மேற்கு வங்காளத்தில் ஆட்சியை தக்கவைக்க
வேண்டும் என திரிணாமுல் காங்கிரஸ் முயற்சித்து வரும் நிலையில் இந்த முறை
ஆட்சியை கைப்பற்றிவிட வேண்டும் என்று பா.ஜனதா தீவிர முயற்சியில் ஈடுபட்டு
வருகிறது. இதற்காக ‘மிஷன் பெங்கால்’ என்ற பெயரில் தேர்தல் பணிகளை பா.ஜனதா
தொடங்கி ஊக்குவித்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த
எம்.எல்.ஏ.க்களையும், முக்கிய பிரமுகர்களை பா.ஜனதா தங்கள் பக்கம் இழுத்து
வருகிறது.
அந்த வகையில் திரிணாமுல் காங்கிரஸ்
கட்சியின் மூத்த தலைவரும், அம்மாநில போக்குவரத்துத்துறை மந்திரியுமாக
செயல்பட்டு வந்த சுவேந்து அதிகாரி தனது மந்திரி பதவி மற்றும்
கட்சிப்பொறுப்புகளை கடந்த சில நாட்களுக்கு முன்னர் ராஜினாமா செய்தார்.
அவரைப்போலவே பல திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்களும் தங்கள் பதவியை அடுத்தடுத்து ராஜினாமா செய்தனர். அவர்கள்
அனைவரும் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது.
இந்நிலையில்,
2 நாள் சுற்றுப்பயணமாக பாஜக மூத்த தலைவரும் உள்துறை மந்திரியுமான அமித்ஷா
இன்று மேற்குவங்காளம் வந்துள்ளார். அவர் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு
சென்று தேர்தல் பிரசார நிகழ்ச்சிகளி பங்கேற்று வருகிறார்.
அந்த
வகையில், அம்மாநிலத்தின் பச்சிம் மிடினிப்பூர் மாவட்டத்தில் இன்று பாஜக
தேர்தல் பிரசார கூட்டம் நடைபெற்றது. இந்த பிரசார கூட்டத்தில் அமித்ஷா
பங்கேற்றார்.
இந்த கூட்டத்தில் திரிணாமுல்
காங்கிரஸ் முன்னாள் மந்திரியான சுவேந்து அதிகாரி பங்கேற்றார். அவருடன்
மொத்தம் 10 எம்.எல்,ஏ.க்களும் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.
அந்த
10 எம்.எல்.ஏ.க்களில் 5 பேர் திரிணாமுல் காங்கிரசை சேர்ந்தவர்கள்.
எஞ்சியோர் பிற கட்சிகளை சேர்ந்தவர்கள். இதையடுத்து, சுவேந்து அதிகாரி
மற்றும் 10 எம்.எல்.ஏ.க்களும் அமித்ஷா முன்னிலையில் பாஜகவில்
இணைந்தனர்.
சட்டமன்ற
தேர்தல் நெருங்கி வரும் நிலையில் முன்னாள் மந்திரி சுவேந்தி அதிகாரி
மற்றும் எம்.ஏல்.ஏ.க்கள் பாஜகவில் இணைந்த சம்பவம் மேற்குவங்காள திரிணாமுல்
காங்கிரஸ் கட்சிக்கும் மம்தா பானர்ஜி அரசுக்கும் பெரும் நெருக்கடியை
ஏற்படுத்தியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக