புதன், 16 டிசம்பர், 2020

பாஜவுக்கு எதிராக கூட்டியக்கம்: திராவிட இயக்க தமிழர் பேரவை அறிவிப்பு

சுப. வீரபாண்டியன் அரசியலில் ஏன் ஆன்மிகம்? எதிர்ப்புக் கூட்டியக்கம்! தமிழ்நாட்டின் அரசியல் என்பது எப்போதும் சமூகநீதி அரசியலே! அதனை முன்வைத்தே, ஒரு நூற்றாண்டு காலத்திற்கு முன் இங்கே திராவிட இயக்கம் தோன்றியது. அந்தக் கருத்தியல், திராவிட இயக்கத்திற்கு மட்டுமின்றி, பொதுவுடைமைக் கட்சிகளுக்கும், தலித் இயக்கங்களுக்கும் கூட உரியன!
மதவாத இயக்கமான ஆர்.எஸ்.எஸ். மற்றும் அதன் அரசியல் கட்சியான பாஜக ஆகியன, இப்போது தமிழ்நாட்டிலிருந்து அந்தச் சமூக நீதி அரசியலை அகற்றிவிட்டு, மதவாத, வருண சாதி அரசியலைக் கொண்டுவந்து விட வேண்டும் என்ற நோக்குடன், நச்சு விதைகளை நாடெங்கும் தூவி வருகின்றனர். தாங்கள் நேரடியாக வந்தால், தங்களுக்கு மக்களின் ஆதரவிருக்காது என்னும் உண்மையை உணர்ந்து, வேறு சிலரை, வேறு சில முழக்கங்களோடு முன்னிறுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
திரையுலகில் புகழ் பெற்றவர்களைப் பின்னிருந்து இயக்கும் வேலையைச் செய்துவரும் மதவாதக் கட்சியினர், அதற்கு "ஆன்மிக அரசியல்" என்று ஒரு பெயர் சூட்ட வைத்துள்ளனர். மிக விரைவில், பாரதிய ஜனதா கட்சி போலத் தமிழ்நாட்டில் ஒரு "தமிழக ஜனதா கட்சி" உருவாகலாம்.
தமிழ்நாட்டின் வளர்ச்சி , ஒற்றுமை, அமைதி ஆகியவற்றைச் சீர்குலைத்து, வட நாடுகளைப் போல மதவாத வன்முறை அரசியலை முன்னெடுத்து ஆதாயம் தேட முயற்சிக்கின்றனர்.
எனவே கருத்தியல் அடிப்படையில் அதனை எதிர்ப்பதற்கும், உண்மைகளை மக்களிடம் கொண்டு செல்வதற்கும் ஒரு கூட்டமைப்பு உடனடியாகத் தேவைப்படுகிறது என்பதை உணர்ந்து, ஆதித் தமிழர் பேரவை, திராவிட இயக்கத் தமிழர் பேரவை, திராவிடத் தமிழர் கட்சி, புதிய குரல், இளைஞர் இயக்கம், தமிழ்நாடு திராவிடர் கழகம், திராவிடன் சமூகப் பணிகள் இயக்கம், பெரியார் சிந்தனையாளர் இயக்கம் ஆகிய அமைப்புகள் ஒருங்கிணைந்து, தந்தை பெரியார் நினைவு நாளான 24.12.2020 அன்று, சென்னையில், "அரசியலில் ஏன் ஆன்மிகம்? - எதிர்ப்புக் கூட்டியக்கம்" என்னும் பெயரில் ஒரு கூட்டமைப்பைத் தொடக்கிடத் திட்டமிடப்பட்டுள்ளது. தொடக்க விழாவிற்கான அழைப்பிதழ் விரைவில் உங்களை வந்தடையும்.
ஆன்மிகம் என்னும் பெயரில் அரசியலில், மதவாதத்தையும், இந்துத்துவம் என்னும் பெயரில், ஆட்சியில் மீண்டும் பார்ப்பன ஆதிக்கத்தையும் கொண்டு வந்து கலப்பதை எதிர்ப்பதும், சமூகநீதி அரசியலை முன்னெடுக்கும் திமுக கூட்டணியை வரும் தேர்தலில் முழுமையாக ஆதரிப்பதும் இக்கூட்டியக்கத்தின் நோக்கங்களாக இருக்கும்!
இக்கூட்டியக்கத்தின் நோக்கங்களை ஏற்கும் அமைப்புகளை எங்களுடன் இணைந்து பணியாற்ற அன்புடன் அழைக்கின்றோம்!
-சுப. வீரபாண்டியன்
ஒருங்கிணைப்பாளர்

கருத்துகள் இல்லை: