயல்படுத்துவதற்கான திட்டங்கள் குறித்து அரசுக்குப் பரிந்துரைப்பதற்காக டெல்லி ஐஐடி இயக்குநர் ராம்கோபால் ராவ் தலைமையில் ஒரு வல்லுநர் குழுவைக் கடந்த ஏப்ரல் மாதம் மத்திய உயர்கல்வித் துறை அமைத்தது.தனது அறிக்கையை ஜூலை மாதம் தாக்கல் செய்தது. அதில், இடம்பெற்றுள்ள அம்சங்கள் பற்றித் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்படி பெறப்பட்ட விவரங்களில்தான் இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய அந்தக் குழு பரிந்துரைத்திருப்பது தெரியவந்துள்ளது. ஐஐடிகளில் ஆசிரியர்களாக நியமிக்கப்படுவதற்குத் தகுதியான ஆட்கள் இட ஒதுக்கீட்டுப் பிரிவிலிருந்து கிடைப்பதில்லை என்றும் அதில் குறிப்பிடப்பட்டது. இதற்கு தமிழக அரசியல் தலைவர்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்பு எழுந்திருக்கிறது.

ராம்கோபால் ராவ் குழுவின் பரிந்துரைக்கு கண்டனம் தெரிவித்த திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன், “130 கோடி இந்தியர்கள் என்று ஒவ்வொரு முறையும் பேசும் பிரதமர் 80 சதவிகித இந்தியர்கள் தகுதியில்லாதவர்கள் என்ற தொடர்ந்து பொய்ப் பிரச்சாரம் செய்யும் ஆதிக்க, ஆணவ சக்திகளுக்கு இடமளிக்கிறார், தங்களைத் தவிர மீதியுள்ளவர்கள் யாருமே தகுதியில்லாதவர்கள் என்பது குதர்க்கவாதிகளின் பழமைவாதம்” என்றார்.

பரிந்துரையைத் தூக்கி குப்பைத் தொட்டியில் வீசிவிட்டு, ஐஐடி கல்வி நிறுவனங்கள், மத்திய பல்கலைக்கழகங்கள் அனைத்திலும் 49.5 சதவிகித இட ஒதுக்கீட்டை முழுமையாகச் செயல்படுத்த வேண்டும் என்றும், உயர் தகுதிமிக்க கல்வி நிறுவனங்களுக்கும் இட ஒதுக்கீடு பொருந்தும் என்று உடனடியாக ஓர் அவசரச் சட்டம் கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும் எனவும் அவர் பிரதமருக்கு வலியுறுத்தினார்.

ஆசிரியர் நியமனங்களில் இட ஒதுக்கீடு தேவையில்லை என்று முதல்கட்டமாகத் தொடங்கி, பின்னர் மாணவர் சேர்க்கையிலும் இதை ஒழித்து, முழுக்க முழுக்க இதைக் குறிப்பிட்ட வகுப்பினருக்கே பகல்கொள்ளையாக்கிவிடும் திட்டத்தோடுதான் அக்கமிட்டி பரிந்துரைத்துள்ளது என்று குறிப்பிட்ட திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, “சமூக நீதியை ஒழித்திட, காவி, மதவெறி ஆட்சி சமூக நீதியைச் சாய்க்க நாளும் முயன்று வருகிறது. ஒடுக்கப்பட்டோரை ஒன்று திரட்டி, போராட்டக்களம் காணுவோம். வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பாடம் புகட்டத் தவறாதீர்” என்றார்.

பாமக நிறுவனர் ராமதாஸ், ஐஐடிகளில் தகுதிகள் அடிப்படையில் நியமனம் நடைபெறுகிறது என்பதே குரூரமான நகைச்சுவைதான். இட ஒதுக்கீட்டை எவ்வாறு சிறப்பாகச் செயல்படுத்தலாம் என்பது குறித்து பரிந்துரைப்பதற்காகத்தான் குழு அமைக்கப்பட்டது. ஆனால், அந்தக் குழுவோ இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என்று பரிந்துரைத்திருப்பது நகைமுரண் எனச் சாடினார்.

இந்தப் பரிந்துரையை ஏற்காமல் ஐஐடிகளில் பணி நியமனத்தை வெளிப்படையானதாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். வல்லுநர் குழுவின் பரிந்துரை ஏற்கப்பட்டால், போராட்டம் நடைபெறும் எனவும் எச்சரிக்கை விடுத்தார்.

ஐஐடி, ஐஐஎம் ஆகிய நிறுவனங்களின் ஆசிரியர் நியமனங்களில் இட ஒதுக்கீடு கொள்கையை நடைமுறைப்படுத்த வேண்டாம் என்று அரசுக்கு வல்லுநர் குழு பரிந்துரை அளித்திருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. சமூகநீதியை ஒழித்துக்கட்டும் இந்தப் பரிந்துரையை அரசு ஏற்கக்கூடாது என விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தினார்.

மமக தலைவர் ஜவாஹிருல்லாவின் அறிக்கையில், இட ஒதுக்கீடு அடிப்படையில் நியமிக்கப்பட்ட ஐஐடியின் ஏராளமான பேராசிரியர்கள் தமது துறையில் உலகம் போற்றும் சாதனைகளைப் படைத்துள்ளார்கள் என்று சுட்டிக்காட்டினார்.

சமூக நீதிக்கு சாவு மணி அடிக்க வேண்டும் என்ற பாஜகவின் திட்டத்தைச் செயல்படுத்தும் நோக்கில் இந்தப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகவும், ஆசிரியர் நியமனத்தில் இட ஒதுக்கீட்டுக் கொள்கையை ஒழிக்க முனையும் பாஜக, நாளை மாணவர்கள் சேர்க்கையிலும் இட ஒதுக்கீட்டை ஒழிக்க முனைவார்கள் என்பதில் சந்தேகமில்லை. பாஜகவின் இந்த சமூக நீதி விரோத கொள்கையை முறியடிக்க சமூக நீதியில் நாட்டம் உள்ள அனைவரும் ஒன்றுசேர்வது காலத்தின் கட்டாயமாகும் எனவும் அழைப்பு விடுத்துள்ளார்.

எழில்

கருத்துகள் இல்லை: