கவிஞர் பூவை செங்குட்டுவன் |
சிவகங்கைச் சீமையைச் சேர்ந்த கீழப்பூங்குடியில் ராமையா அம்பலம் - லட்சுமி அம்மாள் தம்பதியின் மகனாகப் பிறந்தவர் செங்குட்டுவன். ஊரில் நடக்கும் பாட்டுக் கச்சேரிகளும், நாடகங்களும் செங்குட்டுவனை ஈர்த்தன.
பத்தும் பத்தாதற்கு இவர் குடும்பத்தார் திரையரங்கம் ஒன்றை லீசுக்கு எடுத்து நடத்தி வந்தார்கள். அதில் படங்களை பார்த்து திரைப்பட ஆசையை வளர்த்து வந்தார். வாசகசாலைக்குச் சென்று பல நூல்களைப் படித்தபோது, கலைஞரின் ‘சேரன் செங்குட்டுவன்’ இவரை மிகவும் கவர்ந்தது. முருகவேல் காந்தி என்ற இயற்பெயரை துறந்து, பூவை செங்குட்டுவனாக வலம் வந்தார்.
ஊரில் நாடகங்களில் பாடல்கள் எழுதி, அதில் கதாநாயகனாகவும் நடித்துவந்த செங்குட்டுவன் ஒரு கட்டத்தில் திரை ஆர்வத்தால் சென்னைக்கு புறப்பட்டு வந்தார். கைவசம் ஒரு தொழில் இருந்தால் நல்லது என்று வாடகை மிதிவண்டி நிலையக் கடை நடத்தினார். பல பேர் காசு தரவில்லை, சில பேர் மிதிவண்டியையே திருப்பித் தரவில்லை. மனைவியை ஊரில் கொண்டு போய் விடுவதும், சிறிது நாள் கழித்து அழைத்து வருவதுமாக வாழ்க்கை நகர்ந்து கொண்டிருந்தது.
பின்னணிப் பாடகர் எஸ்.சி. கிருஷ்ணன் தொடர்பால் இரண்டு பாடல்களை இசைத்தட்டுக்காக எழுதினார். அதை ஊருக்கு எடுத்துப் போய் போட்டுக்காட்டி, உறவினர்களின் பாராட்டைப் பெற்றார். மனைவி மக்களைப் பட்டினி போடும் சூழ்நிலை வந்தபோது, விரக்தியின் விளிம்புக்குப் போய், எழுதி வைத்திருந்த கதைகளை எல்லாம் தீயிட்டுக் கொளுத்துவதற்காக தீப்பெட்டியை எடுத்தபோது, ஒருவர் வந்து ‘நீங்கள் கொடுத்த நாடகங்கள் ரெக்கார்டு ஆகிவிட்டன. வந்து பணத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள்’ என்று சொல்லி இருக்கிறார். கிடைத்த இருநூறு ரூபாயில், குடும்பம் பசியில்லாமல் ஓடியிருக்கிறது.
இவர் திருவல்லிக்கேணி அரசு நாடக மன்றத்துக்கு எழுதிய ‘தம்பி தவறி விட்டான்’ நாடகத்தைப் பார்த்த அறிஞர் அண்ணா, இவரைப் பாராட்டியிருக்கிறார். ‘நான் பெற்ற பரிசு’ நாடகத்தில் எழுதிய ‘பாலுக்குப் பாலகன் பசித்து அழும்போது பாழான கல்லுக்கு, பாலாபிஷேகமா...?’ பாடலைக் கேட்டு பாராட்டியிருக்கிறார் எம்.ஜி.ஆர்.
கோவைக்கூத்தன் என்னும் நண்பர் மூலமாக குன்னக்குடி வைத்தியநாதன் அறிமுகமானார். ‘ஓவியன் மகள்’ என்ற அவரது கதைக்கு வசனம், பாடல்களை எழுதினார் செங்குட்டுவன். நாடகப் பாடல்கள் என்றாலும், அவற்றை திரைப்படப் பாடல்களைப் போல ஒலிப்பதிவு செய்து பாராட்டுகளை அள்ளினார் குன்னக்குடி. ஒருமுறை குன்னக்குடி மிகவும் வற்புறுத்தி பக்திப் பாடல் ஒன்றை எழுதச் சொன்னார். செங்குட்டுவன் மிகவும் தயங்கினார். ஏனென்றால் அப்போது திராவிட இயக்கக் கொள்கைகளில் மிக ஈடுபாடு கொண்டவராக இருந்தார்.ஆகவே பக்திப் பாடலை எப்படி எழுதுவது என்று மிகவும் தயங்கினார். ஆனாலும் குன்னக்குடி தொடர்ந்து வற்புறுத்தவே, ஒரு பாடலை எழுதினார். அதுதான்- "திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா, திருத்தணி மலை மீது எதிரொலிக்கும்..."
அந்தப் பாடலால் பெரிதும் கவரப்பட்ட குன்னக்குடியின் வேண்டுகோளின்படி எழுதப்பட்ட இன்னொரு பாடல், ‘ஆடுகின்றானடி தில்லையிலே...’. இரண்டு பாடல்களையும் சூலமங்கலம் சகோதரிகள் தங்களது கச்சேரிகளில் பாடி, கைதட்டல்களைப் பெற்றார்கள். கொலம்பியா நிறுவனம் இசைத் தட்டாக வெளியிட்ட போது அந்தப் பாடல்களுக்கு வரவேற்பு அதிகமானது.
பிலிம்சேம்பரில் நடந்த ஒரு விழாவில் ‘திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால்...’ பாடலை இறைவணக்கப் பாடலாக சூலமங்கலம் சகோதரிகள் பாடினார்கள். விழாவுக்கு வந்திருந்த இயக்குநர் ஏ.பி. நாகராஜனுக்கும், கவியரசர் கண்ணதாசனுக்கும் அந்தப் பாடல் வெகுவாகப் பிடித்திருந்தது.
‘நான் எழுதியிருந்தால் கூட இவ்வளவு சிறப்பாக வந்திருக்காது’ என்று மனப்பூர்வமாக கருத்து சொன்ன கண்ணதாசன், ‘இந்தப் பாடலை ‘கந்தன் கருணை’ படத்தில் இடம் பெறச் செய்யலாம்’ என்று கூறினார். உடனே சம்மதித்தார் ஏ.பி. நாகராஜன். ‘சென்னையிலே கந்தகோட்டமுண்டு...’ என்று செங்குட்டுவன் அதில் ஒரு வரி எழுதி இருந்தார். 'கந்தன் கருணை'கதை நடக்கும் புராணகாலத்தில் சென்னை இல்லை. ஆதலால் ‘சிறப்புடனே கந்தகோட்டமுண்டு...’ என்று திருத்தம் செய்து ‘கந்தன் கருணை’யில் இடம் பெறச் செய்தார் கண்ணதாசன். அந்தப் பாடல் பி. சுசீலா-சூலமங்கலம் ராஜலட்சுமி குரல்களில் ஒலித்தது. நாடகத்துக்காக, கொலம்பியா இசைத்தட்டுக்காக, படத்துக்காக என மூன்று முறை பூவை செங்குட்டுவனுக்கு
பணத்தைப் பெற்றுத் தந்தது அப்பாடல்.
"திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் - முருகா திருத்தணி மலைமீது எதிரொலிக்கும்"என்றால், "முருகன் என்ன வில்லன் சிரிப்பா சிரித்தான் எதிரொலிக்க?'' என்று சென்னை மாவட்ட மத்திய நூலகத்தில் நடந்த ஒரு விழாவில் வில்லிப்புத்தன் என்ற கவிஞர் இதனைக் கடுமையாக விமர்சித்துப் பேசினார். உடனே அங்கிருந்த கவிஞர் சுரதா எழுந்து, "மலைக்கு சிலம்பு என்று ஒரு பெயரும் உண்டு. சிலம்பு என்றால் ஒலித்தல் என்று பொருள். ஒரு மலைக்கும் இன்னொரு மலைக்கும் உள்ள இடைவெளி குறைவாக இருந்து அப்போது சப்தமாகப் பேசினாலும், சிரித்தாலும் எதிரொலிக்கும். அதனால் சிலம்பு என்பது மலைக்குக் காரணப் பெயர். இதெல்லாம் தெரிந்து பேசவேண்டும். தெரியாமல் எதையும் பேசக்கூடாது'' என்று கூறினார்!
இவரது முதல் பாடல் ஏ.பி.என்னின் ‘கந்தன் கருணை’க்காக பதிவு செய்யப்பட்டது. ஆனாலும் முதலில் வெளிவந்த படம் ‘கெளரி கல்யாணம்’. அதில் ‘திருப்புகழைப் பாடப் பாட வாய் மணக்கும்...’ என்று எழுதியதை பி. சுசீலாவும், சூலமங்கலம் ராஜலட்சுமியும் இணைந்து பாடி ஊர் மணக்க வைத்தார்கள். ஏ.பி. நாகராஜன் இயக்கத்தில் குன்னக்குடி இசையில் வெளிவந்த படம், ‘வா ராஜா வா’. அதில் ‘இறைவன் படைத்த உலகை எல்லாம் மனிதன் ஆளுகின்றான்...’ என்று தத்துவமும் பக்தியும் கலந்து எழுதினார் செங்குட்டுவன். பாடி நடித்து, பாட்டுக்குப் பெருமை சேர்த்தார் சீர்காழி கோவிந்தராஜன்.
எம்.ஜி.ஆர். நடிப்பில் வி.சி. குகநாதன் இயக்கத்தில் ‘புதிய பூமி’ என்ற படம் உருவானது. கண்ணதாசன் எழுதி, எம்.எஸ். விஸ்வநாதன் இசையில் மூன்று பாடல்கள் பதிவு செய்யப்பட்ட நிலையில், செங்குட்டுவன் எழுதிய பாடல் ஒன்று எம்.ஜி.ஆரின் பார்வைக்குப் பல கட்டங்களைத் தாண்டிச் சென்றது. ‘யாரந்த கவிஞர்?’ என்று வியந்து கேட்ட எம்.ஜி.ஆர், பாடலைப் படத்தில் சேர்க்கச் சொல்லி விட்டார்.‘நான் உங்கள் வீட்டுப் பிள்ளை... இது ஊரறிந்த உண்மை’ என்ற அந்தப் பாடல் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றதுடன், எம்.ஜி.ஆரின் பிரச்சாரப் பாடலாகவும் பின் அங்கம் வகித்தது.
கலைஞரின் எழுத்தாலும், தி.மு.க.வின் கொள்கைகளாலும் ஈர்க்கப்பட்ட பூவை செங்குட்டுவன் எழுதி, எம்.எஸ்.வி. இசையில் பி.சுசீலா பாடிய ‘கருணையும் நிதியும் ஒன்றாய்ச்சேர்ந்தால் கருணாநிதியாகும்…’ மற்றும் டி.எம்.செளந்தரராஜன் பாடிய ‘கழகம் நல்ல கழகம்…’ பாடல்கள், தி.மு.க தொண்டர்களால் எங்கும், எப்போதும் பொதுக்கூட்டங்களில், மாநாடுகளில் ஒலிக்கச் செய்யப்படுபவை.
‘இராஜராஜ சோழன்’ படத்தில் இவர் எழுதிய ‘ஏடு தந்தானடி தில்லையிலே…’ பாடல், முன்னதாக ‘ஆடுகின்றானடி தில்லையிலே…’ என்று எழுதப்பட்டு, கொலம்பியாவில் இசைத்தட்டாக வந்தது. பிறகு ‘நந்தனார்’ படத்துக்காகவும் பதிவு செய்யப்பட்டது. இதுவும் மும்முறையும் கவிஞருக்குப் பணம் வாங்கிக்கொடுத்த பாடல்!
'கற்பூரம்' படத்தில் இவர் எழுதிய "வணங்கிடும் கைகளில் வடிவத்தைப் பார்த்தால் வேல்போல் இருக்குதடி" மற்றும் அகத்தியர் படத்தில் இவர் எழுதிய "தாயிற் சிறந்த கோயிலுமில்லை தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை" இது போன்ற இன்னும் எண்ணற்ற பாடல்கள் கவிஞர் பூவை செங்குட்டுவன் புகழை உலகுள்ளவரை பறை சாற்றிக் கொண்டே இருக்கும்!<
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக