justic party
ippodhu.com :2015-ஆம் ஆண்டு நீதிக்கட்சியின் நூற்றாண்டாகக் கொண்டாடப்படுகிறது. நீதிக்கட்சியின் முன்னோடி அமைப்பான ‘தென்னிந்திய நல உரிமைச் சங்கம்’ 1916- ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது. சமூக நீதிக்கான அரசியல் இயக்கமாக உருவெடுத்த இந்த அமைப்பின் தோற்றத்தை நீதிக்கட்சியின், சமூக நீதியின் தொடக்கமாக கொண்டாடப்படுகிறது. டாக்டர் சி.நடேசனார், பிட்டி தியாகராயர், டாக்டர் டி.எம்.நாயர் ஆகியோரால் உருவாக்கப்பட்ட நீதிக்கட்சி, தமிழ் சமூகத்தில் பெரும் புரட்சிக்கு வித்திட்ட இயக்கம். அந்த வகையில் நீதிக்கட்சியை நாம் எல்லோரும் நினைவு கூற கடமைப்பட்டிருக்கிறோம்…
* 1912-ஆம் ஆண்டில் மெட்ராஸ் யுனைட்டெட் லீக் என்ற அமைப்பை டாக்டர் சி.நடேசனார் தொடங்கியிருந்தார். பிறகு, இந்த அமைப்பு 1913-ஆம் ஆண்டில் திராவிடர் சங்கம் என்று பெயர் மாற்றம் பெற்றது.
* 1916-ஆம் ஆண்டு நவம்பர் 20-ஆம் தேதி சென்னை வேப்பேரியில் வழக்குரைஞர் எத்திராஜுலு முதலியார் இல்லத்தில் டாக்டர் சி.நடேசனார், பிட்டி தியாகராயர், டாக்டர் டி.எம்.நாயர், ராமராய நிங்கர் (பனகல் அரசர்) உள்ளிட்ட 26 பார்ப்பனர் அல்லாத பிரமுகர்கள் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டு ‘தென்னிந்திய நல உரிமைச் சங்கம்’ இருந்து அரசியல் பங்கெடுப்பில் இணையும் பொருட்டு நீதிக்கட்சி உருவானது.
* ‘பார்ப்பனர் அல்லாதவர்களின் அறிக்கை’ என்பதே நீதிக்கட்சியின் முதல் கொள்கை அறிக்கைக்குக் இவர்கள் இட்ட பெயர். பார்ப்பனரல்லாத மக்களுக்காக சமுதாய நிலை, பொருளாதார நிலை, சம அந்தஸ்து, சம வாய்ப்பு ஆகியவற்றைக் கிடைக்கச் செய்வதே நீதிக்கட்சியின் நோக்கமென அறிக்கை சொன்னது.
* தங்களுடைய கொள்கைகளைப் பரப்ப ஆங்கிலத்தில் ஜஸ்டிஸ் என்ற ஏடும், தமிழில் திராவிடனும், தெலுங்கில் ஆந்திர பிரகாசிகா என்ற ஏடும் தொடங்கப்பட்டன.
* பிரிட்டீஷ் ஆட்சியின் கீழ் ஒருங்கிணைந்து இருந்த சென்னை மாகாணத்தில் 1922, 1923 -ஆம் ஆண்டு நடந்த சட்டப் பேரவைத் தேர்தல்களில் வெற்றி பெற்றது நீதிக்கட்சி.
நீதிக்கட்சியின் ஆரம்பக்கட்ட சாதனைகள்:
* தாழ்த்தப்பட்டவர்களுக்கு வீட்டு மனை வாங்குவதற்குக் கடன் வசதி செய்து தரப்பட்டது.
* ஆதிதிராவிடர்களுக்கு விவசாயத்திற்காக நிலங்களை ஒதுக்குகிறபோது மரங்களின் மதிப்பு நில அளவைக் கட்டணத்தைத் தள்ளுபடி செய்தனர்.
* அருப்புக்கோட்டையில் குறவர் இன இளைஞர்களுக்கு படுக்கை வசதி கொண்ட மன்றம் கட்டித்தர அளிக்கப்பட்ட தொகையை உயர்த்தித் தர உத்தரவு இடப்பட்டுள்ளது.
* மீனவர் நலன் காப்பதற்காக லேபர் கமிஷனர் நியமிக்கப்பட்டார்.
* கள்ளர் சமுதாய முன்னேற்றத்திற்காகப் புதிதாக லேபர் கமிஷனர் நியமிக்கப்பட்டு அவர் சில வழிமுறைகளை உருவாக்கித் தர ஏற்பாடு செய்தனர்.
* நிலத்தில் கட்டடத்தைக் கட்டிக் கொண்டு நில வாடகை செலுத்துவோர்க்கு வாடகைதாரர் குடியிருப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டது. இச்சட்டப்படி நில உரிமையாளர்களால் அப்புறப்படுத்தப் படுவோம் எனும் பயம் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நீங்கியது.
* தஞ்சை கள்ளர் மகா சங்கத்தின் வேண்டுகோளை ஏற்று, அய்ந்து பள்ளிகளைத் தஞ்சை வட்டாரத்தில் திறக்க உத்தரவிடப்பட்டது.
* ஆதிதிராவிடர்களின் முன்னேற்றத்திற்காகப் பொது மக்களின் உதவியையும் உறவையும் பலப்படுத்த அரசு வேண்டுகோள்களை அரசு ஆணையாகப் பிறப்பித்தது.
* குடிப்பழக்கம் உள்ளவர்களின் பழக்கத்தை மாற்ற மக்களை நெறிப்படுத்த ஆணை வெளியிடுதல்.
* ஆதி ஆந்திரர்களுக்கு சந்தை விலையில் நிலங்களை அளித்தல்.
* மலபார் மாவட்டத்தில் மீனவப் பிள்ளைகளுக்குப் பள்ளிகள் திறக்கப்பட்டன.
* சென்னை நடுக்குப்பத்தில் மீனவப் பிள்ளைகளுக்குப் பள்ளிக்கூடம் திறக்கப்பட்டது.
* கிழக்குக் கடற்கரை ஊர்களில் ஆறு இரவுப் பள்ளிகள் திறக்கப்பட்டன. மேலும் மூன்று தொடக்கப் பள்ளிகள் நிறுவப்பட்டன.
* உள்ளாட்சி மன்றங்களில் தகுதியான தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கிடைக்கும்போது அவர்களுக்கு நியமனங்கள் வழங்கப்பட வேண்டும் என உத்தரவு இடப்பட்டு இருந்தது.
* மருத்துவப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் உதவி நிதி பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.
* அரசுப் பள்ளிகளில் வகுப்புரிமை நிலைநாட்டப்பட ஆண்டுதோறும் அறிக்கைகள் வெளியிடப்பட பொதுத்துறை கேட்டுக் கொள்ளப்பட்டது.
* தாழ்த்தப்பட்ட மாணவர்கள், கல்வி கற்பதற்கு கல்வி நிலையங்களில் சேர்த்துக் கொள்வதற்கு ஆணைகள் பிறப்பிக்கப்பட்டன. தடைகள் ஏதாவது செய்யப்படுமானால் உடன் மாற்று ஏற்பாடு செய்யவும் உத்தரவிடப்பட்டு இருந்தது.
* சென்னை மாகாணத்தில் உள்ள தாழ்த்தப்பட்ட மாணவர்கள் எஸ்.எஸ். எல்.சி. தேர்வுக்குப் பணம் கட்டத் தேவையில்லை என ஆணை பிறப்பிக்கப்பட்டு இருந்தது.
* கல்லூரிகளிலும், உயர்நிலைப் பள்ளிகளிலும் படிக்கும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு அரைச் சம்பளம் கட்டினால் போதும் எனச் சலுகை வழங்கப்பட்டு இருந்தது.
* தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு உதவித் தொகையைப் பெறுவதற்கு அவர்களின் எண்ணிக்கையை உயர்த்தியும் கூடுதல் நிதி அளித்தும் சலுகைகள் வழங்கப்பட்டன.
1920-ஆம் ஆண்டு முதல் 1937-ஆம் ஆண்டு வரை 17 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த நீதிக்கட்சி, பல முன்னோடியான சீர்திருத்தங்களைச் செய்தது. இன்றுவரை நாம் அனுபவித்துக்கொண்டிருக்கும் பலவும் நீதிக்கட்சி ஆட்சியின் கொடையே..
நீதிக்கட்சி கொண்டுவந்த அரசாணைகள், சட்டங்கள்
* நீதிக்கட்சி ஆட்சிக்கு வந்த சில மாதங்களிலேயே பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது. (அரசாணை எண். 108 நாள்: 10-05-1921)
* தலித்துகள், பஞ்சமர் என்ற சொல் நீக்கப் பெற்று ஆதிதிராவிடர் என அழைக்கப்பட ஆணை பிறப்பிக்கப்பட்டது. (அரசாணை எண். 817 நாள் 25-3-1922)
* கல்லூரிகளில் மாணவர்களைச் சேர்க்க குழுக்கள் அமைக்க அனுமதித்ததும் நீதிக்கட்சியே (அரசாணை எண். 536 நாள் 20-5-1922)
* கல்வி மறுக்கப்பட்ட பார்ப்பனரல்லாத குழந்தைகள் தொடக்கப் பள்ளிகளில் சேர்க்கப்பட வேண்டும் (அரசாணை எண். 849 நாள் 21-6-1923)
* தாழ்த்தப்பட்ட மாணவர்களைக் கல்வி நிலையங்களில் மிகுதியாகச் சேர்க்க வேண்டும் இரண்டு முறை அரசாணை (அரசாணை எண். (அ) 205 நாள்: 11-2-1924; (ஆ) 1825 நாள்: 24-9-1924)
* இந்து சமய அறநிலையச் சட்டம் கொண்டுவந்தது நீதிக்கட்சி ஆட்சியே. (அரசாணை எண். 29 நாள். 27-01-1925)
* சென்னையிலுள்ள மாநிலக் கல்லூரியில் பார்ப்பனர் அல்லாத மாணவர்களைச் சேர்ப்பதற்கு அரசாணை (அரசாணை எண். (அ) 636 நாள்: 2-5-1922. (ஆ) 1880 நாள் 15-9-1928)
* வகுப்புரிமைக்காகப் பிறப்பிக்கப்பட்ட ஆணை அரசாணை எண்.744 நாள் 13-9-1928.
* சென்னை பப்ளிக் சர்வீஸ் கமிஷனை உருவாக்கியது இந்த அரசே (அரசாணை எண். 484 நாள் 18-10-1929)
* குறிப்பிட்ட இனப் பெண்களை இன்னலுக்கு உள்ளாக்கிய தேவதாசி முறையை ஒழிக்க தேவதாசி ஒழிப்புச் சட்டம் 1930-ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது.
* சென்னை மாநில மத்திய அரசு துறைகளில் வேலை பார்க்கும் பார்ப்பனரல்லாதார் பயன் பெறும் வகையில் நீதிக்கட்சி பிரதமர் 1935இல் பொப்பிலி ராஜா சர். ஆர்.கே. சண்முகம், சர் ஏ. ராமசாமி ஆகியோர் முயற்சியினால் 15.3.1935 இடஒதுக்கீடு அமலுக்கு வந்தது.
தென்னிந்திய ரயில்வே, அஞ்சல் துறை, துறைமுகம் போன்ற மத்திய அரசு ஊழியர்களும் பயனடைந்தார்கள். இதில் பார்ப்பனரல்லாதாரில் பிற்படுத்தப்பட்டவர் தாழ்த்தப்பட்டவர் வகுப்புகளும் பயனடைந்தனர்.
நீதிக்கட்சியில் இறுதி காலக்கட்டம்
1920-ல் காங்கிரசில் சேர்ந்த ஈ.வே.ராமசாமி நாயக்கர் 1925-ல் காங்கிரஸ் தலைவர்களின் வர்ணாஸ்ரமக் கொள்கைகளால் வெறுப்புற்று காங்கிரஸை விட்டு விலகி ‘சுயமரியாதை இயக்க’த்தைத் தொடங்கினார். நீதிக்கட்சியின் சமூக சீர்திருத்த நடவடிக்கைகளை அவர் காங்கிரசில் இருந்தபோதிலிருந்தே ஆதரித்தார்.
1937-ஆம் ஆண்டு நீதிக்கட்சி ஆட்சி போய், முதன்முதலாக காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தபோது இராஜாஜி கொண்டுவந்த இந்தித் திணிப்புக்கு பலத்த எதிர்ப்பு வந்தது. இந்தியை எதிர்த்து நடந்த கிளர்ச்சியில், பெரியார் ஈ.வே.ரா சிறையில் அடைக்கப்பட்டார். அவர் சிறையில் இருக்கும்போது 1938-ல் நீதிக்கட்சியினர் கூடி பெரியாரையே கட்சியின் தலைவராக்கினர்.
நீதிக்கட்சியின் தலைவரான பெரியார்,அரசியல் ஆட்சி அதிகாரத்தில் ஈடுபடாமல் திராவிடர் கழகத்தை ஏற்படுத்தி தன் சமூக சீர்திருத்தக் கொள்கைகளைப் பரப்பினார். ஆனால் திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்த அண்ணா, திராவிட முன்னேற்றக் கழகத்தை உருவாக்கி 1967-ல் காங்கிரஸை வீழ்த்தி ஆட்சியைப் பிடித்தார். அன்று முதல் இன்று வரை திராவிட பாரம்பரியத்தின் வழிவந்த கட்சிகள்தான் தமிழகத்தை ஆள்கின்றன.
ஆனால், தன்னுடைய மூலமான நீதிக்கட்சி சாதித்த சமூக சீர்திருத்த விஷயங்களை
இந்த திராவிடக் கட்சிகள் எந்த அளவுக்கு காப்பாற்றியிருக்கின்றன என்பது
கேள்விக்குறியே!
1930 இடப்புறம் ஐந்தாவது பெரியார் ஈ. வே. ராமசாமி, நடேச முதலியார், பொபிலி அரசர் மற்றும் எஸ். குமாரசாமி ரெட்டியார் | |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக